Saturday, March 9, 2019

#40நாள்இயேசு

நாள் 4:

நாள் 4:

இயேசுவின் அருட்பணியின் துவக்கம்:

இயேசுவின் பணியும் அவரது செய்தியும் மிக எளிதாக, ஆனால் நம்பிக்கை இல்லாவிட்டால் புரியாததாகத் தான் இருந்திருக்கிறது. அவர் மேல் நம்பிக்கை இல்லாதவர்கள் அவர் சொல்லும் கதைகள் புரிந்து அதனால் அவரைக் கொல்லத் திட்டமிடுவார்கள் ஆனால் அதன் கருத்தை ஏற்றுக் கொள்ளவோ வாழ்க்கையை மாற்றிக் கொள்ளவோ அவர்கள் ஆயத்தமாக இல்லை.  இவ்வளவுக்கும் அவர்கள் வேதத்தைக் கரைத்துக் குடித்திருந்தவர்கள், ஆன்மீககத்தலைவர்கள்;  ஆனால் வரை நம்பினவர்களோ, நம்பிக்கையில் தடுமாற்றம் உள்ளவர்கள், அதிகம் படிக்காதவர்கள்; ஆனால் உண்மையிலேயே ஆன்மீகத் தேடலில் இருந்தவர்கள். அவர்களைத் தான் இயேசு தனது சீடர்களாகத் தேர்ந்தெடுத்தார். சீடர்களான பின்னர் அவர்களது நம்பிக்கையும், ஞானமும் கொஞ்சம் உருவானது என்றால், இயேசு உயிர்த்து எழுந்து அவர்களை விட்டுச் சென்றதும் அளவுக்கு அதிகமாக, இயற்கைகு அப்பாற்பட்ட விதத்தில் பெருகியது என்று சொல்லலாம்.

இயேசுவைப் பலர் பின்பற்றவும், அவரைப் பலர் எதிர்க்கவும் பல காரணங்கள் இருந்தன:

இயேசுவை எளிதில் பார்க்க முடிந்தது.
அவர் வார்த்தைகள் உவமைகளால் விளக்கப்பட்டன.
அவர் வார்த்தைகளின் அதிகாரம் இருந்தது.
அவர் அணுகுமுறையில் பெரும் வித்தியாசம் இருந்தது: யாரையும்ம் குற்றவாளிகளாகத் தீர்க்கவில்லை, ஆனால், அவர் போதனையைக் கேட்டுப் பின்பற்றுபவர்கள் குற்றவாளியாகத் தொடரக் கூடாது.
குற்றத்துக்கு வேறு வரையறைகள் கொடுக்கப்பட்டன.
கர்த்தருடனான உறவுக்கு வேறு விளக்கம் கொடுக்கப்பட்டது: அவர் நம் தந்தை என்ற கருத்து இயேசுவால் தான் மிகவும் வெளிப்படையாகப் போதிக்கப்பட்டது.
ஆன்மீகத்துக்கான அடிப்படையும், வெளிப்படையான செயல்களும் எப்படி இருக்க வேண்டும் என்று வித்தியாசமான ஒரு போதனையை அவர் கொடுத்தார்.


யோவான் ஸ்நானகனின் சீடர்கள் இருவர் இயேசுவின் முதல் சீடர்களாகின்றனர். இயேசுவைப் பற்றி யோவான் ஸ்நானகன் சொன்ன ஒரு வரிச் செய்தி அவர்களை இயேசுவின் பின்னே செல்ல வைத்தது.

அந்த செய்தி இது தான்:

“இதோ (உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற) தேவ ஆட்டுக் குட்டி.”

ஒருமைப் பன்மை பிரச்சனைகள், இலக்கண முரண்கள் வேதத்தில் வரும் இடங்களில் சுவராசியமான சில உண்மைகள் தெரிகின்றன:
  1. உலகத்தின் பாவத்தை (பாவங்களை அல்ல) சுமந்து தீர்க்கிறவர் இயேசு. இங்கே பாவங்கள் என்று பன்மையில் சொல்லப்படாமல், ஒருமையில் சொல்லப்பட்டிருக்கிறது. கர்த்தரை விட்டு நீங்கி இருப்பது தான் பாவம். அது ஒரு நிலை. பாவங்கள் என்பது அந்த நிலையில் இருப்பவர்கள் செய்யும் பல செயல்கள். இயேசு எப்போதுமே இந்த செயல்களைப் பற்றி அல்ல, அந்த நிலையைப் பற்றி தான் அதிகம் பேசியிருக்கிறார். அதனால் தான் அவர் பாவிகளின் தோழன் என்று அழைக்கப்பட்டார். விபச்சாரிகள், வரி வசூலிப்பவர்கள், பாவிகள் என்று சொல்லப்பட்ட மக்களிடம் அவர் பழகத் தயங்கவில்லை. அவர்களும் அவரிடம் வருவதில் எந்தத் தடையும் இல்லை.
(இதைப் போல ஒருமை/பன்மை- இலக்கண முரண்கள் இருக்கும் மற்ற இடங்கள்: ஆவியின் கனி ஒன்பது. சர்வாயுத வர்க்கம்)

இயேசுவின் வருகைக்குப் பல ஆயத்தங்கள் தீர்க்கதரிசிகள் மூலம் யூதர்களிடம் நடந்திருந்தன. ஒன்று மேசியா என்னும் ஆன்மீக அரசன் வந்து தங்களை ஆட்சி செய்யும் ரோமர்களிடமிருந்து விடுதலை செய்வார் என்ற எதிர்பார்ப்பும், தீர்க்கதரிசனங்களும் ஒரு கூட்டத்தாரை, அரசியல் தேடலை முன்வைத்துக் காத்திருந்தார்கள். இறைவனின் அரசு வரும் என்று எதிர்பார்த்திருந்தவர்கள் - இவர்கள் ஆன்மீகத் தேடலையே முதன்மையாக வைத்திருந்தவர்கள்.
இயேசு தேர்ந்தெடுத்தவர்களின் இந்த இரண்டாம் வகைத் தேடல் உள்ளவர்கள் தான் இருந்தார்கள். 

இயேசுவைப் போதகர் என்று தான் முதலில் ஏற்றுக் கொண்டனர். அவரை மேசியா என்று அழைத்தார்கள்.

முதல் கேள்வியே, “போதகரே நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?” என்பது தான்.

பதில் “நீயே வந்து பார்.”

இயேசுவைக் காண்பது எளிது. அவரோடு இருப்பதும் எளிது. சென்று பார்த்தார்கள், உடன் தங்கினார்கள். நாம் அல்ல, கர்த்தர் தான் தம்மை நமக்குக் காட்ட வேண்டும். நாம் அவரோடு உடன் செல்ல ஆயத்தமாக இருக்க வேண்டும். 

பேதுரு என்னும் சீமோன்:

நாணல் போன்ற ஒருவர் பாறையைப் போல மாறுகிறார். சீமோன் என்ற பெயருக்கும் பேதுரு என்ற பெயருக்கும் உள்ள அர்த்தம் இது தான். பேதுருவின் எதிர்கால குணம் எப்படி இருக்கும் என்பதை அறிந்திருந்தார் இயேசு. அதனால் தான் பேதுருவின் கோமாளித்தனமான செயல்களையும், யோசிக்காமல் பேசும் வார்த்தைகளையும் இயேசு பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் உடன் வைத்திருந்தார்.

நத்தானியேல்:

இவர் அத்திமரத்தின் கீழ் என்ன செய்தார் என்பது முக்கியமல்ல. அவர் தனியாக இருந்த அந்த இடம் பற்றி யாருக்குமே தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் இயேசுவுக்குத் தெரிந்திருந்தது. அதைவிட நத்தானியேலின் குணம் என்ன என்பது பழகாமலேயே இயேசுவுக்குத் தெரிந்தது. “கபடற்ற உத்தம இஸ்ரவேலன்” நத்தானியேலைப் பற்றி யாரும் இப்படிச் சொல்லியிருக்க மாட்டார்கள். இது நத்தானியேலுக்கு பெரும் ஆச்சரியத்தைத் தந்தது. “நீர் தான் அய்யா தேவ குமாரன், நீர் தான் அய்யா யூதருக்கு அரசன்” என்று சொல்லி அவர் காலில் விழுந்துவிட்டார். இயேசுவோ இதிலும் மேலாவைகளைக் காண்பாய் என்று சொன்னார்.

அந்திரேயா:

யான் பெற்ற இன்பம் இவ்வையகத்துக்குக் கிடைக்கிறதோ இல்லையோ என் சகோதரனுக்குக் கிடைக்க வேண்டும் என்று நினைத்தார். துணையாக சகோதரனே வந்தால் நன்றாக இருக்கும் என்று கூட நினைத்திருக்கலாம். இயேசுவை சந்தித்ததும் அவர் செய்த முதல் வேலை தன் சகோதரன் பேதுருவைப் போய் அழைத்து வந்தது தான்.

பிலிப்பு:

பிலிப்பு தான் சந்தித்த மேசியாவை அந்திரேயாவுக்கு அறிமுகம் செய்கிறார். தனித்தனியாக இப்படி நடக்கின்ற அறிமுகங்கள், அவர்களுக்கிடையே இருந்த உறவுகள் தான் இந்த சிறிய குழுவை உயிர்ப்புடன் வைத்திருந்தது.


கலிலேய மாநிலத்தில் இருந்த நாசரேத்துக்கு நல்ல பெயர் இல்லை. அதனால் தான் அங்கிருந்து நன்மை வருமோ என்ற கேள்வி நத்தானியேலுக்கு இருந்தது. யூதேயா மாநிலம் தான் ஆன்மீகத்திற்கும் அரசியலுக்கும் தலைமை இடம் போல இருந்தது. ஆனால் இயேசுவோ தன் அருட்பணிக்குத் தேர்ந்தெடுத்ததும், தனது ஊர் என்று சொன்னதும் கலிலேயா மாநிலத்திலிருந்த நாசரேத். அவர் தன் சீடர்களுடன் அதிகம் தங்கியிருந்ததும் கலிலேய மாநிலத்தின் கப்பர் நகூமில் தான். அவர் அதிக அற்புதங்கள் செய்ததும் அந்த மாநிலத்தில் தான்.

அற்புதம், அடையாளம், சத்தியம்:

இயேசு செய்த அனைத்து அற்புதங்களும் ஒரு அடையாளமாக, அவரைப் பற்றியோ அவர் போதனைகளை விளக்கவோ தான் செய்யப்பட்டன. அற்புதங்கள் முக்கியமல்ல, அற்புதங்களைச் செய்பவர் தான் முக்கியம் என்பது தான் இதன் அர்த்தம்.

இங்கே, கானாவூரில் நடந்த அற்புதத்தில் பல உண்மைகளை நாம் கண்டு கொள்ள முடியும்:

  1. தேவை உள்ள இடத்தில், குறை உள்ள இடத்தில் தான் அற்புதம் நடக்கும்.
  2. இயேசு இருக்கும் இடம் அற்புதம் நடக்கும்.
  3. நம் நிலைமையை இயேசுவிடம் சொல்ல வேண்டும்.
  4. அவர் நேரத்தில் தான் நமக்கு அற்புதம் செய்வார். நமக்கு வசதியான நேரத்தில் அல்ல, அவசரத்துக்கு அல்ல.
  5. அவர் நேரத்துக்குக் காத்திருக்கும் நேரம் அவர் சொல்பவற்றைச் செய்ய வேண்டும்.
  6. அற்புதத்துக்குப் பிந்திய நிலை நிச்சயமாக சிறப்பாக இருக்கும்.
  7. கர்த்தரின் நேரம் என்பது நம் நேரத்தைவிட வித்தியாசமானது.

இயற்கைக்கு எதிரானது அல்ல, இயற்கைக்கு மேலானது தான் அற்புதம் என்பது. சி எஸ் லூயிஸ் சொல்கிறார்: “இயற்கையாகத் தண்ணீர் திராட்சைச் செடியில் நுழைந்து திராட்சை ரசமாக மாற ஆகும் நேரத்தைக் கர்த்தர் சுருக்கிவிட்டார். கர்த்தருக்கு அது சாதாரணம் தானே!”

நாம் நம் தேவைகள், குறைகள் மாற எதிர்பார்க்கும் வழிகளைவிட, அவசரத்தைவிட, கர்த்தரின் நேரம் என்பது எவ்வளவோ மேலானது. நமது குறுகிய அறிவை வைத்துக் கொண்டு கர்த்தருக்கு ஆலோசனை கொடுப்பதைவிட, எளிய முறையில், மரியாள் சொன்னது போல, “அவர் என்ன சொல்கிறாரோ அதை” செய்வோம். அது புரிந்து கொள்ள முடியாததாக, முட்டாள்த்தனமாகத் தெரிந்தாலும்… தண்ணீரை எடுத்து ஊற்றி வைத்தவர்களுக்கு அது சாதாரண வேலை. ஆனால் அது தான் கர்த்தர் அற்புதம் செய்த சூழல்.

நம் கீழ்ப்படிதல் எந்த நிலையில் இருக்கிறது? சொன்னதை செய்கிறோமா அல்லது அவர் செய்யப் போவதை சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமா?

தினமும் பிரியாணி சாப்பிட்டால் அலுத்துப் போகும். தினமும் அற்புதங்களை எதிர்பார்த்திருப்பது ஆன்மீகத்தை சலிக்கச் செய்துவிடும். சின்னச் சின்ன, சாதாரண செயல்களை அவர் சொல்வதை செய்து கொண்டிருந்தால் நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ அவர் அவற்றை அற்புதங்களின் சூழல்களாக மாற்றுவார்.

தேவாலயத்தில் இயேசு:

இயேசு சிறுவனாக இருந்த போதே எருசலேம் தேவாலயத்தில் நடக்கும் வியாபாரத்தைக் கவனித்திருக்க வேண்டும். அவர் அம்மா தேடி வந்த போது , நான் என் பிதாவின் வீட்டில் இருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா என்று கேட்டார். அதே வார்த்தையை மீண்டும் இங்கு பயன்படுத்துகிறார். “என் பிதாவின் வீட்டை வியாபாரச் சந்தையாக்காதீர்கள்.”

ஆலயத்தைப் பற்றி இயேசு பேசிய போது:

  1. எருசலேம் தேவாலயம்
  2. தன் உடலாகிய ஆலயம்
  3. நம் உடலாகிய ஆலயம்
ஆகியவற்றைப் பற்றி குறிப்பிட்டார் என்று எடுத்துக் கொள்ளலாம்.

ஆலயத்தைப் பற்றிய வைராக்கியம் அவருக்கு இருந்தது. எருசலேம் தேவாலயத்தின் அசுத்தங்களை அகற்றினார். தன் உடலைப் பரிசுத்தமாகக் காத்துக் கொண்டார். நம் உடலையும் நாம் பரிசுத்தமாக வைத்துக் கொள்ள எதிர்பார்க்கிறார்.

நம் உடலில் வியாபாரம் எதுவாக இருக்க முடியும்? கர்த்தரை வைக்க வேண்டிய இடத்தில் பணத்தையும் பணத்தின் மதிப்பையும், பணத்துக்கு சமமானவற்றையும் வைப்பது தான் வியாபாரம். கடவுளின் இடத்தில் பணம் இருப்பதால் தான், தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் உங்களால் ஊழியம் செய்ய முடியாது என்கிறார் இயேசு.

நம் திருச்சபைகளிலும் மறைமுகமாக, கர்த்தரின் முக்கியத்துவம் பணத்துக்குப் போகின்றது. வெளிப்படையாக ஊழல்களைக் காண்கிறோம். பரிசுத்த ஆவியானவர் தங்கும் ஆலயங்கள் பல இணைந்திருப்பது தான் திருச்சபை. தனித்தனி நபர்களாக நமது உடல்கள் பரிசுத்தமாக இருந்தால் தான் நாம் சேர்ந்து கூடி இருக்கும் திருச்சபையின் ஆலயமும் சுத்தமாக இருக்கும். 

விசுவாசம்:

விசுவாசம் என்றால் என்ன என்பதைப் பற்றி நாம் இப்போது வைத்திருக்கும் புரிதலுக்கும் இயேசுவின் வரலாறு எழுதப்பட்டிருக்கும் நற்செய்தி நூல்களில் சொல்லப்பட்டிருக்கும் விசுவாசத்துக்கும் பெரும் வித்தியாசம் இருப்பதாகத் தோன்றுகிறது.

இயேசு உயிருடன் மக்கள் நடுவில் இருந்த போது அவர்கள் அவரை விசுவாசித்ததற்கும், அவர் மரித்து உயிர்த்த பின்னர் அவரைக் கர்த்தர் என்று ஏற்றுக் கொண்டவர்களின் விசுவாசமும் வெவ்வேறாகத் தெரிகின்றது. எது எப்படியோ, இயேசுவை விசுவாசித்தவர்களைப் பற்றி ஒரு பட்டியல் எடுத்தால் நன்றாக இருக்கும்.

அவர் சீடர்கள் எப்படி, ஏன் விசுவாசித்தார்கள்? - அற்புதங்களைக் கண்டு, போதனைகளைக் கேட்டு, அவர் வாழ்க்கையைப் பார்த்து. அவர்கள் விசுவாசமும் - அற்ப விசுவாசம், கடுகளவு விசுவாசம், தடுமாறும் விசுவாசம் என்று தான் இருந்தது.

நிக்கோதேமு பரிசேயர்களின் ஒரு பிரதிநிதியாக ஆனால் மற்ற பரிசேயர்களைவிட வித்தியாசமானவராக இயேசுவை சந்திக்க வந்திருக்கிறார்:
“நீர் தேவனிடத்தில் இருந்து வந்த போதகர் என்று அறிவோம்.” - அறிந்திருக்கிறார்கள் ஆனால் விசுவாசிக்கவில்லை. நம்பிக்கை இல்லாத அறிவு எத்தனை ஆபத்தானது என்பதைத் தான் இயேசு விளக்கினார். பிரபலமான யோவான் 3:16 இல்… “விசுவாசிக்கிறவன் எவனோ…. அவன்” … என்று.

விசுவாசம் பற்றி அந்த அதிகாரம் முழுவதும் இயேசு விளக்குகிறார். அதை இன்னும் ஆழமாகப் பார்க்க வேண்டும்.


No comments: