Thursday, March 7, 2019

#40நாள்இயேசு நாள் 3

#40நாள்இயேசு

நாள் 3:

யோவான் ஸ்நானகனைப் பற்றி பின்னர் சிறிது பார்க்கலாம். இது இயேசுவைப் பற்றிய தியானம் என்றாலும் சில பின்னணி நபர்களும் நிகழ்வுகளும் தேவை தான். 

இயேசு
யோவான் ஸ்நானகன்
யார்?
ஒளி 
ஒளியைக் குறித்து சாட்சி கொடுக்க வந்தவர்

வார்த்தை
சத்தம்
பிரசங்கம்
பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானம். 
மனம் திரும்புங்கள், பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது. 
ஆள்த்தன்மை 
மென்மை, பழகுவதற்கு இனிமை
முரடு, கடுமையான சொற்கள்
வசிப்பிடம்
இரவு, அதிகாலையில் மலை, வனாந்தரம், பகலில் நகரங்கள், கிராமங்கள்
வனாந்தரம்
உடை 
அங்கி
ஒட்டகத் தோல்
உணவு 
அப்பம், திராட்சைரசம், மீன்
காட்டுத் தேன், வெட்டுக்கிளி 
மரணம் 
சிலுவை
சிரச்சேதம் 








பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பெலன்கொண்டு, ஞானத்தினால் நிறைந்தது. தேவனுடைய கிருபையும் அவர்மேல் இருந்தது (லூக்கா 2:40).

இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார் (லூக்கா 2:52).

“ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அது தாண்டா வளர்ச்சி” வாழ்க்கையைப் பற்றிய அருமையான தத்துவப்பாடல்களின் ஒன்று இப்படிச் சொல்கிறது. உடல் வளர்ச்சியும் அறிவு வளர்ச்சியும் மட்டும் போதும் என்பது தான் பொதுவாக அனைவருக்கும் இருக்கும் புரிதல். அதிலும் குழந்தைகளை வளர்க்கும் தமிழ்ப் பெற்றோருக்கு இது ரொம்ப முக்கியம்.

அதனால் தான் போஷாக்குள்ள உணவு என்று பல டப்பாக்களில் சத்துணவு விற்கப்படுகிறது. இது உடம்புக்கு நல்லது, டைஜஷனுக்கு நல்லது என்ற வார்த்தைகளைக் கேட்காத நாளே இருக்காது. நம் நாட்டில் அடுத்த பெரும் வியாபாரம் கல்வி. பள்ளிகள், தனியார் பயிற்சிக் கல்லூரிகள் என்று நீங்கள் தொழில் தொடங்கினால் உங்களுக்கு நஷ்ட்டமே வராது. 

சாப்பாடு, படிப்பு இரண்டும் தான் முன்னுரிமை பெறுகிறது. இரண்டு தொழிலும் கைவிடவே செய்யாது. இயேசு உடலிலும் அறிவிலும் வளர்ந்தது மட்டுமல்ல, தேவனுடைய கிருபை அவர் மேல் இருந்தது என்று இயேசுவின் சிறுவயதுக் குறிப்பு இருக்கின்றது. லூக்கா 2:52 இன்னும் சிறப்பாக சரியான வளர்ச்சி என்றால் என்ன என்பதை விளக்குகிறது.

ஸ்டீஃபன் காவி எழுதிய பிரபலமான 7 பழக்கங்கள் புத்தகம் இந்த நான்கு பகுதிகளையும் தான் அடிப்படையாக வைத்திருக்கிறது. ஆளுமை, மேலாண்மை வளர்ச்சி, தனிநபர் வளர்ச்சி பற்றிய எந்த புத்தகமாக, கருத்தாக இருந்தாலும் இந்த நான்கும் இல்லாமல் இருக்காது. நான் கிறிஸ்துவுக்கு வாலிபர் (YFC) யில் தலைமைத்துவப் பாடங்கள் கற்றுக் கொடுக்கும் போது சமநிலை வாழ்வு என்ற தலைப்பில் இதே பாடத்தைப் படித்தும் கற்றுக் கொடுத்தும் இருக்கிறேன்.



இயேசுவானவர் ஞானத்திலும் (மனம்), வளர்த்தியிலும் (உடல்), தேவகிருபையிலும் (ஆன்மா), மனுஷர் தயவிலும் (இதயம்) அதிகமதிகமாய் விருத்தியடைந்தார் (லூக்கா 2:52).

பிள்ளைகளை வளர்ப்பவர்களும், தாங்கள் சமநிலையாக எல்லா வகையில் வளர்ச்சி பெற வேண்டும் என்றால் இதைக் கவனியுங்கள்.

ஒரு பகுதி மட்டும் வளர்ந்து அடுத்த பகுதியோ பகுதிகளோ வளர்ச்சி இல்லாமல் இருந்தால் நான்கு சக்கரங்களும் ஒரே மாதிரி இல்லாத சக்கடா வண்டி போல உங்கள் வாழ்வு ஆடி அசைந்து தான் போய்க் கொண்டிருக்கும்.

ஞானம் - அறிவு மட்டுமல்ல, அறிவை நடைமுறைப்படுத்துவது. இதற்கு வயதும் அனுபவமும் வேண்டும். ஆனாலும் கர்த்தர் ஒரு ஷார்ட் கட் வைத்திருக்கிறார், கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம். கர்த்தர் கொடுக்கும் ஞானம் கற்றுக் கொடுத்தவரையும் மிஞ்ச வைக்கும் என்று வேதம் சொல்கிறது.  சாலொமோனைப் பாருங்கள், சிறுவயதில் தான் ஞானம் அதிகம் இருந்தது அவருக்கு. அது கர்த்தர் நேரடியாகக் கொடுத்தது. ஞானத்தில் குறைவுள்ளவன் ஜெபிக்க வேண்டும், பிரபல பள்ளியிலோ, ட்யூஷன் சென்டருக்கோ அனுப்புவதை விட ஜெபிப்பது நலம். நம் பிள்ளைகள் அதிரடி, உடனடி அறிவுடன் இருக்கிறார்கள். அறிவு பெருத்துவிட்டது.  கூகுள், விக்கிபீடியா, இணையத்தளம், யூட்யூப் ட்யூட்டோரியல், ஆன் லைன் கல்வி என்று எத்தனை வந்தாலும் வாழ்க்கையை வாழும் ஞானம் இல்லாமல் தான் திரிகிறார்கள். தொழில்நுட்பம் ஒரு புறம் வளர்ந்தாலும் வேலையில்லாத் திண்டாட்டம், மிருகம் போன்ற செயல்பாடுகள், கட்டுப்பாடு இல்லாத பாலியல் வாழ்க்கை. 


உடல்:

கட்டுப்பாடு இல்லாத உணவுப் பழக்கம், கவர்ச்சிக்கும் உணவுகள், வகைவகையாக கிடைக்கும் உணவுகள், உடற்பயிற்சியே இல்லாமல் விரல் பயிற்சியில் மட்டும் தேர்ந்த பிள்ளைகள், செயற்கை உணவால் வரும் பாதிப்புகள். உடல் சார்ந்த விளையாட்டுகள் இல்லாமல் எல்லாமே மின்னணுவில் மாற்றப்பட்ட காலம் இது. விடியோ விளையாட்டுக்களும் உலக அளவில் தொழில் முறை விளையாட்டாக மாறுகிறது. ஒலிம்பிக் அளவுக்கு இது முன்னேறிக் கொண்டிருக்கிறது. நம் உடல் கர்த்தரின் ஆவியானவர் தங்கும் ஆலயம் என்ற நினைப்பு இருந்தால் நாம் அசுத்தங்கள் உள்ளே போவதைத் தடுப்பது, சரியாகப் பராமரிப்பது, சுத்தமாகக் காத்துக் கொள்வது என்று பார்த்துக் கொள்வது பிரச்சனையாக இருக்காது.

ஆன்மா: 

இது தான் எல்லாவற்றுக்கும் அடிப்படையானது. மற்ற நான்கு பகுதிகளுக்கும் இது தான் ஆதாரமாக இருக்கின்றது. அறிவியல் சார்ந்து சிந்திக்கும் பகுத்தறிவுவாதிகள் இதை நம்ப மாட்டார்கள். கண்ணால் காண முடியாத, அறிவியலால் நிரூபிக்க முடியாத எதுவும் அவர்களுக்குத் தேவையில்லை. நம் பள்ளி-கல்லூரிகளில் மனிதன் குரங்கிலிருந்து வந்தவன் என்கின்றன. நம் ஊடகங்கள் கடவுளை நம்புகிறவர்களை வைத்து செய்கிறார்கள் - கழுவி ஊற்றுகிறார்கள். கடவுள் நம்பிக்கை எதுவோ அசிங்கமான வியாதி என்பது போல நாம் ஒளிகிறோம்,  பம்முகிறோம். எத்தனை படிப்பு படித்தாலும் கடவுள் பயம் இல்லை என்றால் நாம் இன்னும் மோசமான காலங்களைக் காண்போம். படிப்பு, சம்பாத்தியம், பதவி, அந்தஸ்து என்று ஓடி ஓடித் தேடி இதுவரை திருப்தி அடைந்தவர்கள் யாரும் இல்லை. மனிதன் உலகம் முழுவதையும் சம்பாதித்துக் கொண்டாலும் அவன் ஆன்மாவை இழந்தால் அவனுக்கு லாபம் என்ன? என்கிறார் இயேசு. ஹார்லிக்ஸ், பெஸ்ட் ஸ்கூல் மட்டும் போதாது உங்கள் பிள்ளைகளுக்கு, ஆன்மீகமும் அதை நடைமுறைப்படுத்தலும் வேண்டும்.  

இதயம்:

இது மனித உறவுகள், உணர்வுகள் சார்ந்தது. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி என்றார் கர்த்தர். தன்னலமாக மாறிப் போன வாழ்க்கை முறைக்கு செல்ஃபி ஒரு உதாரணம் (செல்ஃபியின் நன்மைகள் பற்றி இங்கே வேண்டாம்). பிறரைப் புரிந்து கொள்ள, அனுசரித்துப் போக, மதிப்புக் கொடுக்க, நேசிக்க நமக்கு நேரம் இல்லை. நமக்குள் இருக்கும் “நான்” அதிகமாகவே இருக்கின்றது. விவாகரத்துக்கள் விவாகம் ஆன சில மணிகளில் இருந்து சில வருடங்களுக்குள் நடப்பது சாதாரண செய்தியாக இருக்கிறது. வெட்டு குத்து, கள்ளக்காதல், விருப்பம் போன்ற பாலுறவுக்கான அரசின் ஆதரவு சட்டத் திருத்தம், ஓரினச் சேர்க்கைக்கான அங்கீகாரம், மன நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வு, சைக்கோ குற்றங்கள், பாலியல் பலாத்காரங்கள், வீட்டிலும் வெளியிலும் வன்முறை  அனைத்தும் என்ன சொல்கின்றன? மனிதன் உறவுக்காகப் படைக்கப்பட்டவன். சொந்த முயற்சியில் உறவுகள் சிறக்க இயலாது. இயேசுவின் அன்பு நமக்குள் ஊற்றப்பட்டால் மட்டுமே அது மற்றவர்களுக்கு மடை மாற்றி அனுப்பப்பட முடியும்.

அதிகமதிகமாய் விருத்தியடைந்தார் என்பது தான் இங்கே வெற்றியின் இரகசியம். ஒரு நாள் கூத்து அல்ல வளர்ச்சி. சமநிலையாக, மொத்த ஆள்த்தத்துவத்திலும் வளர்வது என்பது தொடர்ந்து கொண்டு இருக்க வேண்டும், அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டும். 

பிள்ளைகளின் வளர்ச்சிக்காக ஜெபிக்கும் போதும் திட்டமிடும் போது இந்த சமநிலை வளர்ச்சியை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒன்றும் தாமதமாகிவிடவில்லை இப்போதே துவங்குங்கள்.

உங்களுக்கும் வயதாகிவிடவில்லை, உங்கள் வாழ்வின் சமநிலையை இன்றே சரி செய்யுங்கள். அதிகமதிகமாய் சாகும் வரை எல்லாப் பகுதிகளிலும் விருத்தியடைய தீர்மானம் செய்யுங்கள். முக்கியமாக ஆன்மாவின் வளர்ச்சிக்கு இந்த லெந்துக் காலம் உங்களுக்கு உதவியாக இருக்கட்டும்.

இயேசுவின் சிறுவயது வாழ்க்கையைப் பற்றி நமக்குக் கிடைத்திருக்கும் ஒரே நிகழ்வு அவர் தொலைந்து போய், தேவாலயத்தின் அறிஞர்களுடன் உரையாடியது மட்டுமே. நம் சிறுபிள்ளைகளின் புகைப்படங்களை சேகரிக்கிறோம். அவர்களது சிறுவயது நினைவுகளில் அவர்களது ஆன்மீகம் எந்த நிலையில் இருக்கிறது?


சிறுவயதில் ஞாயிற்றுக் கிழமைகளில் கூட படிக்க, ட்யூஷனுக்கு அனுப்பி விட்டு இளைஞர்களானதும் அவர்களது வாழ்க்கை சரியில்லை என்று புலம்பும் ஆயிரக்கணக்கான பெற்றோர் உண்டு. ஆலயம், ஊழியங்களில் எந்த அளவுக்கு ஆன்மீக வளர்ச்சி கிடைக்கிறது என்பது அவரவர் இருக்கும் இடத்தைப் பொறுத்தது. பெற்றோர் பிள்ளைகளை வளர்ப்பதில் அவுட் சோர்சிங் என்பதே இருக்கக் கூடாது. ஊழியர்கள் உங்கள் பிள்ளைகளுக்காக ஜெபிக்கட்டும், ஆனால் பிள்ளைகளின் ஆன்மீகத்துக்கு நீங்கள் முன்மாதிரியாக, பாடமாக இருக்க வேண்டும். உடன் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். பிள்ளைகள் உங்களுக்கென்றே செதுக்கி அனுப்பப்பட்ட சிலுவைகள் என்று நினைத்துக் கொள்ளுங்கள். சிறுவயதிலிருந்தே தூக்கிப் பழகியிருந்தால் பாரம் தெரியாது. திடீரென வாலிபப் பிள்ளைகளை சுமக்கும் போது உங்கள் இடுப்பு ஒடிந்துவிடும். 

உங்கள் பிள்ளைகள் எந்த வயதில் இருந்தாலும் கர்த்தரிடம் மன்றாடுங்கள். சிலுவையை அனுதினமும் சுமக்க பெலம் தருவார். இளைப்பாறுதல் தருவார். சிலுவையை இலகுவாக மாற்றித்தருவார்.





இயேசுவின் சோதனைகள்:

இயேசுவுக்கு 40 நாட்கள் மட்டுமல்ல, அவர் சிலுவைக்குப் போகும் வரை சோதனைகள் அவருக்கு இருந்து கொண்டு தான் இருந்தன. அவர் நம்மைப் போல சோதிக்கப்படாமால் நமக்காகப் பரிதாபப்படவும், பரிந்து பேசவும் முடியாது என்பதால் எனக்கும் உங்களுக்கும் இருந்த “எல்லா” சோதனைகளும் அவருக்கும் இருந்தது. இது தான் நமக்கு இன்று கிடைக்கும் ஆறுதலும், எச்சரிக்கையும், பாடமும் ஆகும்.

ஹென்றி நோவன் என்னும் பெரியவர் “இயேசு ஞானஸ்நானம் பெற்று கரையேறிய போது அவருக்குக் கிடைத்த அந்த வானத்திலிருந்து வந்த சத்தம் தான் அவரது எல்லா சோதனைகளையும் தாங்கிச் செல்வதற்கு அவருக்குக் கிடைத்த உற்சாகம், ஊக்கம், வல்லமை எல்லாவுமே” என்கிறார்.

“நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன்”

இயேசுவின் சோதனைகளைப் பார்ப்பதற்கு முன்பே, சோதனைகளில் இருந்து தப்பிக்கும் ஒரு பெரிய சூத்திரம் இருக்கிறது.

நான் யார்? என்ற குழப்பம் தான் நமது பிரச்சனைகளுக்கு 95% காரணமாக இருக்கிறது.

நான் கர்த்தருடைய அன்புக்குரிய பிள்ளை. என் மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார்.

இதை ஒரு நாளுக்கு நூறு தடவைகள் சொல்லிப் பாருங்களேன்.  ஸ்டிக்கர் செய்து பார்வையில் படும் இடங்களில் எல்லாம் ஒட்டி வையுங்களேன், வித்தியாசம் தெரியும்.

அந்த அன்புள்ள தகப்பனிடம் தினமும் உரையாடிக் கொண்டிருந்தால் சோதனைக்கு நேரமோ வாய்ப்போ இருக்காது அல்லவா? இயேசுவின் காலத்தில் ஸ்மார்ட் ஃபோன்களும் இன்டர்  நெட்டும் இருந்திருந்தாலும் கூட அவர் ஸ்மார்ட்டாகத்தான் அதை செயல் படுத்தியிருப்பார். பிதாவுடன் தொடர்பு கொள்ளும் நேரம் நிச்சயமாக சைலண்ட் மோட் தான். மிஸ்டு கால், மெசேஜ் பார்த்து பகலில் பதில் கொடுத்திருப்பார். எல்லாவற்றுக்கும் மேலாக எமர்ஜன்சிக்கு மட்டும் தான் ஃபோன், எப்போது நேரில் பேசுவதை விரும்புவார் என்பதால் இயேசுவுக்கு அதிகம் ஃபோன் கால்கள் வராமலேயே தான் இருந்திருக்கும்.

நொடிக்கொருதடவை டிங் டிங் என்று சொல்லும் நோட்டிஃபிக்கேஷன்களை அவர் சைலண்ட் ஆகத் தான் வைத்திருப்பார். அவரைத் தொடர்பு கொள்ளும் அனைவருக்கும் ரெண்டு ஊதா டிக்குகள் எப்போதும் உண்டு. 

நாம் இயேசுவின் போஸ்ட்டுகளுக்கு இரட்டை நீல டிக்குகள் கொடுக்கிறோமா?

லைக் பண்ணுகிறோமா? ஷேர் பண்ணுகிறோமா? சேவ் பண்ணுகிறோமா? 

ஜெபத்தில் கமெண்ட் செய்கிறோமா?

மொத்தத்தில் இயேசுவுடனான உறவு இருவழி உரையாடலாக இருக்கின்றதா?

கடலை போடுவது போல நேரம் போவது தெரியாமல், சுவராசியமாக, உறவை வளர்க்கும் ஒரு உரையாடலாக உங்கள் ஜெபம் நேரம் இருக்கிறதா? இருவரும் உரையாடலில் ஈடுபடுகின்றீர்களா?

ஜெபம் பெரியதா, வேதம் பெரியதா? சுவிசேஷ ஊழியம் பெரியதா? சமூக சேவை பெரியதா? எல்லாமே கட் அண்ட் ரைட் ஆகப் பதில் சொல்ல முடியாதது. ரெண்டுமே வேண்டும். எப்போது எந்த அளவு இந்த கலவை காம்பினேஷன் இருக்க வேண்டும் என்பது அவருடனான உரையாடலில் தான் நமக்குத் தெரியும். அதிகக் கால உரையாடல் உங்களை ஸ்மார்ட்டாக மாற்றும். அவ்வப்போது, கொஞ்சம் கொஞ்சமான உரையாடல்கள் நிச்சயமாக உங்களைக் குழப்பி, புலம்பச் செய்துவிடும்.

__________________ (உங்கள் பெயரை எழுதுங்கள்) கர்த்தருடைய அன்புக்குரிய  மகன் / மகள். __________________ ஆகிய என்மேல் (என் சாதனைகளில் அல்ல, பக்தியில் அல்ல, ஜெபம்/வேதம்/ஊழியம் போன்ற செயல்களில் அல்ல) பிரியமாக இருக்கிறார். 

ஏன் தெரியுமா? நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும் நம்மால் நமக்கு திருப்திகரமான அளவு சாதிக்க முடியாது. கர்த்தரின் சித்தத்தை நிறைவேற்றும் அளவுக்கு நம் சொந்த முயற்சியால் எதையும் செய்ய முடியாது.

அவர் தன் சாயலில் என்னைப் படைத்திருக்கிறார். ஆகவே அவர் என்னை நேசிக்கிறார். அவர் தன் இரத்தத்தால் என்னை மீட்டு எடுத்திருக்கிறார் ஆகவே அவர் இரண்டு மடங்கு என் மேல் பிரியமாக இருக்கிறார்.

இனி நீங்கள் உங்களை யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்கவோ, பிறர் பாராட்டுக்காக ஏங்குவதோ தேவையில்லை. போஸ்ட் போடுங்க, அப் லோட் பண்ணுங்க. லைக் வருகிறதா என்று மக்களிடம் இருந்து எதிர்பார்த்துக் கொண்டிருக்காதீர்கள். ஏற்கனவே கர்த்தர் லட்சம் லைக்குகள் போட்டிருக்கிறார். கதவைப் பூட்டிக் கொண்டு தனியாக உட்கார்ந்து எண்ணிப் பாருங்கள். அசந்து போவீர்கள்.

வேறு எந்த தலைப்புகளையும் விட சோதனைகள் பற்றி எழுத மிகவும் தகுதி உள்ளவன் நான். புத்தகமே எழுதலாம் (பல பகுதிகளாக) ஆனால் இங்கே இயேசுவுக்கு வந்த சோதனைகளிலிருந்து நமக்கு என்ன பாடங்கள் கிடைக்கின்றது என்பதை சுருக்கமாகப் பார்ப்போம்:

  1. இயேசுவுக்கே சோதனை வந்ததால் எனக்கும் சோதனை வரத்தான் செய்யும்.
  2. சோதனைகள் சாதாரணமாக வருவது உண்மை தான்.  ஆனால் சோதனைக்கும் பாவத்துக்கும் உள்ள வித்தியாசத்தை நான் புரிந்திருக்க வேண்டும். பாவம் செய்யாதிருக்க, கர்த்தரின் உதவியும், என் முயற்சியும் தேவை.
  3. இயேசு பரிசுத்த ஆவியானவரால் நிறைந்த பின்னர் சோதிக்கப்பட்டார். ஆவியானவரே வனாந்தரத்துக்குக் கொண்டு போனார். நாமும் ஆன்மீகத்தில் சிறப்பாக இருப்பதால் சோதனைகள் வராது என்று நினைக்கக் கூடாது.
  4. காட்டு மிருகங்கள், தனிமை, பசி, சாத்தான் போன்றவற்றை எதிர்கொள்ளாமல் தேவதூதர்களையும் அவர்கள் பணிவிடைகளையும் நாம் சந்திக்க முடியாது.
  5. ஒரு சோதனையோ ஒரு செட் சோதனைகளோ முடிந்ததும் சாத்தான் விலகிப் போய்விட மாட்டான். “பிசாசானவன் சோதனையெல்லாம் முடித்தபின்பு, ‘சிலகாலம்’ அவரை விட்டு விலகிப்போனான்” (லூக்கா 4:13). ஆங்கில மொழி பெயர்ப்பு ஒன்றில் சாதகமான சூழல் வரும் வரை சாத்தான் ஒதுங்கியிருந்தான் என்று சொல்லப்பட்டிருக்கிறது. திரும்ப வருவான். இயேசுவுக்கு பேதுரு வடிவத்தில் சிலுவை வேண்டாம் என்ற சோதனை வந்தது. யூதாஸ் மூலம் காட்டிக் கொடுக்கப்பட்ட சோதனை. கல்லெறிந்து, மலையில் இருந்து தள்ளிவிடப்பட்டு அவரைக் கொல்ல வந்தார்கள் மக்கள். கெத்சமனேயில் பாடுகளைத் தவிர்க்கும் சோதனை வந்தது. எல்லா விதத்திலும் நம்மைப் போன்ற சோதனைகள் அவருக்கு வந்தன.
  6. வேத வசனம், அதைப் பற்றிய தெளிவு சோதனைகளில் இருந்து தப்பிக் கொள்ள நமக்கு உதவும். சாத்தானும் வேதம் அறிந்திருப்பான் ஆகையால் அவனுடன் விவாதம் செய்வதற்காக அல்ல, நாம் நடைமுறைப்படுத்த வேதத்தை அறிந்திருப்போம். அது உதவியாக இருக்கும். மனப்பாடமாக இருக்கும் வேத வசனங்கள் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் நமக்கு கை கொடுக்கும்.
  7. சோதனை மனதளவில் இருப்பது, ஆன்மாவுக்குள் போய், உணர்வுகளில் கலந்து, உடலளவில் செய்யப்படும் போது தான் அது பாவமாகிறது. ஆகவே ஆரம்ப நிலையிலேயே அதை நிறுத்துவது தான் சிறப்பானது.
  8. நாம் எந்தப் பகுதியில் பலகீனமாக இருக்கிறோமோ அந்தப் பகுதியில் தான் சோதனையின் தாக்குதல் முதலாவதாகவும், தீவிரமானதாகவும் இருக்கும். இயேசு பசியாக இருந்தார், அவருக்கு அப்பம் சோதனையாக இருந்தது.
  9. இந்த 40 நாட்கள் தான் லெந்து காலத்துக்கு அடையாளமாக இருக்கின்றது. நாம் கர்த்தருடன் நெருங்கி வர இந்தக் காலம் நமக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
  10. இயேசுவுக்குத் தன் வாழ்வில் எது முக்கியம்? எது எப்போது, எப்படி நிறைவேற வேண்டும் என்ற ஆழமான புரிதல் இருந்தது. தினமும் இரவிலும் அதிகாலையிலும் ஜெபித்தது அவருக்கு இந்த ஞானத்தைக் கொடுத்திருக்க வேண்டும். அத்துடன் வேதாகம அறிவு அவருக்கு மிகச் சிறப்பாக இருந்தது. ஆவியானவர் உடன் இருந்தார். நம் வாழ்வின் அடிப்படை உண்மைகளை சரியாகப் புரிந்து வைத்தால் சோதனைகளுக்குள் விழுவது குறைவாக இருக்கும்.
  11. பரீட்சை முடிந்து வேலைக்கோ மேற்படிப்புக்கோ போவது போல பெரிய சோதனைகளும், சாதனைகளுக்கான வாய்ப்புக்களும் நமக்குக் கொடுக்கப்படும். இயேசு தனது 40 நாட்கள் நடந்த முக்கியமான சோதனைக்குப் பின் 3 வருட ஊழியத்துக்குப்போனார். நம் சோதனைகள் நமக்கு இன்னும் சோதனைகளையும் பொறுப்புகளையும் கொண்டு வரலாம். நம் சோதனைகள் பிறர் வாழ்வில் சிறந்த படிப்பினையைக் கொடுக்கலாம்.

இயேசுவுக்கு வந்த அந்த 3 சோதனைகளையும் பற்றி நான் முன்பே செய்து வைத்திருந்த ஒரு சின்ன ஆராய்ச்சி, இயேசு பயன்படுத்திய பழைய ஏற்பாட்டு வசனங்களின் பின்னணியுடன் ஒப்பிடப்பட்டு சுருக்கமாக:

சோதனை என்பது “தன் காலத்துக்கும், தகுதிக்கும் மீறின தீய கவர்ச்சி” என்று குறிப்பிடப்படலாம். அப்படியே தமிழில் சோதனை என்று இருக்கும் ஒரே வார்த்தைக்கு ஆங்கிலத்தில் குறைந்தது மூன்று வித்தியாசமான அர்த்தங்கள் இருக்கின்றன.

  1. Test
  2. Trail
  3. Temptation 

முதலாவது, கர்த்தர் நம்மைப் பரிசோதிக்கும் ஒரு பரீட்சை - ஆபிரகாம் சோதிக்கப்பட்டார் - ஈசாக்கை பலியிடும்படி கேட்டார் கர்த்தர்.

இரண்டாவதாக, நாம் உத்தமர்களாக இருந்தாலும் கூட நமக்கு பாடுகள் வரத்தான் செய்யும் - யோபு.

மூன்றாவதாக, பாவம் செய்யத் தூண்டும் தீய கவர்ச்சி. யாக்கோபு இதைப் பற்றி மிகத் தெளிவான விளக்கம் கொடுத்திருக்கிறார். இந்த டெம்ப்ட்டேஷன் என்னும் (தீய கவர்ச்சி) சோதனை பற்றி தான் நாம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம். 

  1. அப்பம் / வார்த்தை.

சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான். அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார் (மத்தேயு 4:3-4).

ஐந்து அப்பம் 5,000 பேருக்கு, இரண்டு அப்பம் 4,000 பேருக்கு அற்புதமாக பெருகச் செய்து கொடுத்த அதே கர்த்தர் அந்த வல்லமையைத் தன் சுய நலனுக்காகப் பயன்படுத்தவில்லை. நிச்சயமாக இயேசு 40 நாட்களுக்குப் பின், சாத்தானின் சோதனைக்குப் பின் நல்ல ஒரு சாப்பாட்டை சாப்பிட்டிருப்பார். ஆனால் சாத்தானின் தூண்டுதலினால் அல்ல, அவன் சொன்ன முறைப்படியும் அல்ல (கல்லுகள் அப்பங்களாவது). சாத்தானின் காலத்தின் படியும் அல்ல. பிதாவின் சித்தத்தின் படி, தன் வேளை வரும் போது தான் எதையும் செய்தார் இயேசு.

சிறுமைப்படுத்தப்பட்டு, அன்புள்ள தகப்பனால் தப்புக்களுக்காக சிட்சை செய்யப்பட்டு, பசி வந்த சூழலில், எதிர்பார்ப்பு பல வழிகளில் இருந்த போது, வருத்தம் அடைந்த போது, அற்புதம் நடக்கிறது. வானத்திலிருந்து மன்னா கொடுக்கப்படுகிறது. நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்றது போல, நமக்குக் கிடைக்கும் அற்புதங்களை மதிக்க வேண்டும், அவற்றை வீணாக்கக் கூடாது (அதனால் தான் மீதமுள்ள துணிக்கைகளை சேகரிக்கச் சொன்னாரோ இயேசு?)

ஆனால் தினமும் அற்புதத்தை விரும்பும் நாம், தினமும் அற்புதம் நடந்தால் அதில் சலிப்பு அடைகிறோம். நமது விருப்பத்துக்கு ஏற்ப விதம் விதமாக அற்புதம் நடத்த கர்த்தர் என்ன மந்திரவாதியா? அல்லது நம் வேலைக்காரனா? 
                                            
உபாகமம் 8:1-5
அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்தும்படிக்கு, நீயும் உன் பிதாக்களும் அறியாதிருந்த மன்னாவினால் உன்னைப் போஷித்தார். 5 ஒருவன் தன் புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிட்சிக்கிறார் என்று நீ உன் இருதயத்தில் அறிந்துகொள்வாயாக. 

2. ஜெபம் / பரீட்சை.

பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின்மேல் அவரை நிறுத்தி:  “நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்; ஏனெனில், ‘தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள்’ என்பதாய் எழுதியிருக்கிறது” என்று சொன்னான். அதற்கு இயேசு: “உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே” என்றார் (மத்தேயு 4:5-7).

முறுமுறுப்பு, எதிர்மறை சிந்தனை, பெரிதுபடுத்துதல் அனைத்துமே கர்த்தரை பரீட்சை பார்த்தல் தான்.

யாத்திராகமம் 17:1-7
…ரெவிதீமிலே … ஜனங்களுக்குக் குடிக்கத் தண்ணீர் இல்லாதிருந்தது. 2 அப்பொழுது ஜனங்கள் மோசேயோடே வாதாடி: நாங்கள் குடிக்கிறதற்கு எங்களுக்குத் தண்ணீர் தரவேண்டும் என்றார்கள். … அவர்கள் மோசேக்கு விரோதமாய் முறுமுறுத்து: நீர் எங்களையும் எங்கள் பிள்ளைகளையும் எங்கள் ஆடுமாடுகளையும் தண்ணீர்த் தவனத்தினால் கொன்றுபோட எங்களை எகிப்திலிருந்து ஏன் கொண்டு வந்தீர் என்றார்கள். … இஸ்ரவேல் புத்திரர் வாதாடினதினிமித்தமும், கர்த்தர் எங்கள் நடுவில் இருக்கிறாரா இல்லையா என்று அவர்கள் கர்த்தரைப் பரீட்சை பார்த்ததினிமித்தமும், அவன் அந்த ஸ்தலத்திற்கு மாசா என்றும் மேரிபா என்றும் பேரிட்டான்.                                                  

கர்த்தர் ஒரு குறிப்பிட்ட மரத்தின் கனியை சாப்பிடக் கூடாது என்றார். 
“நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்”(ஆதியாகமம் 2:17).

சாத்தான் பெரிது படுத்துகிறான், “நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ?” (ஆதியாகமம் 3:1-3). “எல்லா மரத்திலயும் பழம் பறிக்கக் கூடாதுன்னு சொல்லிட்டாரோ?”

அம்மணிக்கும் அந்த பெரிதுபடுத்தும் நோய் தொற்றிக் கொண்டது. “தொடவே கூடாதுன்னுட்டாரு” என்றார். ஸ்திரீ சர்ப்பத்தைப் பார்த்து: “நாங்கள் தோட்டத்தில் உள்ள விருட்சங்களின் கனிகளைப் புசிக்கலாம்; 3 ஆனாலும், தோட்டத்தின் நடுவில் இருக்கிற விருட்சத்தின் கனியைக் குறித்து, தேவன்: ‘நீங்கள் சாகாதபடிக்கு அதைப் புசிக்கவும் அதைத் தொடவும் வேண்டாம்’ என்று சொன்னார்” என்றாள். 


ஏசாவுக்குப் பசி இருந்தது உண்மைதான். இவ்வளவு நேரம் பொறுமையாக இருந்தவர், ஒரு அரை மணி நேரம் காத்திருந்து, சமைத்து சாப்பிட்டிருக்கலாம்… ஆனால் “இதோ, நான் சாகப்போகிறேனே, இந்தச் சேஷ்டபுத்திரபாகம் எனக்கு என்னத்திற்கு?” என்கிறார் (ஆதியாகமம் 25:32).


எலியா தன் நிலையைப் பற்றி பெரிதுபடுத்திச் சொல்கிறார் “சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்காக வெகு பக்திவைராக்கியமாயிருந்தேன்; இஸ்ரவேல் புத்திரர் உமது உடன்படிக்கையைத் தள்ளிவிட்டார்கள்; உம்முடைய பலிபீடங்களை இடித்து, உம்முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தினால் கொன்றுபோட்டார்கள்; நான் ஒருவன்மாத்திரம் மீதியாயிருக்கிறேன்” (1 இராஜாக்கள் 19:10).

ஆனால் கர்த்தரோ அவருக்கு ஒரு உண்மையைச் சொல்கிறார், “ஏழாயிரம்பேரை இஸ்ரவேலிலே மீதியாக வைத்திருக்கிறேன்”(1 இராஜாக்கள் 19:18) என்றார்.


3. சேவித்தல் / உணர்வு / மறதி

பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து:  “நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன்” என்று சொன்னான். அப்பொழுது இயேசு: “அப்பாலே போ சாத்தானே; ‘உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக’ என்று எழுதியிருக்கிறதே” என்றார்.

திருப்தி (மனரம்மியம் அல்ல) ஏற்படும் போது கர்த்தரை ஆராதிப்பதைவிட அவர் தந்த ஆசீர்வாதங்களை ஆராதிக்கிறோம். உறவுகளை, உடைமைகளை, உயர்வுகளை ஆராதிக்கிறோம். அது தான் நம்மைப் படுகுழிக்குள் தள்ளிவிடும். நன்மைகளே தீமைகளுக்கான காரணங்களாக மாறிவிடும் அபாயம் தவிர்க்கப்பட வேண்டும் என்றால், நன்மைகளைத் தரும் நல்ல கர்த்தரை மட்டுமே நாம் ஆராதிக்க வேண்டும்.“நீ கட்டாத வசதியான பெரிய பட்டணங்களையும், நீ நிரப்பாத சகல நல்ல வஸ்துக்களாலும் நிரம்பிய வீடுகளையும், நீ  வெட்டாமல் வெட்டப்பட்டிருக்கிற துரவுகளையும், நீ நடாத திராட்சத்தோட்டங்களையும் ஒலிவத்தோப்புகளையும், அவர் உனக்குக் கொடுப்பதினால், நீ சாப்பிட்டுத் திருப்தியாகும்போதும், நீ அடிமைப்பட்டிருந்த வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து உன்னைப் புறப்படப்பண்ணின கர்த்தரை மறவாதபடிக்கு எச்சரிக்கையாயிரு. உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவருக்கே ஆராதனைசெய்து, அவருடைய நாமத்தைக்கொண்டே ஆணையிடுவாயாக (உபாகமம் 6:10-13). 

ஆராதனை இல்லையென்றால் ஆபத்து, அசிங்கம் தான். இதோ 2,000 வருடங்களுக்கு முந்திய இந்தப் பகுதி இன்றைய நிலையை அப்படியே சொல்வது போல இருக்கின்றது அல்லவா? இது உலகத்தார் அனைவருக்கும், கிறிஸ்தவர்களுக்கும் பொருந்தக் கூடியது. நாம் விக்கிரகங்களை, சிலைகளை வணங்குவதில்லை. ஆனால் பொருட்களையும், நபர்களையும், பெருமைகளையும் சிலைகளாக வைத்து வணங்கிக் கொண்டு தான் இருக்கிறோம். கர்த்தரை ஆராதிப்பது ஒன்று தான் இவற்றை எல்லாம் வைக்க வேண்டிய இடத்தில் வைக்க உதவி செய்யும். கர்த்தரின் இடத்தில் எதுவும், யாரும் இருக்கக் கூடாது.

ரோமர் 1:21-26
அவர்கள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள், உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது. 22 அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி, 23 அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள். 24 இதினிமித்தம் அவர்கள் தங்கள் இருதயத்திலுள்ள இச்சைகளினாலே ஒருவரோடொருவர் தங்கள் சரீரங்களை அவமானப்படுத்தத்தக்கதாக, தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார். 25 தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென். 26 இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்; அந்தப்படியே அவர்களுடைய பெண்கள் சுபாவ அநுபோகத்தைச் சுபாவத்துக்கு விரோதமான அநுபோகமாக மாற்றினார்கள். 27 அப்படியே ஆண்களும் பெண்களைச் சுபாவப்படி அநுபவியாமல், ஒருவர்மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி, ஆணோடே ஆண் அவலட்சணமானதை நடப்பித்து தங்கள் தப்பிதத்திற்குத் தகுதியான பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள். 28 தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார். 29 அவர்கள் சகலவித அநியாயத்தினாலும், வேசித்தனத்தினாலும், துரோகத்தினாலும், பொருளாசையினாலும், குரோதத்தினாலும் நிறையப்பட்டு; பொறாமையினாலும், கொலையினாலும், வாக்குவாதத்தினாலும், வஞ்சகத்தினாலும், வன்மத்தினாலும் நிறைந்தவர்களுமாய், 30 புறங்கூறுகிறவர்களுமாய், அவதூறு பண்ணுகிறவர்களுமாய், தேவபகைஞருமாய், துராகிருதம்பண்ணுகிறவர்களுமாய், அகந்தையுள்ளவர்களுமாய், வீம்புக்காரருமாய், பொல்லாதவைகளை யோசித்துப்பிணைக்கிறவர்களுமாய் பெற்றாருக்குக் கீழ்ப்படியாதவர்களுமாய், 31 உணர்வில்லாதவர்களுமாய், உடன்படிக்கைகளை மீறுகிறவர்களுமாய், சுபாவ அன்பில்லாதவர்களுமாய், இணங்காதவர்களுமாய், இரக்கமில்லாதவர்களுமாய் இருக்கிறார்கள்.

 32 இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் மரணத்திற்குப் பாத்திரராயிருக்கிறார்களென்று தேவன் தீர்மானித்த நீதியான தீர்ப்பை அவர்கள் அறிந்திருந்தும், அவைகளைத் தாங்களே செய்கிறதுமல்லாமல், அவைகளைச் செய்கிற மற்றவர்களிடத்தில் பிரியப்படுகிறவர்களுமாயிருக்கிறார்கள்.

No comments: