Thursday, March 29, 2012

March 30, இளநரை

நீதிமொழிகள் 16


நீதியின் வழியில் உண்டாகும் நரைமயிரானது மகிமையான கிரீடம். - நீதிமொழிகள் 16:31


வாலிபத்தின் அழகும் வலிமையும் உடல் சார்ந்ததாகக் கடவுள் திட்டமிட்டிருக்கிறார். ஆனால் வயதானவர்களின் அழகும் பலமும் ஆன்மீகம் சார்ந்ததாக இருக்கின்றது. நித்திய காலத்துக்கும் இருக்கக்கூடிய அழகையும் வலிமையையும் பற்றி நாம் அதிகம் கவனம் செலுத்துவதற்கு ஏற்றவிதமாக, தற்காலிகமான அழகையும் வலிமையையும் நாம் படிப்படியாக இழக்கிறோம். - ராபர்ட்சன் மெக்குயில்கின்.

வயதானவர்களுக்கு நாம் மரியாதை கொடுக்கிறோம். அரசாங்கமும் அவர்களுக்குப் பல சலுகைகளைத் தருகின்றது. ஆனால் வயதானவர்கள் தவறான வழிகளில் பணத்தைச் சேர்க்கும் போது, இளைஞர்களைத் தீமையான வழிகளில் நடத்தும் போது அவர்களது மதிப்பு குறைந்து போய்விடுகின்றது. ஆகவே வயது அதிகமானால் மட்டும் போதாது அதாவது நரைமுடி மட்டும் மதிப்பைத் தருவதில்லை அது நீதியின் வழிகளில் வரும் போது பலரும் அவர்களது ஆலோசனைக்காக வழிகாட்டுதலுக்காகக் காத்திருப்பார்கள். பலர் மதிப்பார்கள்.

பெரியவர்களை மதிப்பது மட்டுமல்லாமல் நாம் பெரியவர்களாகும் போது நம்மையும் பிற்காலத்து இளைஞர்கள் மதிக்கும் அளவுக்கு நாம் நமது வாழ்க்கையை நீதியின் வழிகளில் நடத்த வேண்டும். தற்காலிகமான அழகு மற்றும் உடல் வலிமைகளால் மனம் போன வாழ்க்கை வாழ்ந்தால் நமது வயோதிபகாலம் நமக்கு மகிமையாக இருக்காது. நீதியின் வழியானது நமது மனசாட்சியுடன் பரிசுத்த ஆவியானவரும் வேதவசனங்களும் இணையும் போது நமக்குக் காட்டப்படுகின்றது. பெரியவர்கள் நமக்கு நீதியின் வழிகளைக் கற்றுத் தருவது போல நாமும் வருங்காலத்துக்கு வழிகாட்டிகளாக இருக்க வேண்டும் என்றால் நீதியின் வழிகளில் நடக்க வேண்டும்.

சிந்தனை : இளநரையும், கரும் மை பூசிய முதியவர்களின் நரையும் காலத்தை மீறியதாகும். நரைமுடியே கிரீடம் என்று சொல்லுமளவுக்கு இளமையில் வாழ்ந்து காட்டுவோம்.

ஜெபம் : நித்திய கர்த்தரே, எங்கள் இளமையும் முதுமையும் உம் நீதியின் வழியிலேயே பயணம் செய்ய வழிகாட்டி பலப்படுத்தும். ஆமென்.


For Audio Tracks visit : DD-Tamil

For Older Posts visit : http://dropindeocean.blogspot.com/
--
http://micyell.com
micyellmedia@gmail.com
Mobile : 09994258788

Wednesday, March 28, 2012

March 29, இ எம் ஐ இல்லாத வாழ்க்கை

நீதிமொழிகள் 15


சஞ்சலத்தோடு கூடிய அதிகப்பொருளிலும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப்பொருளே உத்தமம். - நீதிமொழிகள் 15:16


எங்கு பார்த்தாலும் தள்ளுபடியில் பொருட்கள், ஆஃபர்கள், விற்பனை விழாக்கள், கண்காட்சிகள், வீட்டுக்கு வீடு வந்து பொருட்களை விற்பவர்கள், கடன் திருவிழாக்கள் என்று நம்மை அதிகம் வாங்க வைக்கவும், கடனாளிகளாக மாற்றவும் ஒரு கூட்டத்தார் முடிவு கட்டிக் கொண்டு திரிவது போல் தெரிகின்றது. கடவுளுக்கு பயந்த புதிதாகத் திருமணமான ஒரு இளைஞன் ”இ எம் ஐ இல்லாத வாழ்க்கை எனக்கு வேணும்னு ஜெபம் செய்துக்கோங்க அண்ணா” என்று கேட்டுக் கொண்டான். மாதாமாதம் தவணை முறையில் பொருட்களை வாங்குவது தான் இந்த இ எம் ஐ ஆகும். அதிகப் பொருட்களை ஆசைப்பட்டு வாங்கிவிட்டு பின்னர் சம்பளத்தின் ஒரு பெரும் பகுதியை தவணை செலுத்துவதற்கு கொடுத்துவிட்டு கஷ்ட்டப்படுவதைத் தான் சஞ்சலம் என்று நீதிமொழிகள் குறிப்பிடுகின்றது என்று நினைக்கிறேன்.

வரதட்சணையின் மூலம் அதிகப் பொருட்களை வாங்கியோர் பலர் குற்ற மனசாட்சியுடன் இருக்கிறார்கள். பொருட்களால் பையனை வாங்கிவிட்டதாக பெண் வீட்டார் அதிக உரிமை எடுத்துக் கொள்கின்றனர். மேலும் வெளியூர் போகும் போது மனம் எல்லாம் பொருட்கள் பத்திரமாக இருக்குமா என்ற சிந்தனையிலேயே இருப்பது உண்மை. விலையுயர்ந்த பொருட்கள் பழுது இல்லாமல் இருக்க வேண்டுமே என்ற கவலை வேறு இத்துடன் சேர்ந்து கொள்கிறது. கார்களை விக்கிரகங்கள் போல வைத்திருப்பவர்களுக்கோ அதில் கீறல் விழுந்து விடக்கூடாதே என்று மனம் சஞ்சலப்படுகின்றது. எனக்கு இந்தப் பொருட்கள் கிடைக்கவில்லையே என்று மனம் கவலைப்படுகின்றது. ஆனால் உங்களுக்கு இவைகள் எல்லாம் தேவை என்பது உங்கள் பரம பிதாவுக்குத் தெரியும் என்ற வசனத்தை நம்பினால் இருக்கும் பொருட்களுடன் மகிழ்ச்சியாக இருக்கமுடியும். தேவைகளை சரியான நேரத்தில் கடவுள் தருவார் என்ற நம்பிக்கையும் இந்த மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்யும்.

சிந்தனை : அதிகப் பொருட்களைவிட சரியான பொருட்களே முக்கியம்.


ஜெபம் : திருப்தியே இல்லாத இந்த உலக வாழ்க்கையில் போதும் என்கிற மனதுடனே கூடிய தேவபக்தியை என்னில் அதிகப்படுத்தும் ஆண்டவரே. ஆமென்.


For Audio Tracks visit : DD-Tamil

For Older Posts visit : http://dropindeocean.blogspot.com/
--
http://micyell.com
micyellmedia@gmail.com
Mobile : 09994258788

March 28, மூன்றெழுத்துக் கெட்டவார்த்தை

நீதிமொழிகள் 14


பிறனை அவமதிக்கிறவன் பாவஞ்செய்கிறான். - நீதிமொழிகள் 14:21


புதிதாக ஒரு நாய் வாங்கி வந்திருந்தார் அப்பா. அம்மா மகனைப் பார்த்து கிண்டலாகச் சொன்னார், ”டேய் டாம் உனக்கு ஒரு தம்பி கிடைச்சிருக்காண்டா” மகன் சொன்னான், “ஆமாம்மா உங்க முகச்சாயல் அப்படியே தம்பிக்கு இருக்கு”

சினிமாவின் காமெடி மற்றும் நண்பர்களின் கிண்டல்கள் நமக்கு சிரிப்பு மூட்டினாலும், பிறரை அவமதிப்பது அவர்களது மனங்களில் காயங்களை ஏற்படுத்தும் என்பது நமக்குத் தெரிய வேண்டும். நகைச்சுவை என்ற பெயரில் பிறரை அவமதிப்பது கடவுளுக்கு எதிரானது. ஏனென்றால், கடவுள் இந்த உலகத்திலுள்ள ஒவ்வொரு மனிதனையும் தனது சாயலில் உருவாக்கியிருக்கிறார். எனவே ஒரு மனிதனை அவமதிப்பது என்பது அவனை உருவாக்கிய கடவுளை அவமதிப்பது போன்றதாகும். எனவே தான் பிறனை அவமதிக்கிறவன் பாவம் செய்கிறான் என்று வேதம் சொல்கிறது.

இயேசு நமது மதிப்பைப் பற்றிச் சொல்லும் போது, அநேகம் சிட்டுக்குருவிகளைவிட நீங்கள் விசேஷித்தவர்கள். உங்கள் தலைகளிலுள்ள முடிகள் எல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றது, அவைகளின் ஒன்றும் பிதாவின் சித்தம் இல்லாமல் கீழே விழுவதில்லை என்று சொல்கிறார். வேதத்தின் பல வசனங்கள் நாம் கடவுளின் கண்ணின் மணிகள் என்றும், அவரது உள்ளங்கைகளில் வரைந்து வைக்கப்பட்டிருக்கின்றோம் என்றும் அவர் நம்மைப் பெயர் சொல்லி அழைக்கிறவர் என்றும் சொல்கின்றன. இத்தனை மேன்மைகளும் நமக்கு இருப்பதை உணர்ந்தால் நாம் பிறரை அவமதிக்கமாட்டோம். ஏனென்றால் நமக்கு இருக்கும் இத்தனை பாக்கியங்களும் பிறருக்கு இருக்கின்றன. நம்மைப் போல பிறரை நேசிக்கவேண்டும் என்ற கட்டளையில் நாம் நம்மை மதிக்கிறது போல, பிறர் நம்மை மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது போல நாமும் பிறரை மதிக்க வேண்டும் என்று மறைமுகமாகச் சொல்லப்பட்டிருக்கின்றது.

சிந்தனை : பிறரது உடல் அமைப்பு, குறைகள் போன்றவற்றை வைத்து ஜோக் அடிக்காமல் ஒரு வாரம் முயற்சி செய்யுங்கள். பின்னர் அது பழக்கமாகிவிடும்.


ஜெபம் : ஆண்டவரே நான் உம் பார்வையில் சிறப்பான நபர் என்பதை உணரவும், பிறரது சிறப்பை உணர்ந்து அவர்களை மதிக்கவும் கற்றுத்தாரும். ஆமென்.


For Audio Tracks visit : DD-Tamil

For Older Posts visit : http://dropindeocean.blogspot.com/
--
http://micyell.com
micyellmedia@gmail.com
Mobile : 09994258788

Monday, March 26, 2012

March 27, பிரம்புப் பழம்

நீதிமொழிகள் 13


பிரம்பைக் கையாடாதவன் தன் மகனைப் பகைக்கிறான்; அவன்மேல் அன்பாயிருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான். - நீதிமொழிகள் 13:24


பள்ளிகளில் பல ஆசிரியர்கள் மாணவர்களை மிருகத்தனமாக அடிப்பது கண்டிக்கத்தக்கது. ஆனால், கண்டிப்பே இல்லாமல் வளருபவர்களின் எதிர்காலம் கண்டிப்பாக சிறப்பாக இருக்காது. ஆசிரியர்கள் மாணவர்களை அடிக்கக்கூடாது என்று சட்டம் கொண்டு வந்ததும் பல மாணவர்கள் கொண்டாடினார்கள். காலை அசெம்ப்ளியில் செய்தி வாசித்த ஒரு பையன் அந்த செய்தியை மட்டும் ஒரு அழுத்தம் கொடுத்து வாசித்தானாம். ஆனால் பல பெரியவர்கள் தங்கள் ஆசிரியர்களிடமும் பெற்றோரிடமும் பெற்ற அடிகளினால் தான் இன்று நல்ல நிலைமையில் இருப்பதாகச் சொல்கிறார்கள். சிறுவயதின் மதியீனமும், விளையாட்டுத்தனமும் கண்டிப்பினால் தான் சரியாகும்.

மேலும் அடிப்பது அல்லது கண்டிப்பது என்பது சிறுவர்களின் பிற்கால நன்மைக்காகவே தான். கண்டிப்பது கூட அன்பு தான் என்பதால் தான் பிரம்பின் பழமானது இளமையில் கசந்தாலும் வருங்காலத்தில் இனிமையானதாகத் தெரியும். அன்பு என்பது தட்டிக்கேட்காமலேயே வளர்ப்பது அல்ல. நமது பரம பிதாவாகிய கடவுளும் நம்மை சிட்சித்து வளர்க்கிறார் என்று வேதாகமம் சொல்கிறது.


சிந்தனை : அதிக பிரம்புப்பழம் வெறுப்பைத் தரும். பிரம்புப்பழம் இல்லையென்றால் முக்கியமான சத்துக்களும் கிடைக்காமல் போய்விடும்.

ஜெபம் : பரமபிதாவே, கண்டிப்புகளை நன்மை என்று எடுத்துக் கொள்ளவும், தீமையான கண்டிப்புகளில் சோர்ந்து போகாமல் இருக்கவும் உதவி செய்யும். ஆமென்.


For Audio Tracks visit : DD-Tamil

For Older Posts visit : http://dropindeocean.blogspot.com/
--
http://micyell.com
micyellmedia@gmail.com
Mobile : 09994258788