Sunday, September 16, 2012

September 17, அடித்தால் படிப்பாய்

எரேமியா 22


நீ சுகமாய் வாழ்ந்திருக்கையில் நான் உனக்குச் சொன்னேன், நீ கேளேன் என்றாய், உன் சிறுவயதுமுதல் நீ என் சத்தத்தைக் கேளாமற்போகிறதே உன் வழக்கம். - எரேமியா 22:21


நமது அரசாங்கம் ஆசிரியர்கள் மாணவர்களை அடிக்கக்கூடாது என்று சட்டம் இயற்றியது. அடுத்த நாள் ஒரு பள்ளியில் மாணவர் காலை கடவுள் வணக்கத்துக்காகக் கூடி வந்தபோது செய்தியை வாசித்த ஒரு மாணவன் அந்த செய்தியை ஒருவிதமான வெற்றிகரமான குரலில் வாசித்தானாம். சில ஆசிரியர்கள் எனக்கு என்ன வந்தது என்று மாணவர்கள் எப்படியும் போகட்டும் என்று விட்டுவிட்டனர். ஆனால் சில ஆசிரியர்கள் மாணவர்களின் நலனுக்காக அவர்களைத் தண்டிக்கத்தான் செய்வோம் என்று வேறு வழிகளில் தண்டனைகளைக் கொடுத்துக் கொண்டு தான் இருக்கின்றார்கள். ஆனால் என் நண்பன் ஒருவர் தனது கால்களில் தனது பள்ளிக்காலப் பிரம்பு அடியால் கிடைத்த தழும்பு ஒன்றை இன்று நினைவு படுத்தி அன்றைய பிரம்படி தான் என்னை இன்று நல்ல நிலையில் வைத்திருக்கிறது என்று சொன்னார்.

மகிழ்ச்சியும் சுகமுமாக இருக்கும் போது கற்றுக் கொள்வதைவிட துக்கமும், பிரச்சனையும் இருக்கும் போது கற்றுக் கொள்ளும் பாடங்கள் அதிக காலம் நமது மனதில் நன்றாகப் பதிந்துவிடும் என்பது உண்மையாகும். இஸ்ரவேலர் கடவுளின் அற்புதங்களால் சுகமாக வாழ்ந்திருந்தபோது கடவுளின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமல் போனார்கள். தகப்பனின் சத்தத்தைக் கேட்காத குழந்தைக்கு ஒரு சில எச்சரிப்புகளுக்குப் பின் அடி கிடைப்பது தவிர்க்க முடியாததாகும். ஆகவே தான் நாம் எப்போதுமே கடவுளை மறக்காமல் நன்மையோ தீமையோ அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். நாம் நன்றாக இருக்கும் போது என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி... அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே என்று சொல்லவும், பாடுபடும் போது, நான் உபத்திரவப்பட்டது நல்லது அவைகளால் உமது பிரமாணங்களைக் கற்றுக் கொள்கிறேன் என்று சொல்லவும் நாம் கற்றுக் கொள்ளவேண்டும்.


சிந்தனை : தந்தையின் சத்தம் விளையாட்டின் நடுவே நம் காதில் விழாது. ஆனால் முதுகிலோ காலிலோ விழும் அடியானது நம் காதுகளைத் திறந்துவிடும்.


ஜெபம் : ஆண்டவரே எனது சந்தோஷத்திலும் துக்கத்திலும் உம் சத்தத்தைக் கேட்கும் செவிகளைத் தாரும். உணர்வைக் கூர்மையாக்கும். ஆமென்.


For Audio Tracks visit : DD-Tamil

For Older Posts visit : http://dropindeocean.blogspot.com/
--
http://micyell.com
micyellmedia@gmail.com
Mobile : 09994258788

Thursday, September 13, 2012

September 14, மாற்றம் மாறும்

எபிரெயர் 13


இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். - எபிரெயர் 13:8


இந்த உலகம் ஒழுங்காக வேண்டுமானால் என் நாடு முதலாவதாக மாற்றப்பட வேண்டும். எனது நாடு மாற என் சொந்த ஊர் மாற வேண்டும். என் ஊரில் கட்டுப்பாடு ஏற்பட என் குடும்பம் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். என் குடும்பம் மாற்றம் பெற வேண்டுமானால் நான் தான் முதலாவதாக மாற வேண்டும். என்று சொல்கிறார் ஒரு சீன நாட்டுத் தளபதி.

கடவுள் கடவுள் தான் அவர் மாறாமல் இருக்க வேண்டும். மக்கள் தீமையிலிருந்து நன்மைக்கு மாறுகிறவர்களாக, நன்மையிலும் புதிதாக மாறுகிறவர்களாக இருக்க வேண்டும். இயேசு தமது குணங்களில், தன்மையில், வல்லமையில், மகிமையில் மாறாதவர். அவர் நித்தியத்துக்கும் ராஜா. இந்த உலகத்தின் தலைவர்கள் வயதாகும் போது அல்லது பதவியில் ஏறிய பின் மாறிவிடுவார்கள். யாரை எப்போது எவ்வளவு நம்பலாம் என்பதில் நமக்கு எப்போதுமே குழப்பம் இருந்து கொண்டே தான் இருக்கின்றது. ஆனால் இயேசுவோ தனது குணங்களிலும், வல்லமையிலும் மாறாதவராகவே இருக்கின்றார். அதனால் தான் நாம் அவரை துணிந்து நம்பலாம். அவரால் செய்ய முடியாதது ஒன்றுமில்லை. ஆகவே அவரது உதவிக்காக நாம் காத்திருக்கலாம். அவர் உலகத்தில் வாழ்ந்த காலத்தில் என்னவெல்லாம் செய்தாரோ அவற்றையெல்லாம் இன்றும் செய்வதற்கு வல்லவராக இருக்கின்றார். இதற்கு முந்திய வசனம் ”தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்” என்று சொல்கிறது, நம் தலைவர்களிலும் பலரது போதனைகளும் நடக்கையின் முடிவுகளும் வித்தியாசமாக இருந்திருக்கலாம். அவர்களது விசுவாசத்தை மட்டுமே நாம் பின்பற்ற ஆலோசனை கொடுக்கப்படுகின்றது.


சிந்தனை : நல்ல வாழ்க்கை வேண்டுமென்றால் நாம் மாற வேண்டும்; நாம் மாற வேண்டுமென்றால் நமக்கு மாறாத ஆண்டவர் இருக்க வேண்டும்.


ஜெபம் : மாறாத இயேசுவே, நான் என் வாழ்வில் நல்ல மாற்றங்களை உருவாக்க என்னை உருவாக்கும்.; ஆமென்.


For Audio Tracks visit : DD-Tamil

For Older Posts visit : http://dropindeocean.blogspot.com/
--
http://micyell.com
micyellmedia@gmail.com
Mobile : 09994258788

Monday, September 10, 2012

September 11, ஆதியந்தம்

எபிரெயர் 12


விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம். - எபிரெயர் 12:1


யோபுவின் வாழ்க்கைக்கு ஒப்பான ஒருவரைப் பற்றி பிலிப் யான்சி என்னும் எழுத்தாளர் அறிந்து கொண்டார். அவர் பெயர் டக்ளஸ். அவரைப் பெரும் பரிசுத்தவான் என்று சொல்லமுடியாது என்றாலும் தெய்வீக உண்மைத் தன்மை அவரிடம் இருந்தது. அதிக வருமானம் தரும் மனோதத்துவப் பணியை விட்டுவிட்டு ஊழியத்தைத் தேர்ந்தெடுத்தார் அவர். அவரது மனைவிக்கு முன் புற்றுநோயால் மார்புடன் நுரையீரலும் அகற்றப்பட்டது. குடித்துவிட்டு கார் ஓட்டிய ஒருவன் அவர்கள் காரில் மோதியதால் அவரது மகளுக்கு முகத்தில் பெரும் காயங்களும், கையில் எலும்பு முறிவும் ஏற்பட்டது. டக்ளஸ் தலையில் ஏற்பட்ட காயத்தால் அடிக்கடித் தலைவலி வந்து கொண்டிருந்தது. பார்வையும் பாதிக்கப்பட்டது. வேலையிலும் ஒன்று அல்லது இரண்டு பக்கங்களுக்கு மேல் வாசிக்க முடியாமல் போனது. கடவுள் மேல் ஏமாற்றம் ஏற்பட்டதா என்று கேட்டதற்கு டக்ளஸ் இவ்வாறு சொன்னார், “எனக்கு கடவுள் மேல் எந்த வருத்தமும் இல்லை. எனது மனைவியின் நோய் மற்றும் எங்களுக்கு ஏற்பட்ட விபத்து ஆகியவற்றின் மூலம் கடவுளையும் வாழ்க்கையையும் குழப்பிக் கொள்ளக்கூடாது என்று கற்றுக் கொண்டேன். எனக்கு ஏற்பட்ட பாடுகளால் வருத்தப்படத்தான் செய்கிறேன். எனது துக்கத்தையும் கோபத்தையும் அநீதியான உலகத்தைத் திட்டுவதன் மூலம் தான் தணித்துக் கொள்கிறேன். ஆனால் எனக்கு ஏற்பட்ட பாடுகளைப் பற்றிய கடவுளின் உணர்ச்சியும் என்னுடைய உணர்ச்சியைப் போலத்தான் இருக்கும் என்று நான் விசுவாசிக்கிறேன். அவர் என் பாடுகளுக்காகத் துக்கத்துடனும் கோபத்துடனும் தான் இருக்கிறார்.”

நமது வாழ்வில் விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவரும் இயேசுவாக இருப்பதால் நமது பாடுகளிலும் அவரை நம்பி ஓடலாம்.


சிந்தனை : விசுவாசம் நமது இரட்சிப்பில் துவக்கப்படுகின்றது. இயேசுவின் இரண்டாம் வருகையில் முடிக்கப்படுகின்றது.


ஜெபம் : கர்த்தாவே உம்மை நோக்கி பொறுமையாக ஓட எனக்கு பெலம் தாரும். ஆமென்.


For Audio Tracks visit : DD-Tamil

For Older Posts visit : http://dropindeocean.blogspot.com/
--
http://micyell.com
micyellmedia@gmail.com
Mobile : 09994258788

Sunday, September 9, 2012

September 10, ஸ்பெஷல்

எபிரெயர் 11


விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத்தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும். - எபிரெயர் 11:6


கடவுள் இல்லை என்று சொல்லும் நாத்திகர்களுக்கும் கூட விசுவாசம் தேவைப்படத்தான் செய்கிறது. நாத்திகராக இருந்து பின்னர் கிறிஸ்துவையும் கிறிஸ்தவத்தையும் ஆதரித்துக் காத்துப் பேசிய சி.எஸ் லூயிஸ் இவ்வாறு சொல்கிறார் : ”கடவுளுக்கு எதிராக நான் வைத்திருந்த வாதம் இது தான் - உலகமானது மிகவும் கொடூரமானதாகவும் அநீதி நிறைந்ததாகவும் இருக்கின்றது. ஆனால் நியாயம் அநியாயம் என்பவற்றைக் குறித்த எண்ணம் எனக்குள் எப்படி வந்தது? ஒரு நேரான கோடு இல்லாமல் இன்னொரு கோடு கோணலானது என்று யாரும் சொல்ல முடியாது. ஆகவே நிஜத்தின் ஒரு பகுதியானது அதாவது நியாயத்தைப் பற்றிய எனது கருத்து, அர்த்தமுள்ளது என்று ஒத்துக் கொள்ளும்படி அழுத்தத்துக்கு உள்ளானேன். நாத்திகம் என்பது மிகவும் மட்டமானதாகிவிட்டது. அண்டசராசரங்களுக்கு அர்த்தம் இல்லாமல் இருந்தால், அதற்கு அர்த்தம் இல்லை என்பதை நம்மால் ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாது. உதாரணமாக இந்த உலகத்தில் வெளிச்சம் என்று ஒன்று இல்லாமலேயே இருந்து நமக்கும் கண்கள் இல்லாதிருந்தால் இருட்டு என்பதைப் பற்றியே நாம் அறிந்திருக்க மாட்டோம். இருட்டு என்னும் கருத்தே அர்த்தமற்றதாகப் போயிருக்கும்.”

விசுவாசம் என்பது மிகவும் முக்கியமானதாகும். கடவுளை நாம் கண்களால் காணமுடியாமல் இருந்தாலும் விசுவாசத்தால் அவர் உண்டு என்றும் அவர் நீதியுள்ளவர், தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவர் என்றும் நம்ப வேண்டும். விசுவாசம் இல்லாமல் கடவுளுக்குப் பிரியமாக நாம் வாழமுடியாது. ஏனென்றால் காணாமல் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்று அவரே சொல்லியிருக்கின்றார்.

சிந்தனை : கண்ணால் காண்பவற்றை விசுவாசிக்கத் தேவையில்லை. காணதவற்றை விசுவாசிப்பவர்கள் கடவுளைப் பிரியப்படுத்த அதிகம் செயல்பட வேண்டியதில்லை.


ஜெபம் : இயேசுவே உம்மை விசுவாசித்து உம்மைப் பிரியப்படுத்த, நீர் தரும் பலன்களைப் பெற்றுக்கொள்ள எனக்கு வரம் தாரும். ஆமென்.


For Audio Tracks visit : DD-Tamil

For Older Posts visit : http://dropindeocean.blogspot.com/
--
http://micyell.com
micyellmedia@gmail.com
Mobile : 09994258788