Friday, July 6, 2012

July 6, பரிகாசம்

எரேமியா 20


நான் கூறின கர்த்தருடைய வார்த்தை நாள்தோறும் எனக்கு நிந்தையும், பரிகாசமுமாயிற்று. - எரேமியா 20:8


ஜப்பான் நாட்டுக்கு முதன்முதலாகச் சென்ற ப்ராட்டஸ்டன்ட் மிஷனரி மிகவும் உண்மையாகவும் சிறப்பாகவும் ஊழியம் செய்தார். ஜப்பானின் சக்கரவர்த்தி அவரது போதனைகள் உண்மையாக இருந்தால் கிறிஸ்தவத்தைத் தனது நாட்டின் அதிகாரப்பூர்வமான மதமாக அறிவிப்பதாகச் சொன்னார். அவர் தனது அரசவையில் இருந்த ஐந்து சிறந்த அறிஞர்களை ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணமாக அனுப்பி வைத்தார். அவர்களது பயணம் முடிவுக்கு வரும் சூழலில் ஒரு பேராயர் அவர்களிடம் நீங்கள் உங்கள் சக்கரவர்த்திக்குக் கொண்டு செல்லும் செய்தி என்ன என்று கேட்டார். அவர்கள் சொன்னார்கள், “உங்கள் புத்தகம் சரியானது தான். ஆனால் அது நடைமுறையில் செயல்படவில்லை.”

உண்மையான ஊழியரின் வார்த்தைகள் வேதாகமத்துக்கு எதிராக வாழ்ந்தவர்களின் வாழ்க்கையினால் நிந்தையாகவும் பரிகாசமாகவும் மாறிவிட்டன. ஓவியத்தின் குறையினால் ஓவியரைக் குறை உள்ளவர் என்று சொல்லமுடியாது. இதைப் புரிந்து கொள்ளும் உண்மை ஊழியர்கள் போலி பக்தர்கள் மற்றும் போலி ஊழியர்களை நினைத்து கவலைப் பட்டுக் கொண்டிருக்காமல் தங்கள் ஊழியங்களையும் பரிசுத்தமான வாழ்க்கையையும் தொடர்ந்து செய்து கொண்டே இருப்பார்கள். எரேமியா அதைத்தான் செய்தார்: ”ஆதலால் நான் அவரைப் பிரஸ்தாபம்பண்ணாமலும் இனிக் கர்த்தருடைய நாமத்திலே பேசாமலும் இருப்பேன் என்றேன்; ஆனாலும் அவருடைய வார்த்தை என் எலும்புகளில் அடைபட்டு எரிகிற அக்கினியைப்போல் என் இருதயத்தில் இருந்தது; அதைச் சகித்து இளைத்துப்போனேன்; எனக்குப் பொறுக்கக் கூடாமற்போயிற்று.” என்று சொன்னபடியே அவரால் கடவுளின் ஊழியத்தைச் செய்யாமல் இருக்க முடியவில்லை, ஏனென்றால் “கர்த்தரோ பயங்கரமான பராக்கிரமசாலியாய் என்னோடு இருக்கிறார், ஆகையால் என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் மேற்கொள்ளாமல் இடறுவார்கள்” என்ற உறுதி அவருக்குள் அசைக்கமுடியாதபடி இருந்தது.

சிந்தனை : போலி ஊழியங்களைக் கண்டு உண்மை ஊழியர்கள் சோர்ந்து போகாமல் தங்கள் ஊழியத்தை உண்மையாகச் செய்வார்கள்.


ஜெபம் : ஆண்டவரே பிறரைப் பார்க்காமல், என்னை நானே உண்மையாகவும் பரிசுத்தமாகவும் காத்துக் கொள்ள உதவும். ஆமென்.


For Audio Tracks visit : DD-Tamil

For Older Posts visit : http://dropindeocean.blogspot.com/
--
http://micyell.com
micyellmedia@gmail.com
Mobile : 09994258788

No comments: