சங்கீதம் 86
நான் உமது நாமத்திற்குப் பயந்திருக்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும். - சங்கீதம் 86:11
நம் இருதயம் ஒருமுகமாக ஒரே கருத்தைப் பற்றி சிந்திப்பது 8 நிமிட நேரம் தான் என்கிறார்கள். இந்த விடியோ யுகத்தில் 8 வினாடிகளுக்கு ஒருமுறை காட்சிகளில் மாற்றங்கள் இருக்கின்றன. ஒரே விஷயத்தை வித்தியாசமான கோணங்களில் 8 நிமிடங்களுக்கு ஒரு முறை மாற்றிப் பார்த்தால் உங்களால் அதிக நேரம் கருத்து ஒருமித்து சிந்திக்க முடியும். பேச்சாளர்கள் அடிக்கடி கதை சொல்வதின் காரணம் இது தான். நாம் எதில் அதிகமாக இருதயத்தை ஒருமுகப்படுத்துகிறோமோ அது தான் நமது வாழ்வில் கிடைக்கும் வெற்றி மற்றும் விளைவுகளின் அளவையும் தரத்தையும் நிர்ணயிக்கின்றது என்று பிரையன் ட்ரேசி என்னும் மேலாண்மை நிபுணர் சொல்கிறார். ஒருவரது உடல் மற்றும் உள்ளத்தின் கவனங்கள் எல்லாம் ஒரே விஷயத்தில் ஒருமுகப்படுத்தப்படும் போது பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான ஆற்றல் அந்த நபருக்கு அதிகம் கிடைக்கிறது என்று நார்மன் வின்சன்ட் பீல் என்னும் எழுத்தாளர் சொல்கிறார். அனைத்து எதிர்ப்புகளையும் தடைகளையும் உடைத்து நொருக்கிச் செல்வது தொடர்ச்சியான தீர்மானமான முயற்சியே ஆகும் என்று க்ளாட் டி பிரிஸ்டோல் என்பவர் சொல்கிறார். இது தான் இருதயத்தை ஒருமுகப்படுத்துவதன் முக்கியத்துவமாகும்.
கடவுளின் பெயருக்குப் பயப்படுதலுக்கும் நமது இருதயத்தை நாம் ஒருமுகப்படுத்த வேண்டும் என்கிறார் தாவீது. கடவுளை நேரில் பார்க்க முடியாத நாம், பல சோதனைகள் மற்றும் பிரச்சனைகளால் இருதயத்தில் குழப்பத்துடன் இருப்போம். ஆகவே நமது இருதயத்தை ஒருமுகப்படுத்த ஆண்டவரின் உதவியைக் கேட்க வேண்டும்.
சிந்தனை : நம் கவனம் கடவுளின் மேல் இருக்கும் போது அவர் கவனமும் நம் மேல் இருக்கும் ஆகவே நாம் வேறு எதற்காகவும் பயப்பட வேண்டியதில்லை.
ஜெபம் : என் தேவனாகிய ஆண்டவரே, உம்மை என் முழு இருதயத்தோடும் துதித்து, உமது நாமத்தை என்றென்றைக்கும் மகிமைப்படுத்துவேன். ஆமென்.
For Audio Tracks visit : DD-Tamil
No comments:
Post a Comment