Saturday, June 30, 2012

July 1, கர்த்தரின் பொறுமை

எரேமியா 15


நான் பொறுத்துப் பொறுத்து இளைத்துப்போனேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். - எரேமியா 15:6


தனது ஆறுவயது மகனுடன் கூட்டம் அதிகமாக காத்திருக்கும் மருத்துவரின் அலுவலகத்துக்குப் போனாள் அம்மா. காத்திருந்த நேரத்தில் மகன் அம்மாவைப் பலவிதமான கேள்விகளால் துளைத்து எடுத்துவிட்டான். அரைமணி நேரத்தில் மனித குலத்துக்குத் தெரிந்திருக்கும் அத்தனை துறைகளைப் பற்றியும் கேள்விகளைக் கேட்டு முடித்திருந்தான். தாய் எல்லா கேள்விகளுக்கும் கவனமாகவும் பொறுமையாகவும் பதில் சொல்லிக் கொண்டிருந்ததை காத்திருந்த மற்றவர்களும் ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். கடைசியாகக் கடவுளைப் பற்றிய கேள்வி வந்தது. ”கடவுளுக்கு களைப்பே வராதா?” அம்மா பதில் சொன்னாள், “கடவுள் அன்பாகவே இருக்கிறார். அன்புக்கு எப்போதுமே களைப்பு வருவதில்லை.” உடன் இருந்தவர்களுக்கு அந்தத் தாயின் அன்பையும் கடவுளின் அன்பையும் பற்றிய புதிய புரிதல் கிடைத்தது.

கடவுள் பொறுத்துப் பொறுத்து இளைத்துப் போனதாகச் சொன்னாலும், மனம் வருந்துகிற எரேமியாவைப் பார்த்து இவ்வாறு சொல்கிறார், “நீ திரும்பினால் நான் உன்னைத் திரும்பச் சீர்ப்படுத்துவேன்; என் முகத்துக்குமுன்பாக நிலைத்துமிருப்பாய்; நீ தீழ்ப்பானதினின்று விலையேறப்பெற்றதைப் பிரித்தெடுத்தால், என் வாய்போலிருப்பாய்; நீ அவர்களிடத்தில் திரும்பாமல், அவர்கள் உன்னிடத்தில் திரும்புவார்களாக. உன்னை இரட்சிப்பதற்காகவும், உன்னைத் தப்புவிப்பதற்காகவும் நான் உன்னுடனே இருக்கிறேன்.”

கடவுளின் அன்பு நம்மிடம் இன்னும் களைப்படையாமல் பொறுமையாக இருக்கின்றது. ஆனால் அவரது நீதி நம்மைத் திரும்பி அவரிடம் வரும்படி அழைக்கின்றது. அவரது பொறுமையை நமது பாக்கியம் என்று நினைத்து அவரிடம் சீக்கிரத்தில் திரும்புவது அவரது நீதியின் தண்டனையிலிருந்து நம்மைத் தப்புவிக்கும்.


சிந்தனை : கடவுள் அதிகப் பொறுமையாக இருப்பதால் நாம் அதிக விரைவாய் அவரிடம் திரும்ப வேண்டும்.


ஜெபம் : கர்த்தாவே உமது பொறுமைக்காக நன்றி. உமது பொறுமையை எனது தீய வழிகளுக்கு சாதகமாக வைத்துக் கொள்ளாமல் உம்மிடம் திரும்பி வர எனக்கு உதவி செய்யும். ஆமென்.


For Audio Tracks visit : DD-Tamil

For Older Posts visit : http://dropindeocean.blogspot.com/
--
http://micyell.com
micyellmedia@gmail.com
Mobile : 09994258788

June 30, குடுகுடுப்பை

எரேமியா 14


அவர்கள் கள்ளத் தரிசனத்தையும், கள்ள சகுனத்தையும், இல்லாத விசேஷத்தையும், தங்கள் இருதயத்தின் கபடத்தையுமே, உங்களுக்குத் தீர்க்கதரிசனமாய்ச் சொல்லுகிறார்கள். - எரேமியா 14:14


ஒரு காவல் அதிகாரி எதிர்காலம் பற்றி குறி சொல்லி, பிறரை ஏமாற்றும் பலரைக் கைது செய்திருக்கிறார். அவர் சொல்கிறார், “நான் நூற்றுக்கணக்கான குறிசொல்கிறவர்களை சந்தித்திருக்கிறேன். அவர்கள் ஆயிரக்கணக்கில் என்னைப் பற்றியும் என் எதிர்காலம் பற்றியும் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அவர்களை கைது செய்யப் போயிருக்கும் போலீஸ் என்று யாரும் என்னைப் பற்றிச் சொல்லவில்லை.”

கடவுளின் பெயரால் கள்ளத் தீர்க்கதரிசனம் சொல்கிறவர்களின் முடிவு பயங்கரமானதாக இருக்கும் என்று சொல்லும் கர்த்தர், அவர்களிடம் போய் குறி கேட்டு, தங்கள் எதிர்காலத்தைத் தெரிந்து கொள்ள விரும்புகிறவர்களும் அவர்களது ஆலோசனைகளின்படி செய்கிறவர்களும் அப்படியே பயங்கரமான முடிவுக்குள் போவார்கள் என்று சொல்கிறார்.

மூன்று காலங்களையும் அறிந்து, எல்லாக் காலங்களிலும் தனது அதிகாரத்தைக் கொண்டிருக்கும் கடவுளை மறந்து, தங்களுக்கு விருப்பமானவற்றையே தீர்க்கதரிசனமாகக் கேட்டு மகிழ விரும்பும் போலி பக்தர்களையும், அவர்களுக்கு ஏற்ற தீர்க்கதரிசனம் சொல்லி தங்கள் பிழைப்பை நடத்துகிற போலி தீர்க்கதரிசிகளும் கடைசியில் கடவுளின் தண்டனையை சந்திக்க வேண்டியிருக்கும்.


சிந்தனை : குறி சொல்லுதலுக்கும் உண்மையான தீர்க்கதரிசனத்துக்கும் உள்ள வித்தியாசம் எதிர்காலத்தில் தான் தெரியும்.


ஜெபம் : கர்த்தாவே, எங்கள் தீமையையும் எங்கள் பிதாக்களின் அக்கிரமத்தையும் நாங்கள் அறிந்திருக்கிறோம்; உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தோம். உம்முடைய நாமத்தினிமித்தம் எங்களை அருவருக்காதிரும், உமது மகிமையின் சிங்காசனத்தைக் கனவீனப்படுத்தாதேயும்; எங்களோடே உமக்கு இருக்கிற உடன்படிக்கை அபத்தமாகாதபடி எங்களை நினைத்தருளும். ஆமென்.


For Audio Tracks visit : DD-Tamil

For Older Posts visit : http://dropindeocean.blogspot.com/
--
http://micyell.com
micyellmedia@gmail.com
Mobile : 09994258788

June 29, தம்பட்டம் தவறு

எரேமியா 13


நீங்கள் செவிகொடுத்துக் கேளுங்கள்; மேட்டிமையாய் இராதேயுங்கள்; கர்த்தர் விளம்பினார். - எரேமியா 13:15


பெருமை என்பது பெரியவர்களையும் சிறுமைப்படுத்திவிடும். இன்டியானாபோலிஸ் நியூஸ் என்னும் பத்திரிக்கையின் நிறுவனராக ஜான் ஹாலிடே என்பவர் ஒரு நாள் தனது பத்திரிக்கையில் சாதாரண வார்த்தை ஒன்றில் எழுத்துப்பிழை செய்துவிட்டதைக் கண்டு அதிக எரிச்சல் அடைந்தார். Height என்ற வார்த்தை (H-e-i-g-h-t) Hight என்று எழுதப்பட்டிருந்தது (H-e-i-g-h-t). யார் அந்த தவறைச் செய்தது என்பதைக் கண்டுபிடிக்க அலுவலகத்திலுள்ள அனைவரையும் கேள்வி கேட்டுத் துளைத்தார். விசாரணையில் ஜான் ஹாலிடே தான் அதை எழுதி அதற்கு ப்ரூஃப் ரீடிங் என்னும் பிழைதிருத்தத்தையும் செய்தவர் என்பது தெரிய வந்தது. நான் அப்படி எழுதியிருந்தால் அது தான் சரியாக இருக்கும் என்று சொன்னவர் அடுத்த முப்பது வருடங்களாக தனது பத்திரிக்கையில் அதையே சரியானது என்று பின்பற்றினார். முப்பது வருடங்களும் Height என்ற வார்த்தை (H-e-i-g-h-t) Hight என்று தான் அந்தப் பத்திரிக்கையில் உச்சரிக்கப்பட்டது.

பெருமை என்பது நம்மையும் மூடர்களாக்கி மற்றவர்களையும் மூடர்களாக்குவதுடன், கடவுளுக்கு நம்மை எதிரிகளாக்கிவிடும். இடுப்பில் கச்சையாக மதிப்புடன் இருந்த ஒரு துணி பல நாட்களுக்குப் பின் கெட்டுப் போனது போல பெருமையுள்ள மக்களும் கெட்டுப் போவார்கள் என்ற செய்தியை எரேமியா நடித்துக் காட்டினார். நீங்கள் இதை கேளாமற்போனீர்களானால், என் ஆத்துமா மறைவிடங்களில் உங்கள் பெருமையினிமித்தம் துக்கித்து, கர்த்தருடைய மந்தை சிறைப்பட்டுப்போனதென்று என் கண் மிகவும் அழுது கண்ணீர் சொரியும். என்று மக்களிடம் சொல்லி, அவர் அந்தகாரத்தை வரப்பண்ணுவதற்கு முன்னும், இருண்ட மலைகளில் உங்கள் கால்கள் இடறுவதற்கு முன்னும் ... அந்தகாரமும் காரிருளுமாக மாறப்பண்ணுவதற்கு முன்னும், உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு மகிமையைச் செலுத்துங்கள். என்று அறிவுரையும் சொல்கிறார்.


சிந்தனை : கடவுளுக்கு மகிமையைச் செலுத்தும் தொழுகையானது நமது பெருமையை அழிக்கும்.


ஜெபம் : துதிக்குப் பாத்திரரே, உம்மைத் துதித்து என் பெருமைகளை ஒழிக்க என் நாவைப் புதுப்பியும். ஆமென்.


For Audio Tracks visit : DD-Tamil

For Older Posts visit : http://dropindeocean.blogspot.com/
--
http://micyell.com
micyellmedia@gmail.com
Mobile : 09994258788