Sunday, July 22, 2012

July 23, பிரதான ஆசாரியனும் அல்ல

எபிரெயர் 2


அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார். - எபிரெயர் 2:18


ஜார்ஜ் ஹார்லி என்னும் மருத்துவ மிஷனரி ஆஃப்ரிக்க நாட்டில் ஒரு சிறு மருத்துவமனையையும் சிறு ஆலயத்தையும் அருகருகே கட்டியிருந்தார். மக்கள் மருத்துவமனையை நோக்கி வரத்துவங்கினார்கள். ஆனால் ஏதோ காரணத்துக்காக ஆலயத்துக்குப் போகவே இல்லை. நான்கு ஆண்டுகளாக அவரும் மனைவியும் சிறிய மகனும் மட்டுமே ஆலயத்துக்குப் போய்க்கொண்டிருந்தார்கள்.

ஒரு நாள் அவர் மகன் வேலியிலிருந்து விழுந்து பாறையில் தலை மோதி இறந்து போனான். அடக்க ஆராதனையில் மிஷனரிகள் மட்டுமே பங்குபெற்றனர். ஜார்ஜ் தோளில் சிறுவனின் சவப் பெட்டியை சுமந்து சென்றார். வழியில் ஒருவன், ”ஐயா இந்தப் பெட்டியில் என்ன இருக்கின்றது?” என்றான். அவர் ”என் மகன், நேற்று அவன் இறந்துவிட்டான்” என்றார். அந்த மனிதன் பெட்டியின் ஒரு பக்கத்தை சுமந்தான். மிஷனரி கல்லறைத் தோட்டத்தில் அடக்க முடியாமல் தேம்பித்தேம்பி அழுதார். ”ஏன் ஆண்டவரே?” என்றார். அவன் மிஷனரியை உற்றுப் பார்த்துவிட்டு ஊருக்குள் ஓடி ஒவ்வொரு வீட்டிலும் போய் “பெரியவர் அழுகிறார். நம்மைப் போலவே அவர் அழுகிறார்” என்று அறிவித்தான். எல்லா திசைகளிலுமிருந்து மக்கள் ஓடிவந்து மிஷனரி தம்பதியர் மேல் கைகளை வைத்து ஆறுதல் சொன்னார்கள். அந்நேரத்திலிருந்து ஆராதனை நடக்கும்போதெல்லாம் மருத்துவமனையில் இருப்பவர்களைத்தவிர அனைவரும் ஆலயத்தில் தான் இருந்தார்கள்.

இயேசு ஒரு பிரதான ஆசாரியனல்ல. ஏனென்றால் ஆசாரியனுக்கும் சோதனைகளும் பாவங்களும் உண்டு. ஆனால் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய அவனால் முடியாது. நம்மைப் போல எல்லாவிதத்திலும் சோதிக்கப்பட்ட இயேசு பாவம் இல்லாதவராக ஆண்டவராக வல்லமை உள்ளவராக இருக்கின்றார்.


சிந்தனை : மோட்சத்திலேயே இருந்திருந்தால் இயேசுவால் நம் சோதனைகளுக்கு உதவியிருக்க முடிந்திருக்காது.


ஜெபம் : இயேசுவே சோதனைகளில் உதவியும், பரிசுத்தமும் எனக்குத் தாரும். ஆமென்.


For Audio Tracks visit : DD-Tamil

For Older Posts visit : http://dropindeocean.blogspot.com/
--
http://micyell.com
micyellmedia@gmail.com
Mobile : 09994258788


No comments: