Wednesday, December 19, 2012

உற்சாக காணிக்கை

உற்சாக  காணிக்கை

எஸ்றா : 2

எஸ்றா : 2 : 68 தேவனுடைய ஆலயத்தை அதின் ஸ்தானத்திலே எடுப்பிக்கும்படிக்கு, அதற்காக மன உற்சாகமாய்க் காணிக்கைகளைக் கொடுத்தார்கள்.

போரில் இறந்து போன வீரனின் நினைவாக ஆலயத்தில் காணிக்கை வைக்க நினைத்தனர் அவனது பெற்றோர். அந்த ஆராதனையில் பங்குபெற்ற இன்னொரு போர்வீரனின் தாய் தன் கணவனிடம் "நாமும் அதே அளவு பணத்தை நம் மகனுக்காகக்     கொடுப்போம்" என்றாள். "நம்ம மகன் உயிரோட தானே இருக்கான்?" என்றார் தகப்பன். "அதுக்கு என்ன, கடவுள் நம்ம மகன பத்திரமாப் பாத்துக்கிட்டதுக்காக நன்றிக் காணிக்கை    குடுப்போம்" என்றாள்     அம்மா.

கடவுளுக்குக் காணிக்கையை உற்சாகமாகக் கொடுக்காமல் இருப்பதற்கு சில காரணங்களே இருக்க முடியும். ஆசையில்லை, காசு இல்லை என்பது அதில் முக்கிய காரணங்கள். ஆனால் கடவுளுக்கும் அவரது ஊழியங்களுக்கும் கொடுப்பதற்கு ஆயிரம் காரணங்கள் கொடுக்க முடியும். யூதர்கள் அதிக முக்கியமாகப் போற்றும் எருசலேம் தேவாலயத்தை மீண்டும் கட்டுவது என்பது அவர்களுக்கு ஒரு சிறந்த காரணமாக இருந்தது. இங்கே ஊர்க்கட்டுப்பாடு அல்லது வரி என்று அல்ல, மன உற்சாகமாகக் காணிக்கைகளைக் கொடுத்த மக்களைக் காண்கிறோம்.

 

 

சிந்தனை : நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பரிசுகளைக் கொடுக்க எத்தனையோ தினங்களைக் கொண்டாடுகிறோம். கடவுளுக்கு பரிசு கொடுக்க தினசரியும் சரியான தினங்கள் தாம்.

 

ஜெபம் : இயேசுவே நீர் செய்த தியாகத்துடன் என் காணிக்கைகளை ஒப்பிடவே முடியாது. என்னால் இயன்றதை உற்சாகமாகக் கொடுக்க உதவி செய்யும். ஆமென்.

 

Monday, December 10, 2012

ஏவினார் எழும்பினார்கள்

ஏவினார்  எழும்பினார்கள்

எஸ்றா : 1

எஸ்றா : 1:5 எருசலேமிலுள்ள கர்த்தருடைய, ஆலயத்தைக் கட்டுகிறதற்குப் போகும்படி யூதா பென்யமீன் வம்சங்களின் தலைவரும் ஆசாரியரும் லேவியருமன்றி, எவர்கள் ஆவியை தேவன் ஏவினாரோ  அவர்கள்  எல்லாரும்  எழும்பினார்கள்  

கடவுள் நம்மை குறிப்பிட்ட பணியைச் செய்ய ஏவியிருக்கிறார் என எப்படி தெரிந்து கொள்வது? ஃப்ரடரிக் புச்னர் இரு கேள்விகளைக் கேட்டுப் பார்க்க வேண்டும் என்கிறார். 1) ஒரு வேலையை செய்வதற்கு அதிகம் விரும்புகிறோமா? 2) அந்த வேலை மிக அவசியமானதா? குறிப்பிட்ட செயலைச் செய்வதில் அதிக ஆனந்தம் கிடைக்கிறது என்றால் முதலாவது கேள்விக்குப் பதில் கிடைத்துவிட்டது. ஆனால் சோப்புக்கு விளம்பரத்தை எழுதுவது தான் உங்களுக்கு ஆனந்தம் தருவது என்றால் இரண்டாவது கேள்வியில் அது தவறாகிப் போய்விடுகின்றது. தொழு நோயாளிகளுக்கு மருத்துவம் செய்வது உங்கள் பணி என்றால் இரண்டாம் கேள்விக்கு பதில் கிடைக்கிறது. ஆனால் உங்கள் பணியில் நீங்கள் சலிப்படைந்து இருப்பீர்கள் என்றால் முதலாம் கேள்வியில் பிரச்சனை வருகிறது. முடிவாக, உங்களின் ஆழமான ஆனந்தமும் உலகத்தின் ஆழமான தேவையும் சந்திக்கக் கூடிய பணியே கடவுள் நம்மை அழைத்திருக்கின்ற பணி என்று சொல்லலாம்.

 

தலைவர்கள், ஆசாரியர்கள் மற்றும் லேவியர்கள் கடமையைச் செய்ய வேண்டும்; மற்ற கோத்திரங்களிலிருந்து, கடவுள் யாரையெல்லாம் ஏவினாரோ அவர்கள் எருசலேம் தேவாலயத்தைக் கட்டுவதற்காக எழும்பினார்கள். நமது சூழலிலும் ஊழியங்களில் அதிகத் தேவை இருக்கிறதை சவாலாகக் கேட்டுக் கொண்டே இருந்தாலும் கடவுளால் ஏவப்படுகிறவர்கள் மட்டுமே அவரது பணிக்கென்று செல்வார்கள். நம்முடைய பணி எதுவாக இருந்தாலும், நாம் செய்யக் காத்திருக்கும் பணி எதுவாக இருந்தாலும் அது உங்களுக்கு ஆனந்தத்தைத் தருகிறதா? பிறருக்கு பயனுடையதாக இருக்கும் முக்கியமான பணியா? கடவுளின் பெயர் மகிமைப்படுமா என்று சிந்தித்து முடிவு செய்யுங்கள்.

சிந்தனை : கடவுள் நமது ஆனந்தத்தைக் கொன்று தனது பணியை நிறைவேற்ற விரும்ப மாட்டார்.

ஜெபம் : உமக்காகப் பணி செய்ய விருப்பத்தையும் செயலையும் என்னில் உருவாக்கும் கடவுளே. ஆமென்.

Thursday, December 6, 2012

மாண்புமிகு. மொர்தகாய்

மாண்புமிகு. மொர்தகாய்

எஸ்தர் :10

எஸ்தர் :10 :3 மொர்தெகாய் ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு இரண்டாவதானவனும் , யூதருக்குள் பெரியவனும், ... தன் குலத்தாருக்கெல்லாம் சமாதானமுண்டாகப்  பேசுகிறவனுமாயிருந்தான்.

ஆஃப்ரிக்காவில் ஊழியம் செய்துவிட்டு ஓய்வெடுக்கத் திரும்பிக் கொண்டிருந்தனர் ஒரு வயதான மிஷனரித் தம்பதியினர். அதே கப்பலில் அமெரிக்க அதிபரும் வேட்டையாடிவிட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்தார். மிஷனரி மனைவியிடம் சொன்னார், "நாம் கடவுளுக்காக உண்மையாக பணி செய்து திரும்பி வருகிறோம், நம்மைக் கண்டு கொள்ள ஒருவரும் இல்லை; ஆனால் இந்த மனிதன் வேட்டையாடிவிட்டு வரும் போது இருக்கின்ற மரியாதையைப் பார்த்தால் நாம் எங்கோ தவறு செய்து விட்டதாகத் தோன்றுகின்றது."

அன்று இரவு மீண்டும் மனைவியிடம் புலம்பினார் மிஷனரி. மனைவியும், "என்னிடம் சொல்வதைக் கடவுளிடம் சொல்லுங்களேன்" என்று சொல்ல படுக்கையறைக்குள் சென்று முழங்காலிட்டார் அவர். சிறிது நேரத்தில் மலர்ந்த முகத்துடன் திரும்பி வந்த அவர் சொன்னார், "நாடு திரும்பியதற்கு அதிபருக்குக் கிடைத்த வரவேற்பைப் பற்றிக் கடவுளிடம் சொன்னேன். கடவுள் என்னிடம் 'நீ இன்னும் உன் பரம தேசத்துக்கு வரவில்லையே?' என்று சொன்னது போல இருந்தது."

பலகாலம் அரண்மனை வாசலில் உட்கார்ந்து இருந்த மொர்தெகாய்  உயர்த்தப்பட்டார். கடவுளிடம் உண்மையாக இருப்பவர்களுக்கு இந்த உலகத்திலேயும், அதையும் தாண்டி மறு உலகத்திலும் பலன் உண்டு. இந்த உலகத்தில் பலர் நம்மைக் கண்டுகொள்ளாமல் போனாலும், கடவுள் நம்மைக் கவனித்துக் கொண்டே தான் இருக்கின்றார்.

சிந்தனை : காத்திருக்குதல் எதிர்காலப் பலனை நன்றாக அனுபவிக்க நம்மைத் தகுதிப்படுத்தி நமது உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தும்.

ஜெபம் : உன்னதரே, உம் காலத்துக்குக் காத்திருக்க, உண்மையாக இருக்க உதவும். உயர்ந்தாலும்,  தாழ்த்தப்பட்டாலும், உம்மிடமிருந்து வரும் பலனுக்கு அது ஈடாகாது என்பதை உணர்த்தும். ஆமென்.

Wednesday, December 5, 2012

பூரிம் பண்டிகை

பூரிம் பண்டிகை

எஸ்தர் :9

எஸ்தர் :9:22 அந்நாட்களில் விருந்துண்டு சந்தோஷங்கொண்டாடவும், ஒருவருக்கொருவர் வரிசைகளை அனுப்பவும், எளியவர்களுக்குத் தானதர்மஞ்செய்யவும் வேண்டுமென்று திட்டம்பண்ணினான்.
பூர் என்னும் சீட்டுப் போட்டு யூதர்களைக் கொல்ல சதி செய்தான் ஆமான். அதே நாளில் ஆமானின் கதை முடிந்தது. மக்கள் கடவுளுக்கு நன்றியுள்ளவர்களாகவும், வரும் சந்ததியினர் இந்த சரித்திரத்தை மறந்துவிடாமல் இருக்கவும் ஒரு பண்டிகை உருவானது அது தான் பூரிம் பண்டிகை. பழைய ஏற்பாட்டில் இப்படிப்பட்ட பல பண்டிகைகளை நாம் காணலாம். ஒவ்வொரு பண்டிகைக்கும் காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்த்தால் ஒரு சரித்திரமும் அதிலிருந்து நாம் கற்றுக் கொள்ளவேண்டிய பாடங்களும் இருக்கும்.

மொர்தெகாய் ஒரு ஞானமுள்ள தலைவர் என்பதற்கு இது முக்கிய ஆதாரமாகும். தனது வளர்ப்பு மகள் மூலம் தன் இனம் அழியாமல் காக்கப்பட உதவி செய்தவர். வருங்காலத்திலும் சரித்திரத்தை மறக்காமல் இருக்க மக்களுக்கென்று ஒரு பண்டிகையை உருவாக்கினார். தங்களைக் காப்பாற்றிய கடவுளை மறந்து போகாமல் இருக்க இந்தப் பண்டிகையை யூதமதத்தின் அதிகாரப்பூர்வமான பண்டிகையாக மாற்ற அரசன் மூலமாகவே நாடு முழுவதற்கும் கடிதங்களை அனுப்பச் செய்கிறார்.

நம் சமுதாயத்திலும் திருச்சபையிலும் கொண்டாடப்படுகின்ற  திருவிழாக்களும் பண்டிகைகளும் இப்படிப்பட்ட சரித்திரத்தைக் கொண்டவைகளே. கொண்டாட்டத்தின் தற்கால அம்சங்களை மட்டும் பார்க்காமல், அஸ்திபாரத்தைக் கண்டு அதன் மூலம் வருங்காலத்துக்கான பாடங்களையும் படித்துக் கொள்ள வேண்டும்.

சிந்தனை : பண்டிகைகளின் தின்பண்டங்களை விட துவக்கத்தின் சம்பவங்களைக் கவனித்தால் அர்த்தத்துடன் கொண்டாடலாம்.

ஜெபம் : கர்த்தாவே உம்மில் மகிழவும், புரிந்து போற்றவும் நீர் தந்திருக்கின்ற பண்டிகைகளுக்காக உமக்கு நன்றி. கொண்டாட்டங்களின் நடுவிலேயும் உம்மையே முதலாவதாக வைத்திருக்க வழிநடத்தும். ஆமென்.

Sunday, December 2, 2012

என் ஜனம்

என் ஜனம்

எஸ்தர் : 8

எஸ்தர் : 8 : 6  என் ஜனத்தின்மேல் வரும் பொல்லாப்பை நான் எப்படிப் பார்க்கக்கூடும்? என் குலத்துக்கு வரும் அழிவை நான் எப்படிச் சகிக்கக்கூடும் ?

கடவுளுக்குக் கீழ்ப்படிந்து அவரது வார்த்தையைப் பரவச் செய்ய வேண்டும். ஆனால் நான் கிறிஸ்தவனாக இருப்பதற்காகத் துன்புறுத்தப்பட்டாலும் நேபாளத்தில் இருக்கும் நானும் மற்ற கிறிஸ்தவர்களும் எங்கள் நாட்டு குடிமக்களாக இருப்பதில் பெருமைப்படுகிறோம். நாங்கள் எங்கள் நாட்டை நேசிக்கிறோம். ஆனால் கடவுளை அதைவிட அதிகம் நேசிக்கிறோம். என்று தன்னை சந்திக்க வந்திருந்த மேலை நாட்டு ஊழியத்தலைவர் ஒருவரிடம் கூறினார் ஒரு நேபாள போதகர். நமது நாட்டுப்பற்றும் தேவபக்தியும் சரியான விகிதத்தில் கலக்கப்படும் போது எஸ்தரைப் போன்ற சிறந்த இந்தியக் கிறிஸ்தவத் தலைவர்கள் கிடைப்பார்கள்.

எஸ்தர் அகாஸ்வேரு என்னும் மேதிய பெர்சிய அரசனின் மனைவியாக இருந்தாலும் அவள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட யூத இனத்தில் பிறந்தவள். அவளுக்கு இப்போது இரண்டு நாட்டு மக்கள் மேலும் பொறுப்பு இருக்கின்றது. மேலும் கடவுளுக்குப் பயந்து, அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொறுப்பு அவளது பாதுகாப்பை விட முக்கியமானதாக இருக்கின்றது. யூதமக்கள் மொத்தமாக அழிந்தால் அவளும் யூத இனத்தவளாக இருப்பதால் அவளுக்கும் வருங்காலாத்தில் பாதுகாப்பு இல்லை. இந்த சூழலில், அநியாயமாக ஒரு இனமே படுகொலை செய்யப்படும் போது எஸ்தரால் எப்படி அமைதியாக இருக்க முடியும்?

சிந்தனை : அநியாயமாக அழிக்கப்படும் மக்களுக்காக நாம் ஜெபிக்க மட்டும் தான் செய்கிறோமா? ஆதரவுக் குரல் எழுப்புகிறோமா? நமது கடமையை நாம் செய்வோம். காரணமானவர்கள் கடவுளுக்குக் கணக்குக் கொடுப்பார்கள். கடவுள் தமது சித்தத்தைச் செய்வார்.

ஜெபம் : தேவனே என் மக்கள் அநியாயமாக துன்பம் அனுபவிக்கும் போது நான் என்னால் முடிந்ததைச் செய்ய எனக்கு தைரியத்தையும் ஆற்றலையும் தாரும். ஆமென்.

தன் வினை

தன் வினை

எஸ்தர் :7

எஸ்தர் :7 :10 ஆமான் மொர்தெகாய்க்கு ஆயத்தம்பண்ணின தூக்குமரத்தில் ஆமானையே தூக்கிப்போட்டார்கள்

போலந்து நாட்டில் அறுபது வயதான செஸ்லாவ் என்பவர் திருடர்களுக்கு அதிகம் பயந்ததால் நாட்டுத் துப்பாக்கிகளைக் கொண்டு தானாகவே திருடர்களைத் தாக்குவதற்கான பொறிகளைச் செய்து வைத்திருந்தார். பத்து இடங்களில் இப்படி அமைப்புகளைச் செய்து வைத்திருந்த அவர் தனது கார் நிறுத்தும் இடத்தில் இருந்த துப்பாக்கி வெடித்து இறந்து போனார். மேலும் அவர் வீட்டில் இருபத்தெட்டு இடங்களில் இப்படிப்பட்ட திருடர்களைத் தாக்கும் அமைப்புகளை வைத்திருந்தாராம் அவர்.

வாய்மையே வெல்லும் என்றாலும் இந்த உலகத்தில் நடக்கும் பல அநீதிகளும், அநியாயக்காரர்களின் அட்டகாசங்களும் நமக்கு நீதியின் மேலும் கடவுள் மேலும் உள்ள நம்பிக்கையை அசைக்கத்தான் செய்கின்றன. ஆனால் உலகத்தில் நீதி முற்றிலுமாக அழிந்து போய்விடவில்லை. நேர்மையான அதிகாரிகள் மற்றும் மக்களைப் பற்றி அடிக்கடி நாம் கேள்விப்படுகிறோம். அநீதிக்கு தண்டனை கிடைப்பது அரிதாக இருந்தாலும் நேர்மையானவர்களுக்கு அது அவ்வப்போது உற்சாகத்தைக் கொடுத்துக் கொண்டு இருக்கின்றது.

மொர்தெகாய்க்கு ஆமான் ஆயத்தம் பண்ணின தூக்குமரத்தில் அவனே தொங்கி நீதியின் கடவுளின் செயல்பாட்டுக்கு உதாரணமாக ஐம்பது முழ உயரத்தில் ஆடிக்கொண்டிருந்தான். இந்த உலகத்தில் நாம் நேர்மையாக இருப்பதுடன், அரசாங்க அதிகாரிகள், நீதிபதிகள் மற்றும் அரசியல்வாதிகள் நேர்மையாக இருக்க வேண்டும் என்று அவர்களுக்காக ஜெபிக்க வேண்டியதுவும் நமது கடமை என்று வேதம் சொல்கிறது.

சிந்தனை : உடனடி நீதி கிடைக்காததால் அநீதி பெருகுகின்றது. ஆனால் அவ்வப்போது கிடைக்கும் நீதி நேர்மையானவர்களைத் தேற்றி நம்பிக்கை கொடுக்கின்றது.

ஜெபம் : பழிவாங்குதல் எனக்குரியது என்றவரே, என் வாழ்வில் நடக்கும் அநீதிக்கு பதில் தர உம்மையே நம்பியிருக்கிறேன். என்னை தொடர்ந்து  நேர்மையாக வாழ பலப்படுத்தும். ஆமென்.