#40நாள்இயேசு
நாள் 10.அ இரண்டாம் ஞாயிறு
நாள் 10.அ இரண்டாம் ஞாயிறு
“நானே உயிர்த்தெழுதலும், ஜீவனுமாயிருக்கிறேன்” (யோவான் 11:25).
இயேசுவின் “நானே…” அறிக்கைகள் அவரது தெய்வீகத்தை வெளிப்படுத்துகின்றவைகளாக இருக்கின்றன. இன்று ஞாயிற்றுக் கிழமையாக இருப்பதால், நானே உயிர்த்தெழுதலாய் இருக்கிறேன் என்ற வாக்கியத்தை மட்டும் இன்று தியானிக்கிறேன்.
“நான் இருக்கிறவராக இருக்கிறேன்” (I AM tha I AM) என்று மோசேயிடம் தன் பெயரை வெளிப்படுத்தினார் கர்த்தர். I AM —————— தமிழில் “நான் …… ஆக இருக்கிறேன்” என்று கர்த்தர் தன்னை நமது தேவைகளுக்கும் சூழலுக்கும் ஏற்ப வெளிப்படுத்துகிறார் என்று “we would see Jesus” என்ற புத்தகத்தில் சொல்கிறார், Roy Hession. ஆபிரகாம் ஈசாக்கை பலியிடப் போன இடத்தில் “நானே தருகிறவர்” (Jehovah Jireh) என்றார், ஈசாக்குக்குப் பதிலாக பலியிட ஒரு ஆட்டைக் கொடுத்தார். அவ்வாறே, இஸ்ரவேலர் போருக்குச் சென்ற போது, “நானே வெற்றிக் கொடியாக இருக்கிறேன்” என்று சொல்லி வெற்றியைக் கொடுத்தார். இவ்வாறு அனைத்து இருக்கிறேன் (I AM) பெயர்களிலும் நமது தேவைகளுக்கான பதிலாக அவர் இருப்பதை இந்த எழுத்தாளர் விளக்குகிறார். நமக்கும் இன்று இருக்கும் தேவைகளில் இயேசு நமக்குப் போதுமானவராக இருக்கிறார் என்பது தான் நமக்கு இருக்கும் பெரும் நம்பிக்கை. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக ‘இருக்கிறார்.’ இயேசுவின் இந்த “நான் ——- ஆக இருக்கிறேன்” என்ற பட்டியலை பின்னர் விளக்கமாகப் பார்க்கவிருக்கிறோம். இங்கே “நான் உயிர்த்தெழுதலாகவும் உயிராகவும் இருக்கிறேன்” என்கிறார் இயேசு.
செத்துப் போனவர்களுக்கு அவர் உயிர்த்தெழுதலாக இருக்கிறார். உயிரோடு இருப்பவர்களின் உயிராக அவர் இருக்கிறார். இங்கே இறந்து போன லாசருவை முன்னிட்டு சொன்னாலும், உடலைப் பற்றி சொன்னாலும், நமது ஆன்மாவுக்கும் இது பொருந்தும் என்பது தான் இன்றைய தியானம்.
என் ஆன்மா செத்துப் போகும் போது உயிர்த்தெழுதலாக நீர் இருக்கிறீர். உயிர்ப்பிக்கப்பட்ட என் ஆன்மாவில் உயிராக நீர்.
வழி காட்டுபவர்கள் நடுவில் வழிகாட்டி என்று தன்னை அறிமுகம் செய்யாமல் நானே வழி என்றவர்.
சத்தியத்தைத் தேடுகின்றவர்கள் நடுவே நான் சத்தியத்தைக் காட்டுகிறேன் என்று சொல்லாமல் நானே சத்தியம் என்றவர்.
உயிருக்குப் போராடிக் கொண்டு, உயிரை நீட்டிக்க என்ன செய்யலாம் என்பவர்களிடம் நான் உயிரைக் காப்பாற்ற முயற்சி செய்கிறேன் என்று சொல்லாமல் நானே உயிர் என்றவர்.
இங்கே உயிர்ப்பதற்கு முயற்சிக்காதே, நானே உயிர்த்தெழுதல் என்கிறார். இதில் எனக்குப் புரிந்ததெல்லாம், நான் முட்டி மோதி என் ஆன்மீகம் உயிர்ப்பிக்கப்படுவதற்காக ஜெபம், வேதம், கூடுகைகள் என்று செல்லாமல் இயேசுவிடம் மட்டுமே செல்ல வேண்டும் என்பது தான். இயேசு உடன் இல்லாமல் ஜெபம், வேதம், ஊழியம், கூடுகை, ஆன்மீகப் புத்தகங்கள், ஆன்மீக ஆடியோ வீடியோக்கள் எல்லாம் வெறும் பொம்மைகளும், பிம்பங்களுமே. உண்மையான இயேசுவை, உயிரான இயேசுவை மட்டும் எப்போதும் அருகில் இருப்பதை உணர வேண்டும். தொட்டுத் தடவியாவது பார்க்கும் அளவு அவர் அருகில் தானே இருக்கிறது. கர்த்தர் தூரமாய்த் தெரிந்தால் தூரம் போனது நான் தானே! ஒரு வார்த்தை சொன்னால் போதுமே, அவரை நான் உணர முடியுமே! நான் உணர்வற்றுப் போகும் போது, சாவை நோக்கி சருக்கி விழும் போது என் உயிர்த்தெழுதலாயிரும். எப்போதுமே என் உயிராய் இரும். கர்த்தாவே.
No comments:
Post a Comment