Wednesday, July 4, 2012

July 4, வடிவம்

எரேமியா 18


இதோ இஸ்ரவேல் வீட்டாரே, களிமண் குயவன் கையில் இருக்கிறதுபோல நீங்கள் என் கையில் இருக்கிறீர்கள். - எரேமியா 18:6


பிரபல பானை வனைபவரைப் பார்க்க ஒரு கிறிஸ்தவர் சென்றார். களி மண்ணை ஒரு உலக்கை போன்ற தடியால் குயவன் அடித்துக் கொண்டிருந்தார். பார்வையாளர் குயவனிடம் ஏன் சும்மா இப்படி களிமண்ணை அடித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டாராம். குயவன் சிறிது நேரம் காத்திருந்து என்ன நடக்கின்றது என்று பாருங்கள் என்று சொன்னார். சிறிது நேரத்துக்குப் பின் அடிகள் விழ விழ, களிமண்ணின் மேற்பரப்பில் சிறு சிறு குமிழிகளைப் போல உருவாகின. குயவன் சொன்னார், இந்தக் காற்றுக் குமிழ்கள் இந்த மண்ணில் இருந்தால் பின்னர் நான் பாத்திரம் செய்யும் போது அவைகள் பாத்திரத்தை பலகீனமாக்கிவிடும். இந்த குமிழ்கள் இருந்தால் நான் விரும்புகிறது போல நல்ல பாண்டங்களை செய்ய முடியாது. கிறிஸ்தவனின் வாழ்வில் இருக்கும் தேவையில்லாதவற்றை வெளியேற்றும் விதமாகத்தான் பரம குயவன் நம்மையும் சிட்சிக்கிறார் என்றும் நம்மில் இருக்கும் சுயமும், பெருமைகளும் இந்த ஒழுங்குபடுத்தும் அடிகளால் தான் சரியாகின்றன என்றும் அவர் புரிந்து கொண்டார்.

கடவுளுக்கு எதிர்களாக இருப்பவர்கள் ”தங்கள் தீங்கைவிட்டுத் திரும்பினால், நானும் அவர்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்கு, மனம் மாறுவேன்.” என்கிறார் அவர்.

ஆனால் கடவுளின் மக்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் ”என் சத்தத்தைக்கேளாமல், என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்வார்களானால், நானும் அவர்களுக்கு அருள்செய்வேன் என்று சொன்ன நன்மையைச் செய்யாதபடிக்கு மனம் மாறுவேன்.” என்றும் சொல்கிறார்.

ஆகவே குயவன் மண்ணை அடித்து மிதித்து பிசைவது போல கடவுள் நமது நன்மைக்காக, நாம் அவர் விருப்பத்தின்படி நல்ல நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவே அவர் நமக்கு பாடுகளையும் சிட்சைகளையும் அனுமதிக்கிறார். நாம் அவரை அனுமதித்தால் அவர் நம்மை சிறப்பான பாண்டமாக வனைவார்.

சிந்தனை : குயவனைவிட களிமண்ணுக்கு அதிகம் ஞானம் இல்லை என்பதைப் புரிந்து கொண்டால் பாண்டம் கிடைக்கும்.

ஜெபம் : பரம குயவனே, உம் சித்தம் செய்ய என்னை ஒப்புக்கொடுக்கிறேன். நீர் உம் நோக்கத்தின்படி வனையும். ஆமென்.


For Audio Tracks visit : DD-Tamil

For Older Posts visit : http://dropindeocean.blogspot.com/
--
http://micyell.com
micyellmedia@gmail.com
Mobile : 09994258788

No comments: