Friday, March 15, 2019

#40நாள்இயேசு நாள் 9

#40நாள்இயேசு

நாள் 9

மாற்கு 1:35
அவர் அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார்.

பழக்கம்

ஒரு நேரம்
ஒரு இடம்

“A Place for everything and everything in it’s place” என்று ஒரு பிரபலமான வாக்கியம் உண்டு. மிகச் சாதாரணமாகத் தெரிந்தாலும் இது தினசரி நாம் பயன்படுத்தும் பொருட்களைத் தொலைத்துவிட்டுப் பெரும் போராட்டத்துடன் இருக்கும் பலருக்கு மிகச் சிறந்த விடுதலையின் தத்துவம்.

“எல்லாவற்றுக்கும் ஒரு இடம் இருக்க வேண்டும். எல்லாம் அதனதன் இடத்தில் இருக்க வேண்டும்.”

இது நமது வாழ்வின் பல சிக்கல்களுக்குத் தீர்வாக இருக்க முடியும். எனக்கு இது மிக உதவியாக இருந்திருக்கிறது. இந்த லெந்து காலத்தில் இதை சிறிது ஆழமாகவே நான் சிந்திக்கவும், செயல்படுத்தவும் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். (நண்பர் தாஸ் சொன்ன அறிவுரையின் படி 5S என்ற ஜப்பானிய முறையைப் பின்பற்றிக் கொண்டிருக்கிறேன். பெரும் மாற்றங்களும், நல்ல நிகழ்வுகளும் விளைவாக ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. Youtubeஇல் இதைப் பற்றி பல விடியோக்கள் இருக்கின்றன).

இடம் மட்டுமல்ல, நேரமும் இதைப் போலவே முக்கியமானது. எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் இருக்க வேண்டும். எல்லாம் அதனதன் நேரத்தில் செய்யப்பட வேண்டும். 

இந்த வாக்கியங்களின் தொடச்சியாக இன்னும் சில வாக்கியங்களையும் நான் முயற்சி செய்ய யோசித்து உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். இன்றைய பகுதிக்கு அது பொருத்தமாக இருக்காது என்பதாலும் அதிக இடத்தை அடைக்கும் என்பதாலும் இவ்வளவு போதும். 

இயேசு அதிகாலையில் இருட்டாக இருக்கும் போதே ஜெபம் செய்யப் போனார்.

ஏன் அதிகாலை? இரவு நேர ஷிஃப்ட் வேலைகளுக்குப் போகின்றவர்களுக்கு இது எப்படி ஒத்து வரும்? மதியம் தான் எனக்கு வசதியான, அமைதியான, தொந்தரவு இல்லாத நேரம் என்றெல்லாம் நீங்கள் சொல்லலாம். இங்கே நம் காலத்தைவிட எத்தனையோ வித்தியாசமான 2,000 வருடங்களுக்கு முந்திய நிலையில், இரவைப் பகலாக்கும் விளக்குகள் இல்லாத காலத்தில். அனைவரும் இருட்டிய பின் உறங்கத்தான் போக வேண்டும் என்ற கட்டாயம் இருந்த காலத்தில், வேலைக்கு ஷிஃப்ட் முறை இல்லாத காலத்தில் (போர் வீரர்கள் தவிர) இயேசு இதைச் செய்திருக்கிறார். நாம் நம் காலத்துக்கு ஏற்ப சில மாற்றங்களைச் செய்து கொள்ளலாம்.  ஆனால் முக்கிய விதியை மட்டும் விட்டுவிடக் கூடாது.

அதிகாலை என்பது முன்னுரிமையைக் குறிக்கிறது. ஒரு நாளின் பல நிகழ்வுகளும், நபர்களும் நம்மை சந்திப்பதற்கு முன்பே கர்த்தரிடம் ஜெபிப்பது என்பது தான் இங்கே முக்கியம். நீங்கள் ஜெபிக்கும் நேரம் மற்ற எல்லாம் முடிந்து மிச்சம் மீதியான நேரமாக இருக்கக் கூடாது. அது தான் முக்கியம். அதிகாலை தான் ஜெபிக்க வேண்டும் என்ற கண்டிப்பு இல்லை என்று சொல்லும் போது உங்களுக்கு அதிகாலை என்பது வசதியாக இருந்தாலும் நான் அதிக நேரம் தூங்கிவிட்டு வசதிப்படும் நேரம் ஜெபிப்பேன் என்று சொன்னால் அது நிச்சயமாகத் தவறு. உங்கள் ஜெபம் கண்டிப்பாக இருக்க வேண்டிய அளவு சிறப்பாக இருக்காது.

தினசரி இதை ஒரு பழக்கமாக மாற்றும் போது, அது இல்லாமல் முடியாது என்று நம் உடல், உள்ளம், ஆன்மா, இதயம் யாவும் பழகிப் போகின்றது. இது மிகவும் நல்லது. நம் உணவு நமக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், சாப்பிடுவது உடலுக்குத் தேவையாக இருப்பதால் நாம் சாப்பிடுகிறோம். அதைப் போலவே துவக்கத்தில் ஜெபம் கடினமாக இருந்தாலும் பழக்கம் ஒரு சிறந்த ஜெப நேரத்தை நமக்குத் தரும்.

சிறு வயதிலேயே அம்மா நமக்கு பழக்கிவிடும் பல உணவுகள், செயல்கள், விளையாட்டுகள், பொழுது போக்குகள் போன்றவை உங்களை கடைசிவரை பிடித்து வைத்திருக்கும். அதன் அருமை தெரிந்தவர்களுக்கு இது புரியும். என் தாய் எனக்கு முருக்கு, உப்புமா, வாசிப்புப் பழக்கம் போன்றவற்றை அறிமுகம் செய்ததால் இன்றும் நான் இந்த மூன்றுக்கும் நெருக்கமானவனாக இருக்கிறேன். 

எனது வாசிப்பு பழக்கம் எனக்கு எழுத்துப் பழக்கத்தைத் தந்தது. அது என் பணியாகவே மாறிப் போனது. 40 நாட்கள் நாம் தொடர்ச்சியாகச் செய்யும் எதுவும் நமக்குப் பழக்கமாக மாறிப் போகும் நம் வாழ்வில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பார்கள். இந்த லெந்துக் காலம் நமக்கு அப்படிப்பட்ட பழக்கங்களை, குறிப்பாக ஜெபத்தை அறிமுகம் செய்யட்டும்.

ஜெபத்தை ஒரு வேலையாக நினைக்காமல், கிளிப்பிள்ளையாக சொல்லாமல், இறைவனுடன் ஒரு உரையாடலாக முயற்சித்துப் பாருங்கள். நீங்கள் வாசித்த வேத பகுதிகளிலிருந்து கேள்விகள், உங்கள் கருத்துக்கள், ஜெபங்கள் உருவாகலாம். உங்கள் வாழ்வின் பிரச்சனைகள், மகிழ்ச்சிகள், புதிய கருத்துக்கள், நண்பர்கள், நிகழ்வுகளைக் கர்த்தருடன் பகிர்ந்து கொள்ளும் நேரமாக இருக்கலாம். அப்படியே உங்கள் மனதை உறுத்தும் தேவைகள், நீங்கள் பார்க்கும், வாசிக்கும் அநீதிகள் பற்றி கோபத்துடன் கத்தலாம். அழலாம், சிரிக்கலாம், குழம்பலாம், தெளிவடையலாம்…

இயேசு தான் தங்கியிருந்த வீட்டை விட்டு காட்டுக்குள் போய் ஜெபம் செய்தார்.

நமக்கு வசதியான இடத்தை, தூக்கத்துக்கான இடத்தை, பிறர் குறுக்கிடும் இடத்தை விட்டுவிட்டால் தான் ஜெபம் சிறப்பாக இருக்கும். தனி ஜெபத்துக்கு நிச்சயமாக மற்றவர்கள் இருக்கும் இடம் ஒத்து வராது. ஆனால் கூட்டுக் குடும்பமாக, ஒரே அறை தான் வீடு என்று இருக்கும் மக்கள் நிச்சயமாகத் தங்களைச் சுற்றி ஒரு காட்டை உருவாக்க வேண்டும் - கற்பனையில். இதற்கு அனைவரும் உறங்கும் அதிகாலை நேரம் மிகவும் பொருத்தமானது. ஜெபத்துக்கு என்று உங்கள் வீட்டில் தனி இடம் இல்லை என்றால், வேறு பொதுவான இடங்களுக்குப் போகலாம். அந்த இடத்தின் பாதுகாப்பு, அமைதி போன்றவற்றைக் கவனத்தில் வையுங்கள். அங்கேயும் வேறு யாரும் உங்கள் நேரத்தை எடுத்துவிடக் கூடாது என்பதை மறந்து விடாதீர்கள். 

அதே நேரத்தில் வேறு இடத்துக்குப் போவதற்கு அதிக நேரம் செலவிட்டு, ஜெபிக்க நேரம் இல்லாமலும் போய்விடக் கூடாது.

இங்கே நாம் கவனிக்க வேண்டியது, ஜெபம் என்பதை நாம் அலட்சியமாக நினைத்துவிடக் கூடாது என்பது தான். அதற்கென்று ஒரு நேரமும் இடமும் ஒதுக்கப்படும் போது நிச்சயம் நாம் ஜெபத்தை முக்கியமாக வைக்கிறோம் என்பது நமக்கும் பிறருக்கும் கர்த்தருக்கும் தெரியவரும். உங்கள் ஜெப நேரத்தையும் இடத்தையும் பிறர் ஆக்ரமிக்க மாட்டார்கள். 

இயேசு நிச்சயமாகத் தன் 30 ஆவது வயது வரை வேதாகமத்தை மனப்பாடமாகப் படித்திருக்க வேண்டும். அவர் சாத்தானை எதிர்கொள்ளும் போதும், தன் போதனைக்கு வலுசேர்க்கும் போதும், தவறான புரிதல்களை சரி செய்யும் போதும் வேதாகமத்தின் வசனங்களைத் தாராளமாகப் பயன்படுத்தினார்.

நமது ஜெப நேரத்தைப் போலவே வேத வாசிப்பு, மனப்பாடம், ஆராய்ச்சி, தியானம் போன்றவையும் முக்கியம். அவற்றுக்கும் இதைப் போலவே நேரமும் இடமும் ஒதுக்க வேண்டும். ஜெப நேரமும் வேத தியான நேரமும், இடமும் அருகருகே அல்லது ஒன்றாக இருப்பது நல்லது.

சில சூழ்நிலைகளில் இயேசு முழு இரவும் ஜெபித்தார். பொது மக்கள் நடுவில் சில வார்த்தைகள் சொல்லி ஜெபித்தார். அதற்குக் கர்த்தர் இடிமுழக்கம் போல வானத்திலிருந்து பதில் கொடுத்த சில நிகழ்வுகளும் உண்டு. இவைகள் அனைத்துமே நமது ஜெப வாழ்க்கை இயந்திரத்தனமாகப் போய்விடக் கூடாது என்பதை உணர்த்துபவைகள். இது தான் விதி, இப்படித்தான் செய்ய வேண்டும் என்று சாதித்த அந்த காலத்து ஆன்மீகத் தலைவர்களை இயேசு மூக்குடைத்து அனுப்பினார். 

அதே நேரத்தில் ஜெபம் என்பது கட்டாயம் செய்யப்பட வேண்டியது என்பதைத் தெளிவாக்கினார் இயேசு. நீங்கள் ஜெபித்தால் இப்படி ஜெபியுங்கள் என்று நமக்கு தேர்ந்தெடுப்பைக் கொடுக்கவில்லை. நீங்கள் ஜெபிக்கும் போது… என்று கட்டளையாகச் சொல்கிறார். நீங்கள் உபவாசிக்கும் போது…. இப்படிச் செய்யுங்கள் என்று போதிக்கிறார்.

உலகத்தின் மாபெரும் சாதனையாளர்கள் தங்கள் வாழ்க்கையில் பல நல்ல விஷயங்களைப் பழக்கங்களாக மாற்றியதால் தான் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்கிறார் 7 Habits of highly effective people என்ற புத்தகத்தை எழுதிய ஸ்டீஃபன் காவி என்னும் (Stephen Covey) என்ற பிரபல எழுத்தாளர். 25 ஆண்டுகளாக ஆராய்ந்து பெரும் தலைவர்களின் வாழ்க்கையிலிருந்து இவர் கண்டறிந்தவற்றைப் புத்தகமாக எழுதியிருக்கிறார். இலட்சக்கணக்கில் பல மொழிகளில் வெளியான இந்த புத்தகம் பழக்கத்தின் முக்கியத்துவத்தை, நன்மைகளைச் சொல்கிறது.

ஜெபத்தையும் வேதத்தையும் பழக்கமாக்குவோம். இந்த லெந்து காலத்தை அதற்கு சாதகமாக்குவோம். ஆன்மீகத்தில் சிறப்பு காண்போம்.

இயேசுவுக்கே ஜெபம் தேவை என்றால் நமக்கும் தேவை தானே! அதைப் பழக்கமாக்குவது இன்னும் முக்கியம் தானே!


No comments: