Tuesday, March 12, 2019

#40நாள்இயேசு நாள் 7

#40நாள்இயேசு

நாள் 7

பழகப்பழகப் பாலும் புளிக்கும். சொந்த ஊரில் எந்த பிரபலத்துக்கும் புகழ் இருக்காது என்பது போல இயேசுவை ஒரு சாதாரண நபராகப் பார்த்த நாசரேத் ஊர்க்காரகள் அவரைக் கொலை செய்யவும் முயற்சி செய்தார்கள். ஆனால் கலிலேயா என்னும் அந்த மாநிலத்திலிருந்து யூதேயாவிலுள்ள எருசலேம் சென்று அங்கே இயேசு செய்த அற்புதங்களைக் கண்டவர்கள்  இயேசுவைத் தங்கள் தலைவராக ஏற்றுக் கொண்டார்கள். தேவை மிகுந்ததாக, ஒதுக்கி வைக்கப்பட்ட, அதிக முன்னேற்றம் இல்லாத பகுதியான கலிலேய மாநிலத்தைத் தான் இயேசு தன் தங்கும் இடமாகக் கொண்டிருந்தார். கப்பர்நகூமில் தான் அவர் அதிகம் தங்கியிருந்த வீடு இருந்தது. அவர் யூதர்கள் வெறுக்கும் சமாரியாவிலும் சென்று ஊழியம் செய்தார்.

யோவான் 4:43-45
இரண்டுநாளைக்குப்பின்பு அவர் அவ்விடம்விட்டுப் புறப்பட்டு, கலிலேயாவுக்குப் போனார். 44 ஒரு தீர்க்கதரிசிக்குத் தன் சொந்த ஊரிலே கனமில்லையென்று இயேசு தாமே சொல்லியிருந்தார். 45 அவர் கலிலேயாவில் வந்தபோது, எருசலேமில் பண்டிகையிலே அவர் செய்த எல்லாவற்றையும் பார்த்திருந்த கலிலேயர் அவரை ஏற்றுக்கொண்டார்கள். அவர்களும் பண்டிகைக்குப் போயிருந்தார்கள்.

ஆனால் இயேசுவின் வார்த்தையை மட்டும் நம்பிப் போன ஒரு நபர் தன் வாழ்வில் ஒரு அற்புதத்தை அனுபவித்தார். 


அந்த மனிதன் இயேசுவின் வார்த்தையை நம்பிப் போனார்.

எத்தனை விசுவாசம் இது என்று நாம் சொல்லலாம். ஆனால் வார்த்தையான இயேசுவின் வார்த்தையை நம்புவதிலும், அதிலிருந்து நன்மையைப் பெறுவதிலும் ஒரு சிறு விதி இருப்பதாகத் தோன்றுகிறது.

இயேசு தாம் தண்ணீரைத் திராட்சரசமாக்கின கலிலேயாவிலுள்ள கானா ஊருக்கு மறுபடியும் வந்தார்.

வார்த்தையின் பின்னணியில் ஒரு அற்புதம் இருக்கிறது. அதன் மீதுள்ள நம்பிக்கை தான் இயேசுவிடம் அந்த மனிதனைக் கொண்டு வந்தது.

இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்தாரென்று அந்த மனுஷன் கேள்விப்பட்டபோது, அவரிடத்திற்குப் போய், தன் மகன் மரண அவஸ்தையாயிருந்தபடியினாலே, அவனைக் குணமாக்கும்படிக்கு வரவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான்.

இயேசுவின் வார்த்தையின் பின்னணியில் அவர் செய்த அற்புதம் இருந்ததால், இயேசுவை நேரில் பார்த்து தன் தேவையை சொன்னதால், இயேசு அற்புதம் நடக்கும் என்று சொன்னதால், அந்த மனிதர் இயேசுவின் வார்த்தையை நம்பிப் போகிறார். 

வார்த்தையை நம்பிப் போன போது, அற்புதம் நடந்தது. இன்னும் வார்த்தையின் மதிப்பு வலுவாகிறது. 

அந்த வார்த்தையின் உண்மைத் தன்மையை அவர் சரிபார்க்கிறார்:

எந்த மணிநேரத்தில் அவனுக்குக் குணமுண்டாயிற்று என்று அவர்களிடத்தில் விசாரித்தான். அவர்கள்: நேற்று ஏழாமணிநேரத்தில் ஜுரம் அவனை விட்டது என்றார்கள். 53 உன் குமாரன் பிழைத்திருக்கிறான் என்று இயேசு தன்னுடனே சொன்ன மணிநேரம் அதுவே என்று தகப்பன் அறிந்து, அவனும் அவன் வீட்டாரனைவரும் விசுவாசித்தார்கள்.

இப்போது விசுவாசம் உறுதியாகிறது. நன்மை பெற்ற குடும்பம் முழுவதும் விசுவாசிக்கிறது. ஊர்களில் அவர் பெயர் பிரபலமாகிறது.

இந்த விசுவாசத்தின் உள்ளடக்கத்தை நாம் சிறிது ஆழமாகப் பார்த்தால்:

மரண அவஸ்தை என்பது நம் கட்டுப்பாட்டுக்கு மேலானது. அதில் விடுதலைக்கு மருத்துவர்களைத் தேடலாம். கடவுளை நினைத்து பிரார்த்திக்கலாம். இதைச் செய்வேன் அதைச் செய்வேன் என்று நேர்ந்து கொள்ளலாம். அழலாம். கடைசியில் அந்த நபர் பிழைக்கவும் செய்யலாம் அல்லது இறந்து போகலாம்.

இந்த தகப்பனுக்கு இயேசு யூதேயாவில் செய்த அற்புதங்களை நேரில் பார்த்தவர்கள் சொல்லி இயேசுவைத் தெரிந்திருக்கலாம். அல்லது அவரே நேரில் பார்த்திருக்கலாம். கானாவூரில் இயேசு செய்த முதல் அற்புதம் இந்த தகப்பனுக்குத் தெரிந்திருக்கலாம், தெரியாமலும் இருந்திருக்கலாம். ஆனால் யோவான் எழுதும் போது, கானாவூரில் இது இரண்டாவது அற்புதம் என்று சொல்வது, அவருக்குத் தெரிந்ததை எழுதி வைத்ததாக இருக்கிறது.

இயற்கைக்கு அப்பாற்பட்ட, வழக்கத்துக்கு மாறான ஒரு பிரச்சனை வரும் போது, அதை சரி செய்ய வேண்டும் என்ற தேவை ஏற்படுகிறது. சோகத்துடன் அழுது கொண்டு அல்லது செயல்பட முடியாமல் உட்கார்ந்திருந்தாலும் தேவையை சமாளிக்க என்னவெல்லாம் செய்யலாம் என்ற சிந்தனை ஓடிக் கொண்டே இருக்கிறது. சில முயற்சிகளும் செய்யப்படுகின்றன. சிறந்த தீர்வு கிடைக்குமா என்ற தேடலும் இருக்கிறது. இப்போது ஒரு வழியைப் பற்றி கேள்விப்படும் போது, அதுவும் அருகில் வரும் போது, நமக்கு ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று முயற்சிக்கிறார் தகப்பன். 

இப்படிப்பட்ட தேவையுடன் இருப்பவர்கள் முடிந்தவரை எல்லாவற்றையும் முயற்சி செய்து பார்க்கத்தான் செய்வார்கள். சில முயற்சிகள் பலன் தரலாம். சில முயற்சிகள் அவர்களுக்கு அந்த சூழலில் பலன் தராமல் போகலாம். இங்கே தேவையும், இயேசுவும், தகப்பனின் நம்பிக்கையும்  சரியான நேரத்தில் ஒன்றிணைந்து அந்தக் குடும்பத்தின் விசுவாசத்தைக் கட்டி எழுப்பியது. (நம்பியும் நன்மை கிடைக்கவில்லை என்றால்? இது வேறு ஒரு தலைப்பு. வாய்ப்பு கிடைக்கும் போது ஆழமாகப் பார்க்கலாம்).

அந்த அற்புதம் தன் மகனுக்கே நடக்கும் போது, அந்த நபர் இதுவரை மனதில் வைத்திருந்த கருத்துக்கள் எல்லாம் தலைகீழாக மாறுகின்றது. இயேசுவால் எல்லாம் முடியும். இயேசு இயற்கைக்கு மேற்பட்டவர் என்ற விசுவாசம் ஏற்படுகிறது.

இயற்கை பற்றிய புரிதல்
தேவை
தீர்வுகளுக்கான தேடல்
முயற்சி
நம்பிக்கை
தீர்வு - இயற்கைக்கு மேற்பட்ட அற்புதம்
விசுவாசம்.

இயேசு தாம் தண்ணீரைத் திராட்சரசமாக்கின கலிலேயாவிலுள்ள கானா ஊருக்கு மறுபடியும் வந்தார்; அப்பொழுது கப்பர்நகூமிலே ராஜாவின் மனுஷரில் ஒருவனுடைய குமாரன் வியாதியாயிருந்தான். 47 இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்தாரென்று அந்த மனுஷன் கேள்விப்பட்டபோது, அவரிடத்திற்குப் போய், தன் மகன் மரண அவஸ்தையாயிருந்தபடியினாலே, அவனைக் குணமாக்கும்படிக்கு வரவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான். 48 அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீங்கள் அடையாளங்களையும் அற்புதங்களையும் காணாவிட்டால் விசுவாசிக்கமாட்டீர்கள் என்றார். 49 அதற்கு ராஜாவின் மனுஷன்: ஆண்டவரே, என் பிள்ளை சாகிறதற்குமுன்னே வரவேண்டும் என்றான். 50 இயேசு அவனை நோக்கி: நீ போகலாம், உன் குமாரன் பிழைத்திருக்கிறான் என்றார். அந்த மனுஷன், இயேசு சொன்ன வார்த்தையை நம்பிப் போனான். 51 அவன் போகையில், அவனுடைய ஊழியக்காரர் அவனுக்கு எதிர்கொண்டுவந்து, உம்முடைய குமாரன் பிழைத்திருக்கிறான் என்று அறிவித்தார்கள். 52 அப்பொழுது: எந்த மணிநேரத்தில் அவனுக்குக் குணமுண்டாயிற்று என்று அவர்களிடத்தில் விசாரித்தான். அவர்கள்: நேற்று ஏழாமணிநேரத்தில் ஜுரம் அவனை விட்டது என்றார்கள். 53 உன் குமாரன் பிழைத்திருக்கிறான் என்று இயேசு தன்னுடனே சொன்ன மணிநேரம் அதுவே என்று தகப்பன் அறிந்து, அவனும் அவன் வீட்டாரனைவரும் விசுவாசித்தார்கள். 54 இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்குத் திரும்பிவந்தபின்பு, இது அவர் செய்த இரண்டாம் அற்புதம்.

இயேசுவின் பணி ஆன்மீகம், ஆன்மீகம் இல்லாதவை என்று பிரிக்க முடியாததாகத் தான் இருந்தது. ஒரு நபரின் ஆள்த்தன்மையில் இருக்கும் உடல், மனம், உணர்வு, ஆன்மா எல்லாவற்றையுமே அவர் ஒரே அம்சமாகத் தான் பார்த்திருக்கிறார். தரித்திரம் என்பது பணம் இல்லாத வறுமை மட்டுமல்ல, அது துர்ச்செய்திகளைக் கேட்டு நம்பிக்கை குறைந்து போன வறுமையாகக் கூட இருக்கலாம். சுயம், இச்சை போன்றவற்றால் அறம் வற்றிப் போன வறுமையாக இருக்கலாம். தரித்திரருக்கு நற்செய்தி வார்த்தையாலும் வாழ்க்கையாலும் பிரசங்கிக்கப்பட்டது. மேசியா, கிறிஸ்து என்ற வார்த்தைகளின் பொருள், அபிஷேகிக்கப்பட்டவர் என்பதாகும். இயேசு அபிஷேகிக்கப்பட்டது ஆன்மீகப் பணிக்காக மட்டுமல்ல - இருதயம் - உணர்வுகள் உடைபட்டவர்களுக்கு மனநலம், அடிமைப்பட்டவர்களுக்கு விடுதலை, பார்வையற்றோருக்குப் பார்வை, நொருங்கிப் போனவர்களுக்கு சுதந்திரம் இப்படித் தான் அவரது பணி நம் வாழ்வின் மொத்தத்துக்குமானதாக இருந்தது. அது இயேசுவின் காலத்தில் நிறைவேறியது என்கிறார் இயேசு. 

அவர்களுக்கோ அவரது பணியை விட அவரது பதவி தான் முக்கியமாகத் தெரிந்தது. அவர் சாதிக்கப் போவதைப் பற்றி அக்கறை இல்லை, அவர் எங்கிருந்து வந்தவர் என்ற கேள்வி பெரிதாக இருந்தது. அவரைப் பற்றிய குறைகள் என்ன என்பதே அவர்களது தேடலாக இருந்தது. அவர் தன்னை நிரூபிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். இயேசுவுக்கோ தான் பிறந்த ஊர், வளர்ந்த ஊர், பெரிய ஊர் என்ற வேறுபாடுகள் இல்லை. அவர் உலகத்துக்கே பொதுவானர். ஆகவே தான் யூதர்கள் என்ற சிறப்பான, தேர்ந்தெடுக்கப்பட்ட இனத்தையும் தாண்டி அவர் பழைய ஏற்பாட்டின் காலத்தில் செய்த அற்புதங்களைக் குறிப்பிடுகிறார். தங்கள் இனம் தான் கர்த்தருக்கு நெருக்கமானது. நெருக்கமாக இருக்க வேண்டும். மற்ற இனங்கள் எல்லாமே தாழ்வானது என்ற வெறி தான் இயேசுவைக் கொலை செய்யத் துடிக்கும் அளவுக்கு அந்த மக்களின் மனதைத் தூண்டியது. 
  
லூக்கா 4:18-27
கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும், 19 கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார், என்று எழுதியிருக்கிற இடத்தை அவர் கண்டு, 20 வாசித்து, புஸ்தகத்தைச் சுருட்டி, பணிவிடைக்காரனிடத்தில் கொடுத்து, உட்கார்ந்தார். ஜெபஆலயத்திலுள்ள எல்லாருடைய கண்களும் அவர்மேல் நோக்கமாயிருந்தது. 21 அப்பொழுது அவர் அவர்களோடே பேசத்தொடங்கி: உங்கள் காதுகள் கேட்க இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று என்றார்.


22 எல்லாரும் அவருக்கு நற்சாட்சி கொடுத்து, அவருடைய வாயிலிருந்து புறப்பட்ட கிருபையுள்ள வார்த்தைகளைக் குறித்து ஆச்சரியப்பட்டு: இவன் யோசேப்பின் குமாரன் அல்லவா என்றார்கள். 23 அவர் அவர்களை நோக்கி: வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள் என்கிற பழமொழியைச் சொல்லி, நாங்கள் கேள்விப்பட்டபடி கப்பர்நகூமூரில் உன்னால் செய்யப்பட்ட கிரியைகள் எவைகளோ அவைகளை உன் ஊராகிய இவ்விடத்திலும் செய் என்று நீங்கள் என்னுடனே சொல்லுவீர்கள் என்பது நிச்சயம். 24 ஆனாலும் தீர்க்கதரிசி ஒருவனும் தன் ஊரிலே அங்கீகரிக்கப்படமாட்டான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 25 அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது, இஸ்ரவேலுக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள். 26 ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பபட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை. 27 அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்; ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

உண்மை உறுத்தத்தான் செய்யும். இயேசுவைத் தங்கள் விருப்பப்பட்டி ஆட்டம் போடும் ஒரு மேசியாவாக அரசனாக வைத்திருக்க நினைத்தார்கள் யூதர்கள். ஆனால் இயேசுவோ தான் உலகத்தின் அனைத்து மக்களுக்கும் சொந்தமானவர் என்றார். சத்தியம் அவர்களுக்கு கசந்தது. தங்கள் விருப்பத்துக்கு ஒத்து வராதவரைத் தொலைத்துவிடுவோம் என்று தான் நினைத்தார்கள். உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் சிறிது கூட அவர்களிடம் இல்லை. 


இயேசு மக்கள் என்ன சொல்வார்கள் என்று நினைத்துத் தன் செய்தியை மாற்றி அமைக்கவில்லை. அவரது போதனைகள் பலரது வெறுப்பைத் தான் சம்பாதித்துக் கொடுத்தன. ஆனால் அவர் உண்மையை மட்டுமே சொன்னார். ஏனென்றால் அவரது பெயரும் அது தானே. நானே சத்தியம். 

No comments: