Wednesday, July 4, 2012

July 5, சுட்ட பாண்டம்

எரேமியா 19


திரும்பச் செப்பனிடப்படக் கூடாத குயவனுடைய மண்பாண்டத்தை உடைத்துப்போட்டவண்ணமாக நான் இந்த ஜனத்தையும் இந்த நகரத்தையும் உடைத்துப்போடுவேன். - எரேமியா 19:11


ஒரு ஆலயத்தில் ஆராதனையின் நடுவில் முகமூடிகளுடனும் துப்பாக்கிகளுடனும் ஒரு கூட்டம் நுழைந்து ஆலயத்தின் கூரையில் சுட்டு கலவரம் ஏற்படுத்தியது. தலைவனைப் போல இருந்தவன் சொன்னானாம், கடவுளுக்காக ஒரு துப்பாக்கி குண்டை ஏற்றுக்கொள்ள மனம் இல்லாதவர்கள் எல்லாம் வெளியே போய்விடுங்கள் என்றானாம். பெரும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. போதகரும் ஒரு டஜன் உறுப்பினர்களும் தான் உள்ளே இருந்தார்களாம். முகமூடித் தலைவன் போதகரிடம் சொன்னான், “உங்க கோயில்ல இருந்த மாய்மாலக்காரங்கள வெளிய அனுப்பிட்டேன். இனிமே நீங்க ஆராதனையத் தொடரலாம்.”

தங்களை சிட்சைக்கு ஒப்புக் கொடுக்காத ’களிமண்கள்’ சிறந்த பாண்டங்களாக மாற முடியாது. அப்படியே சரிசெய்யப்பட முடியாத பானைகள் எந்த வகையிலும் யாருக்கும் பயன்படாமல் போவதால் உடைத்துப் போடப்படும். அவ்வாறே கடவுளின் ஜனங்கள் கடவுளின் பார்வையில் இருப்பதால் அவர்கள் அழிக்கப்படுவார்கள் என்றார் கடவுள்.

கடவுளால் முடியாதது ஒன்றும் இல்லை என்றாலும், தங்கள் மனதைக் கடினப்படுத்திக் கொண்டிருப்பவர்களுக்கு தண்டனையைத் தவிர வேறு எதுவும் கொடுக்கப்படாது. களி மண்ணானது பிசையப்படுவதற்கு ஏற்றவிதமாக ஈரமாக இருக்கும். ஆனால் சுடப்பட்ட பின் அது மோசமானதாக இருந்தால் உடைக்கப்பட மட்டுமே முடியும். நமது வாழ்வும் கடவுளின் கையில் ஈரமாக, திருத்தப்படுவதற்கு ஏற்றவிதமாக இருந்தால் நாம் மாறமுடியும். கடின மனமாக, சுட்ட பானையைப் போல இருந்தால் நமது வாழ்வு கடவுளுக்கு ஏற்றவிதமாக இல்லையென்றால் நமக்கு அவரது தண்டனை மட்டுமே காத்திருக்கும்.


சிந்தனை : களிமண்ணாக இருக்கும் போது அடி, மிதி, பிசைதல் ஆகியவை உண்டு. சரியாகாத களிமண் பாண்டமாக மாறியபின் உடைக்கப்பட்டுப் போய்விடும். பிசைதலே உடைக்கப்படுவதை விட வலி குறைவானதாகும்.


ஜெபம் : ஆண்டவரே, உம் சிட்சையே போதும். உமது தண்டனை வேண்டாம். உமக்கே உண்மையாக இருக்க எனக்கு நல்ல இருதயம் தாரும். ஆமென்.


For Audio Tracks visit : DD-Tamil

For Older Posts visit : http://dropindeocean.blogspot.com/
--
http://micyell.com
micyellmedia@gmail.com
Mobile : 09994258788

No comments: