Thursday, November 29, 2012

விழித்த அரசன்





விழித்த அரசன்

எஸ்தர் :6

எஸ்தர் :6 :1 அந்த ராத்திரியிலே ராஜாவுக்கு நித்திரை வராதபடியினால், காலவர்த்தமானங்கள் எழுதியிருக்கிற நடபடி புஸ்தகத்தைக் கொண்டுவரச்சொன்னான்

ஒரு போதகர், சபை மக்களிடம், "உங்களுக்கு என்ன பிரச்சனை  இருந்தாலும் எந்த நேரத்திலும்  என்னைத் தொடர்பு கொள்ளலாம்" என்று  சொல்லியிருந்தார். ஒரு நாள் அதிகாலை 3 மணிக்கு வயதானப் பெண்மணி ஒருவர் தொலைபேசியில் பேசினார், "ஐயா என்னால் தூங்க முடியல."  "நான் உங்களுக்கு எந்த வழியிலாவது உதவி செய்ய முடியுமா?" என்று கேட்ட போதகரிடம் பாட்டி சொன்னார், "கொஞ்ச நேரம் பிரசங்கம் பண்ணுங்களேன். அப்படியே நானும் தூங்கிடுவேன்."

கர்த்தர் தமக்குப் பிரியமானவர்களுக்கு நித்திரையைக் கொடுக்கிறார் என்று வேதத்தில் வாசிக்கிறோம். ஆனால் இங்கே தமக்குப் பிரியமானவர்களைத் தப்புவிப்பதற்காக ஒருவருக்கு நித்திரையைக் கலைத்தார். அரசனுக்கு தூக்கம் வராததால் பழைய வரலாற்று நிகழ்ச்சிகளை வாசிக்கக் கேட்டார். அதில் மொர்தெகாய் ஒரு சதித்திட்டத்திலிருந்து அரசனின் உயிரைக் காப்பாற்றியதுவும், மொர்தெகாய்க்கு அதற்குப் பதிலாக எதுவும் செய்யப்படவில்லை என்பதையும் அறிந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி தான் மொர்தெகாய் மற்றும் அவரது யூத இனத்தினரை அழிவிலிருந்து காப்பாற்றியது.

நமக்கு உதவி செய்ய கடவுள் நினைத்தால் யாரையாவது பயன்படுத்தி அதைச் செய்து முடித்துவிடுவார். எனவே நமது வாழ்வின் பழைய நிகழ்ச்சிகளுக்காக புலம்பாமல், கடவுள் தமக்குப் பிரியமான வேளையில் பலனைத் தருவார் என்று காத்திருக்க வேண்டும்.

சிந்தனை : தூக்கமும் ஆசீர்வாதம், தூக்கம் கலைதலும் ஆசீர்வாதம். யாருக்கு எப்படி என்பது கடவுளின் தீர்மானத்தில் இருக்கின்றது.

ஜெபம் : கடவுளே, எனது உறக்கமில்லாத இரவுகளை உம் வழிநடத்துதலைத் தரும் வழியாக மாற்றும். எனக்குக் கிடைக்க வேண்டியதற்காக நான் காத்திருக்க உதவி செய்யும். ஆமென்.


No comments: