உற்சாக காணிக்கை
எஸ்றா : 2
எஸ்றா : 2 : 68 தேவனுடைய ஆலயத்தை அதின் ஸ்தானத்திலே எடுப்பிக்கும்படிக்கு, அதற்காக மன உற்சாகமாய்க் காணிக்கைகளைக் கொடுத்தார்கள்.
போரில் இறந்து போன வீரனின் நினைவாக ஆலயத்தில் காணிக்கை வைக்க நினைத்தனர் அவனது பெற்றோர். அந்த ஆராதனையில் பங்குபெற்ற இன்னொரு போர்வீரனின் தாய் தன் கணவனிடம் "நாமும் அதே அளவு பணத்தை நம் மகனுக்காகக் கொடுப்போம்" என்றாள். "நம்ம மகன் உயிரோட தானே இருக்கான்?" என்றார் தகப்பன். "அதுக்கு என்ன, கடவுள் நம்ம மகன பத்திரமாப் பாத்துக்கிட்டதுக்காக நன்றிக் காணிக்கை குடுப்போம்" என்றாள் அம்மா.
கடவுளுக்குக் காணிக்கையை உற்சாகமாகக் கொடுக்காமல் இருப்பதற்கு சில காரணங்களே இருக்க முடியும். ஆசையில்லை, காசு இல்லை என்பது அதில் முக்கிய காரணங்கள். ஆனால் கடவுளுக்கும் அவரது ஊழியங்களுக்கும் கொடுப்பதற்கு ஆயிரம் காரணங்கள் கொடுக்க முடியும். யூதர்கள் அதிக முக்கியமாகப் போற்றும் எருசலேம் தேவாலயத்தை மீண்டும் கட்டுவது என்பது அவர்களுக்கு ஒரு சிறந்த காரணமாக இருந்தது. இங்கே ஊர்க்கட்டுப்பாடு அல்லது வரி என்று அல்ல, மன உற்சாகமாகக் காணிக்கைகளைக் கொடுத்த மக்களைக் காண்கிறோம்.
சிந்தனை : நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பரிசுகளைக் கொடுக்க எத்தனையோ தினங்களைக் கொண்டாடுகிறோம். கடவுளுக்கு பரிசு கொடுக்க தினசரியும் சரியான தினங்கள் தாம்.
ஜெபம் : இயேசுவே நீர் செய்த தியாகத்துடன் என் காணிக்கைகளை ஒப்பிடவே முடியாது. என்னால் இயன்றதை உற்சாகமாகக் கொடுக்க உதவி செய்யும். ஆமென்.
No comments:
Post a Comment