என் ஜனம்
எஸ்தர் : 8
எஸ்தர் : 8 : 6 என் ஜனத்தின்மேல் வரும் பொல்லாப்பை நான் எப்படிப் பார்க்கக்கூடும்? என் குலத்துக்கு வரும் அழிவை நான் எப்படிச் சகிக்கக்கூடும் ?
கடவுளுக்குக் கீழ்ப்படிந்து அவரது வார்த்தையைப் பரவச் செய்ய வேண்டும். ஆனால் நான் கிறிஸ்தவனாக இருப்பதற்காகத் துன்புறுத்தப்பட்டாலும் நேபாளத்தில் இருக்கும் நானும் மற்ற கிறிஸ்தவர்களும் எங்கள் நாட்டு குடிமக்களாக இருப்பதில் பெருமைப்படுகிறோம். நாங்கள் எங்கள் நாட்டை நேசிக்கிறோம். ஆனால் கடவுளை அதைவிட அதிகம் நேசிக்கிறோம். என்று தன்னை சந்திக்க வந்திருந்த மேலை நாட்டு ஊழியத்தலைவர் ஒருவரிடம் கூறினார் ஒரு நேபாள போதகர். நமது நாட்டுப்பற்றும் தேவபக்தியும் சரியான விகிதத்தில் கலக்கப்படும் போது எஸ்தரைப் போன்ற சிறந்த இந்தியக் கிறிஸ்தவத் தலைவர்கள் கிடைப்பார்கள்.
எஸ்தர் அகாஸ்வேரு என்னும் மேதிய பெர்சிய அரசனின் மனைவியாக இருந்தாலும் அவள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட யூத இனத்தில் பிறந்தவள். அவளுக்கு இப்போது இரண்டு நாட்டு மக்கள் மேலும் பொறுப்பு இருக்கின்றது. மேலும் கடவுளுக்குப் பயந்து, அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொறுப்பு அவளது பாதுகாப்பை விட முக்கியமானதாக இருக்கின்றது. யூதமக்கள் மொத்தமாக அழிந்தால் அவளும் யூத இனத்தவளாக இருப்பதால் அவளுக்கும் வருங்காலாத்தில் பாதுகாப்பு இல்லை. இந்த சூழலில், அநியாயமாக ஒரு இனமே படுகொலை செய்யப்படும் போது எஸ்தரால் எப்படி அமைதியாக இருக்க முடியும்?
சிந்தனை : அநியாயமாக அழிக்கப்படும் மக்களுக்காக நாம் ஜெபிக்க மட்டும் தான் செய்கிறோமா? ஆதரவுக் குரல் எழுப்புகிறோமா? நமது கடமையை நாம் செய்வோம். காரணமானவர்கள் கடவுளுக்குக் கணக்குக் கொடுப்பார்கள். கடவுள் தமது சித்தத்தைச் செய்வார்.
ஜெபம் : தேவனே என் மக்கள் அநியாயமாக துன்பம் அனுபவிக்கும் போது நான் என்னால் முடிந்ததைச் செய்ய எனக்கு தைரியத்தையும் ஆற்றலையும் தாரும். ஆமென்.
No comments:
Post a Comment