பூரிம் பண்டிகை
எஸ்தர் :9
எஸ்தர் :9:22 அந்நாட்களில் விருந்துண்டு சந்தோஷங்கொண்டாடவும், ஒருவருக்கொருவர் வரிசைகளை அனுப்பவும், எளியவர்களுக்குத் தானதர்மஞ்செய்யவும் வேண்டுமென்று திட்டம்பண்ணினான்.
பூர் என்னும் சீட்டுப் போட்டு யூதர்களைக் கொல்ல சதி செய்தான் ஆமான். அதே நாளில் ஆமானின் கதை முடிந்தது. மக்கள் கடவுளுக்கு நன்றியுள்ளவர்களாகவும், வரும் சந்ததியினர் இந்த சரித்திரத்தை மறந்துவிடாமல் இருக்கவும் ஒரு பண்டிகை உருவானது அது தான் பூரிம் பண்டிகை. பழைய ஏற்பாட்டில் இப்படிப்பட்ட பல பண்டிகைகளை நாம் காணலாம். ஒவ்வொரு பண்டிகைக்கும் காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்த்தால் ஒரு சரித்திரமும் அதிலிருந்து நாம் கற்றுக் கொள்ளவேண்டிய பாடங்களும் இருக்கும்.
மொர்தெகாய் ஒரு ஞானமுள்ள தலைவர் என்பதற்கு இது முக்கிய ஆதாரமாகும். தனது வளர்ப்பு மகள் மூலம் தன் இனம் அழியாமல் காக்கப்பட உதவி செய்தவர். வருங்காலத்திலும் சரித்திரத்தை மறக்காமல் இருக்க மக்களுக்கென்று ஒரு பண்டிகையை உருவாக்கினார். தங்களைக் காப்பாற்றிய கடவுளை மறந்து போகாமல் இருக்க இந்தப் பண்டிகையை யூதமதத்தின் அதிகாரப்பூர்வமான பண்டிகையாக மாற்ற அரசன் மூலமாகவே நாடு முழுவதற்கும் கடிதங்களை அனுப்பச் செய்கிறார்.
நம் சமுதாயத்திலும் திருச்சபையிலும் கொண்டாடப்படுகின்ற திருவிழாக்களும் பண்டிகைகளும் இப்படிப்பட்ட சரித்திரத்தைக் கொண்டவைகளே. கொண்டாட்டத்தின் தற்கால அம்சங்களை மட்டும் பார்க்காமல், அஸ்திபாரத்தைக் கண்டு அதன் மூலம் வருங்காலத்துக்கான பாடங்களையும் படித்துக் கொள்ள வேண்டும்.
சிந்தனை : பண்டிகைகளின் தின்பண்டங்களை விட துவக்கத்தின் சம்பவங்களைக் கவனித்தால் அர்த்தத்துடன் கொண்டாடலாம்.
ஜெபம் : கர்த்தாவே உம்மில் மகிழவும், புரிந்து போற்றவும் நீர் தந்திருக்கின்ற பண்டிகைகளுக்காக உமக்கு நன்றி. கொண்டாட்டங்களின் நடுவிலேயும் உம்மையே முதலாவதாக வைத்திருக்க வழிநடத்தும். ஆமென்.
No comments:
Post a Comment