#40நாள்இயேசு
நாள் 5:
விசுவாசம்:
விசுவாசம் என்ற வார்த்தை நிச்சயமாக நமக்கு தேய்ந்து போன ஒன்றாக, பழகிப் போனதாக, சில நேரங்களில் மந்திர வார்த்தையாக இருக்கின்றது. ஆனால் நம்முடன் வாழும் பிற சமய மக்களுக்கு இந்த வார்த்தை என்ன அர்த்தம் கொடுக்கிறது என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும்.
விசுவாசமுள்ள வேலைக்காரன், உண்மையான என்ற நம்பத்தகுந்த ஒரு ஆளைத் தான் விசுவாசமுள்ளவர் என்று சொல்வார்கள். விசுவாசமுள்ள நாய். நன்றி விசுவாசம் உள்ள நபர் என்று பாராட்டுவார்கள். என் நண்பர் ஒருவர் என்னிடம் கேட்ட ஒரு கேள்வி இன்னும் என் மனதில் இருக்கின்றது: “விசுவாசமா இருக்கணும்னு கிறிஸ்தவங்க சொல்றீங்க. நாங்க இதுவரைக்கும் கும்பிட்ட சாமிக்கு விசுவாசமா இருக்கணும் இல்லியா? நீங்க எப்படி சாமிய மாத்தச் சொல்றீங்க?” நம்புதல் என்ற வார்த்தை நிச்சயமாக இந்த நண்பருக்கு சரியான புரிதலைக் கொடுத்திருக்கும். எனது விளக்கம் அவருக்குப் புரிந்ததா என்று தெரியவில்லை. ஆதி காலத்து வார்த்தைகளை நாம் இன்னும் கிளிப்பிள்ளைகள் போல பயன்படுத்துவதன் விளைவு தான் இது.
பற்றுறுதி என்ற சொல் விசுவாசம் என்ற வார்த்தைக்குப் பதிலாக பயன்படுத்தப்படுகிறது. இதுவும் ஏதோ புரியாத சொல் போலத் தான் இருக்கிறது. நல்ல தமிழாக இருக்கிறது. ஆனால் சாதாரண மக்களுக்குப் புரியுமா என்பது தெரியவில்லை.
“காணப்படாதவைகளின் நிச்சயம், நம்பப்படுகிறவைகளின் உறுதி” என்று விசுவாசத்துக்கு வேதம் ஒரு விளக்கம் கொடுக்கிறது.
நிச்சய நம்பிக்கை, உறுதியான நம்பிக்கை என்று பெயர் கொடுக்கலாம். நம்பிக்கை என்பதே போதுமானது.
ஆனால் நம்பிக்கைக்கும் விசுவாசத்துக்கும் வித்தியாசம் இருக்கிறதாக வேத வசனம் சொல்கிறது. (அன்பு, விசுவாசம், நம்பிக்கை - இவற்றில் அன்பே பெரியது.) இதைப் பற்றி பின்னர் தான் பார்க்க வேண்டும்.
இங்கே கண்டு நம்புவதை விட, அற்புதங்களை அனுபவித்து நம்புவதைவிட காணாமல் நம்புவது தான் பெரியது என்று இயேசு நமக்கு விளக்குகிறார். அற்புதங்கள் மறைந்து போகும், அற்புதர் என்றென்றும் இருப்பார்.
உயிரோடு எழுந்த லாசரு மீண்டும் செத்துப்போயிருப்பார். அப்பம், திராட்சை ரசம், மீன் என்று அற்புதமாகக் கிடைத்த உணவுகள் செரிமானமாகி கழிவாகிக் காணாமல் போயிருக்கும். அந்த உணவு எந்த மக்களின் உடலில் சேர்ந்ததோ அவர்களும் செத்து, மக்கிப் போய்விட்டார்கள். அவரால் சுகம் பெற்ற மனிதர்களும் செத்துப் போய்விட்டார்கள்.
அற்புத அடையாளங்கள் மூலமாக நமக்கு விளக்கப்படும் ஆன்மீக உண்மைகள் தான் நிரந்தரமானவைகள். அவைகளைப் பிடித்து கொள்ளாமல் போனவர்கள் கதை பரிதாபம் தான்.
எதுவெல்லாம் விசுவாசம் அல்ல என்பதை முதல் அதிகாரங்களில் இருந்து நாம் காணலாம். பின்னர் வருகின்ற கருத்துக்களை இதே தலைப்பில் சேகரித்துத் தொடரலாம்.
எது விசுவாசம் அல்ல?
1.அறிவு மட்டுமே விசுவாசம் அல்ல.
இதனால் தான் அதிகம் படித்த பல வேதப்பண்டிதர்கள் நாத்திகர்களைப் போல மாறிப் போனதை வரலாறு நமக்குக் காட்டுகின்றது. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு மட்டுமல்ல,
“ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம், ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான்” (யோவான் 3:1-2). நிக்கோதேமுவும் அவர் கூட இருந்த ஆன்மீகத் தலைவர்களும் இயேசுவைப் பற்றி அறிந்திருந்தார்கள். ஆனால் அது மட்டும் போதுமானதாக இல்லை. அதனால் தான் இயேசு நிக்கோதேமுவுக்கு யோவான் 3 ஆம் அதிகாரம் முழுவதும் விசுவாசத்தைப் பற்றி விளக்கம் கொடுத்திருப்பாரோ என்று நினைக்கிறேன்.
2. கண்டு நம்புதல்: கண்டு விசுவாசித்தல் விசுவாசத்தின் துவக்கமாக இருக்கலாம். ஆனால் கண்ட பின் அங்கே நம்புவதற்கு என்ன இருக்கிறது? அறிவியல் பூர்வமான பகுத்தறிவுவாதிகள் காண முடியாதவற்றை, பரிசோதனை செய்ய முடியாதவற்றை நாங்கள் நம்ப மாட்டோம் என்கிறார்கள். அன்பு, ஆன்மா, விசுவாசம் போன்ற அனைத்துமே அவர்களைப் பொறுத்தவரை மூட நம்பிக்கைகள் தான். விசுவாசத்தை அவர்கள் கேலி செய்கிறார்கள். ஆனால் வேதம் அவர்களுக்கு என்று எந்த விதமான தர்க்கங்களையும் கொடுக்கவில்லை. கடவுள் இல்லை என்று முட்டாள் சொல்கிறான். ஆதியிலே கர்த்தர் வானத்தையும் பூமியையும் படைத்தார் என்று சொல்லுகிறது வேதம்.
தேவாலயத்திலேயே பணி செய்து கொண்டிருந்த ஒருவர், தேவதூதனின் செய்தியைக் கேட்டும் நம்பவில்லை. ஒரு அற்புதம் நடக்கப் போகிறது என்றும் அதன் சிறு விளக்கங்களும் கூட சொல்லப்பட்டும் அவர் நம்பவில்லை. அவன் நம்பாததால் அவருக்கு அந்த அற்புதம் நடக்காமல் போகவில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். அதற்காக ஒரு தண்டனையும் கிடைக்கிறது சகரியாவுக்கு.
இதோ, தகுந்த காலத்திலே நிறைவேறப்போகிற என் வார்த்தைகளை நீ விசுவாசியாதபடியினால், இவைகள் சம்பவிக்கும் நாள்மட்டும் நீ பேசக்கூடாமல் ஊமையாயிருப்பாய் என்றான். லூக்கா 1:20
கோயில் பூனை சாமிக்கு அஞ்சாது என்பார்களே, சகரியாவுக்கு அது பொருந்துமோ?
கிட்டத்தட்ட அதே சூழலில் ஆனால் சகரியாவை விட அதிகம் வயதிலும், அனுபவத்திலும், ஆன்மீகத்திலும் குறைந்த ஒரு டீன் ஏஜ் பெண் பாராட்டப்படுகின்றாள்:
“விசுவாசித்தவளே பாக்கியவதி, கர்த்தராலே அவளுக்குச் சொல்லப்பட்டவைகள் அவளுக்கு நிறைவேறும்” லூக்கா 1:45
3. அற்புதத்தின் பின் விளைவு:
விசுவாசம் துவங்க நிச்சயமாக ஒரு அற்புதம் அதிசயம் தேவையாக இருக்கிறது. ஆனாலும் அந்த இயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புதம் தினமும் வேண்டும் என்று நினைப்பது நிச்சயமாக உண்மையான விசுவாசத்தை பாதிக்கும்.
அற்புதங்கள் இயற்கைக்கு அப்பாற்பட்டவைகளாக இருந்தாலும் கூட இயற்கையான வாழ்க்கை தான் நமக்கு எப்போதும் இருக்கக் கூடியது. ஆகவே எப்போதுமே அற்புதத்தை எதிர்பார்த்திருக்கும் வாழ்க்கையை நமக்கு கர்த்தர் வாக்குப் பண்ணவில்லை. அப்படி அற்புதங்களை தினமும் பார்த்த “மன்னா” மக்களுக்கும் அது சலித்துப் போய் தான் இருந்தது.
யோவான் 2:11
11 இவ்விதமாக இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக் கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே செய்து, தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார், அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்.
பஸ்காபண்டிகையிலே அவர் எருசலேமிலிருக்கையில், அவர் செய்த அற்புதங்களை அநேகர் கண்டு, அவருடையநாமத்தில் விசுவாசம் வைத்தார்கள். 24 அப்படியிருந்தும், இயேசு எல்லாரையும் அறிந்திருந்தபடியால், அவர்களை நம்பி இணங்கவில்லை. 25 மனுஷருள்ளத்திலிருப்பதை அவர் அறிந்திருந்தபடியால், மனுஷரைக் குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சி கொடுக்கவேண்டியதாயிருக்கவில்லை (யோவான் 2: 23:24).
4. இரகசியங்கள் வெளிப்பட்டதால் ஏற்படும் விசுவாசம்:
இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: அத்திமரத்தின் கீழே உன்னைக் கண்டேன் என்று நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்; இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய் என்றார். 51 பின்னும், அவர் அவனை நோக்கி: வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் (யோவான் 1:50-51).
சமாரியப் பெண்ணின் வாழ்க்கையைப் பற்றி இயேசு புட்டுப் புட்டு வைத்ததால் அந்தப் பெண் இயேசுவை மேசியாவாக இருக்குமோ என்று சந்தேகித்து (விசுவாசித்தது போல தெரியவில்லை) ஊர் மக்களிடம் சொல்கிறார். அந்தப் பெண்ணின் வார்த்தையைக் கேட்டு ஊர்மக்கள் அவரை விசுவாசித்தார்கள். ஆனாலும் அவர்களே இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டபின்னர் அவர்கள் விசுவாசம் பெருகினதுடன், இன்னும் அனேகரும் இயேசுவின் மேல் விசுவாசம் வைத்தார்கள்.
5. இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டதால் வந்த விசுவாசம்:
நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்னார் என்று சாட்சி சொன்ன அந்த ஸ்திரீயினுடைய வார்த்தையினிமித்தம் அந்த ஊரிலுள்ள சமாரியரில் அநேகர் அவர்மேல் விசுவாசமுள்ளவர்களானார்கள். 40 சமாரியர் அவரிடத்தில் வந்து, தங்களிடத்தில் தங்கவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; அவர் இரண்டுநாள் அங்கே தங்கினார். 41 அப்பொழுது அவருடைய உபதேசத்தினிமித்தம் இன்னும் அநேகம்பேர் விசுவாசித்து, 42 அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள் (யோவான் 4:39-42).
இயேசுவின் உபதேசங்களைக் கேட்ட பலர் அவரது சிலுவை மரணத்தின் போது காணாமல் போயிருந்தனர். யோவானைத் தவிர அவரது சீடர்களே கூட இயேசுவின் கடைசி மணி நேரங்களில் அவருடன் இல்லை.
இதில் ஒரு உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இயேசுவின் சீடர்கள், இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின்னர் தான் அவரை முழுவதுமாக விசுவாசித்தார்கள். இயேசுவின் போதனைகளும், அவரது செய்கைகளும், அவரது உயிர்த்தெழுதலுக்குப் பின்னர் அவர்களுக்கு வேறு விதத்தில் புரிந்தது. இயேசுவின் உயிர்த்தெழுதல் அவர்களைப் புரட்டிப் போட்டது என்று தான் சொல்ல வேண்டும். மறுதலித்தவர் சாட்சி சொன்னார். உயிருக்கு பயந்து ஓடினவர்கள் இரத்த சாட்சிகளாக மரித்தார்கள். பூட்டின வீட்டுக்குள் இருந்தவர்கள், கதவு திறக்காமலே உள்ளே வந்த இயேசுவைக் கண்ட பின் திறந்துவிட்டார்கள் தங்கள் வாழ்க்கையை.
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன் என்றார். 20 அப்பொழுது யூதர்கள்: இந்த ஆலயத்தைக் கட்ட நாற்பத்தாறு வருஷம்சென்றதே, நீர் இதை மூன்று நாளைக்குள்ளே எழுப்புவீரோ என்றார்கள். 21 அவரோ தம்முடைய சரீரமாகிய ஆலயத்தைக்குறித்துப் பேசினார். 22 அவர் இப்படிச் சொன்னதை அவர் மரித்தோரிலிருந்தெழுந்தபின்பு அவருடைய சீஷர்கள் நினைவுகூர்ந்து, வேதவாக்கியத்தையும் இயேசு சொன்ன வசனத்தையும் விசுவாசித்தார்கள் (யோவான் 2:19).
6. வித்தியாசமான போதனை, அதிகாரமான போதனை, பிரமிப்பான செயல்கள், பிரபலமானவர் சொன்னதால் பிரபலமான போதனை.
இப்படிப்பட்ட மக்கள் நிச்சயமாக அவர்களை கவர்ச்சிக்கும் இன்னொரு போதனை வந்தால் கட்சி தாவிவிட அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன.
கலிலேயாவிலும், தெக்கப்போலியிலும், எருசலேமிலும், யூதேயாவிலும், யோர்தானுக்கு அப்புறத்திலும் இருந்த திரளான ஜனங்கள் வந்து, அவருக்குப் பின்சென்றார்கள் (மத்தேயு 4:25). இவர்களின் பின் செல்லுதலுக்கும் இயேசுவின் சீடர்களின் பின் செல்லுதலுக்கும் வித்தியாசம் இருக்கின்றது. சீடர்கள் தங்கள் வலைகள், படகுகள், குடும்பத்தை விட்டு இயேசுவுக்குப் பின் சென்றார்கள்.
அவர் வேதபாரகரைப்போலப் போதியாமல், அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தபடியினால், அவருடைய போதகத்தைக் குறித்து ஜனங்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
27 எல்லாரும் ஆச்சரியப்பட்டு: இது என்ன? இந்தப் புதிய உபதேசம் எப்படிப்பட்டது? இவர் அதிகாரத்தோடே அசுத்த ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார், அவைகள் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று தங்களுக்குள்ளே ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். 28 அதுமுதல் அவருடைய கீர்த்தி கலிலேயா நாடெங்கும் பிரசித்தமாயிற்று (மாற்கு 1:27-28).
உன் குமாரன் பிழைத்திருக்கிறான் என்று இயேசு தன்னுடனே சொன்ன மணிநேரம் அதுவே என்று தகப்பன் அறிந்து, அவனும் அவன் வீட்டாரனைவரும் விசுவாசித்தார்கள் (யோவான் 4:53).
அவர் கலிலேயாவில் வந்தபோது, எருசலேமில் பண்டிகையிலே அவர் செய்த எல்லாவற்றையும் பார்த்திருந்த கலிலேயர் அவரை ஏற்றுக்கொண்டார்கள். அவர்களும் பண்டிகைக்குப் போயிருந்தார்கள் (யோவான் 4:45).
பின்பு இயேசு ஆவியானவருடைய பலத்தினாலே கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார். அவருடைய கீர்த்தி சுற்றிலும் இருக்கிற தேசமெங்கும் பரம்பிற்று. 15 அவர்களுடைய ஜெப ஆலயங்களில் அவர் உபதேசித்து, எல்லாராலும் புகழப்பட்டார் (லூக்கா 4:14-15).
ஜெபஆலயத்திலுள்ள எல்லாருடைய கண்களும் அவர்மேல் நோக்கமாயிருந்தது = எதற்காக? (லூக்கா 4:20). 28 ஜெபஆலயத்திலிருந்த எல்லாரும் இவைகளைக் கேட்டபொழுது, கோபமூண்டு, 29 எழுந்திருந்து, அவரை ஊருக்குப் புறம்பே தள்ளி, தங்கள் ஊர் கட்டப்பட்டிருந்த செங்குத்தான மலையின் சிகரத்திலிருந்து அவரைத் தலைகீழாய்த் தள்ளிவிடும்படிக்கு அவ்விடத்திற்குக் கொண்டுபோனார்கள். 30 அவரோ அவர்கள் நடுவினின்று கடந்துபோய்விட்டார் (லூக்கா 4:28-30). இயேசுவின் போதனைகளை ஆச்சரியத்துடன், பிரமிப்புடன், ஆசையாய்க் கேட்டவர்கள் தான் அவரைக் கொலை செய்யவும் துணிந்தார்கள். ஓசன்னா பாடிவிட்டு, சிலுவையில் அறையும் என்று கூக்குரலிட்டார்கள். மந்தைக் கூட்டத்தின் விசுவாசம் இப்படித் தான் இருக்கும்.
இயேசு அவர்களுக்கு சாப்பாடு போடுவார் என்று நம்பி அவரை அரசனாக்க முயற்சி செய்தார்கள். இயேசு தாங்கள் விரும்புகிறபடி மேசியாவாக இருப்பார் என்று எதிர்பார்த்தார்கள். அந்த எதிர்பார்ப்பு பொய்யானதும் அதே இயேசுவை சிலுவையில் அறையும் என்றார்கள். இது தான் மந்தையான கூட்ட மனப்பான்மை. தேர்தல் கூட்டங்களில் கூட்டமாக இருந்தாலும் ஓட்டுப் போடும் போது காலை வாரிவிடும் தமிழக மக்கள் போலத் தான் இதுவும். எல்லாத் தலைவர்களின் பேச்சுக்களையும் கேட்டுவிட்டு, இறுதியில் தங்கள் விருப்பத்தையே செயலில் காட்டுவார்கள்.
உண்மையான அல்லது சரியான விசுவாசம் எது தான் என்று கேட்டுக் குழம்புவதை விட, எதை விசுவாசிக்க வேண்டும் என்பதைப் புரிவது தான் முக்கியமானது என்று நினைக்கிறேன்.
இயேசுவை, ஒரு போதகராக, அற்புதம் செய்பவராக, நல்ல பணி செய்கிறவராக, நோயாளிகளுக்கு சுகம் கொடுக்கிறவராக, செத்தவர்களை உயிரோடு எழுப்புகின்றவராக, தீர்க்கதரிசியாக, இரகசியங்களை அறிந்தவராக மட்டும் விசுவாசிப்பதில் பயன் இல்லை. இதை தங்களை யோகிகள், குருக்கள், தீர்க்கதரிசிகள், அவதாரங்கள் என்று சொல்லிய பலர் செய்திருக்கிறார்கள்; செய்து கொண்டிருக்கிறார்கள். மந்திரமாக, வித்தையாக, மனோவசியத்தின் மூலமாக, துணிகரமான அறிக்கைகளாகப் பலர் செய்திருக்கின்றனர்.
மனிதனாக உலகத்தில் வந்த கர்த்தராக, உலகத்தின் பாவத்துக்காக சிலுவையில் தன் உயிரைக் கொடுத்தவராக, உயிரோடு எழுந்த கர்த்தராக விசுவாசிப்பது மட்டும் தான் சரியான விசுவாசமாக இருக்க முடியும். இயேசுவின் சீடர்களின் விசுவாசம் அப்படித்தான் பலப்பட்டது, வெளிப்பட்டது, உலகத்தையே கலக்கியது.
ஆகவே தான் நாம் வாழுகின்ற இந்தக் காலத்தில், வேத புத்தகமும், விளக்கங்களும், பாரம்பரியங்களும் இருக்கின்ற இந்தக் காலத்தில் விசுவாசம் என்று விளக்குகின்றதை இயேசு வாழ்ந்த போது இருந்த மக்களிடம் இருந்த விசுவாசத்துடன் ஒப்பிடுவது துல்லியமான பதிலைத் தர முடியாது.
அவர் செய்த அத்தனை அற்புதங்களையும் எழுதியிருக்கின்ற வேத புத்தகத்தை முழுவதும் உண்மையானது என்று நம்பாதவர்கள் இயேசுவை நம்புவது கடினமாக இருக்கும். அற்புதங்களைப் பார்த்தாலும் கூட அவர்களால் நம்ப முடியாது. அதனால் தான் இயேசு சொன்னார், “வேதாகமத்தை நம்பாதவர்கள் (மோசேயும் தீர்க்கதரிசிகளையும்) மரித்த ஒருவன் உயிருடன் எழுந்து வந்தாலும் நம்ப மாட்டார்கள்.”
அறிந்தும் விசுவாசியாத நிக்கோதேமுவின் கூட்டாளிகளுக்கு இயேசு சொன்ன பதில் இது தான்: “பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரமகாரியங்களை உங்களுக்குச் சொல்வேனானால் எப்படி விசுவாசிப்பீர்கள்? பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை. சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டது போல மனுஷகுமாரனும், தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும் (யோவான் 3:12-15).
வேதக்காரர்கள் கூட வேதத்தை ஒரு அதிசயமாகப் பார்க்காமல் கடமைக்காக படிக்கும் நிலைக்குப் போய்விட்டால் அங்கே விசுவாசம் நீர்த்துப் போய்விடும்.
உமது வேதத்தின் அதிசயங்களைப் பார்க்கும் படி என் கண்களைத் திறந்தருளும் என்ற சங்கீதக்காரனின் ஜெபம் நம்முடையதாக தினமும் இருக்க வேண்டும். வேதம் திறக்கப்படும் போதே நம் கண்களும் இதயமும் திறக்கப்படாவிட்டால் தேவ ராஜ்யத்தின் கதவுகள் எப்படி மற்ற மக்களுக்குத் திறக்கும். “திறவுண்ட வாசல் அடைபடுமுன்” என்று பாடுவது சும்மா தானா?
விசுவாசத்தைத் துவக்குகிறவர் கர்த்தர் தான் என்று வேதம் சொல்கிறது. அவர் துவக்குவதற்கு அற்புதங்களை பயன்படுத்துகிறார். ஆனால் அவரது வேத புத்தகமே ஒரு அதிசயம் தான். அவரே ஒரு அதிசயம் தான். அவரைப் பற்றி கேட்பதாலேயே விசுவாசம் வரும் என்றும் வேதம் சொல்கிறது. விசுவாசம் கேள்வியினால் வரும். இயேசுவை, அவரது போதனைகளை, வாழ்க்கையைக் கேட்பதால் விசுவாசம் வரும்.
விசுவாசம் என்பது ஒரு மந்திரம் போலாகிவிட்டது. இயேசுவை விட நமது விசுவாசம் பெரிதாகிவிட்டது. விசுவாசம் இருந்தால் எல்லாம் நடக்கும் என்று நினைப்பதால், மலைகளை நகர்த்தும் அளவு அந்த கடுகளவு விசுவாசத்தைப் பெருகச் செய்ய தலைகீழாக நின்று முயற்சிக்கிறோம்.
ஆனால் கர்த்தர் தான் விசுவாசத்தைத் துவக்கி, முடிக்கிறவர். அவர் இல்லாமல் நம் விசுவாசம் என்பது வீண் தான்.
நமக்குள் விசுவாசத்தை அவர் தான் உருவாக்குகிறார் என்றால் நமக்கு வேலை என்ன?
நிச்சயமாக விசுவாசத்தின் மூலமாகிய கர்த்தரை கண்டு, அவருக்கு உண்மையாக கீழ்ப்படிய வேண்டும். மூளை அறிவு, அனுபவ அறிவு இவற்றையெல்லாம் விட காணாமல் விசுவாசிக்கும் குணம் தான் நமக்கு வேண்டும்.
அதே நேரத்தில் நம் கற்பனையை விசுவாசம் என்று சொல்லாதபடி, வேதத்தில் சொல்லப்பட்டிருக்கும் கர்த்தரை நம் வாழ்க்கையில் கண்டு ,விசுவாசித்து, அவர் குரலுக்கு பழக்கமாகி, எது அவர் குரல், எதை நம்பலாம் என்று தினமும் கண்டறிந்து நம்பிக்கையுடன் நடப்பது தான் சரியானது. இதில் தடுமாறும் போதும் உடனடியாக அதே கர்த்தரிடம், வேதத்தில் தேடி சரி செய்து கொள்வதும் முக்கியமானது.
நாம் விசுவாசிக்கும் வேதம் “சும்மா” எழுதப்பட்டதல்ல. கட்டுக்கதை அல்ல. வரலாற்றையும் தாண்டி, உலகத்தில் அக்கறையுள்ள ஒரு கர்த்தர், தான் சொல்ல வேண்டியவற்றைத் தேர்ந்தெடுத்த சிலர் மூலமாக நமக்குக் கொடுத்திருக்கிறார். அவர்களும் உண்மையுடன் அவற்றை நமக்காக எழுதி வைத்திருக்கின்றனர். விசுவாசம் இல்லாமல் இதை நம்புவது இயலாது. ஆனால் இது தான் விசுவாசத்தைத் துவக்கக் கூடியதாகவும் இருக்கின்றது:
மகா கனம்பொருந்திய தெயோப்பிலுவே, நாங்கள் முழுநிச்சயமாய் நம்புகிற சங்கதிகளை, 2 ஆரம்பமுதல் கண்ணாரக்கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தபடியே அவைகளைக்குறித்துச் சரித்திரம் எழுத அநேகம்பேர் ஏற்பட்டபடியினால், 3 ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட விசேஷங்களின் நிச்சயத்தை நீர் அறியவேண்டுமென்று, 4 அவைகளை ஒழுங்காய் உமக்கு எழுதுவது எனக்கு நலமாய்த் தோன்றிற்று. லூக்கா 1:1-4
சொப்பனம், தூதர், அசரீரி இவற்றை நம்பவும் விசுவாசம் வேண்டும். அவற்றைப் பகுத்தறிய விசுவாசம் வேண்டும். அவற்றை நடைமுறைப் படுத்த விசுவாசம் வேண்டும்.
விசுவாசம் என்பது கண்களை மூடிக் கொண்டு நம்புவது அல்ல. மூலம் என்ன என்பதையும், இயற்கைக்கு அப்பாற்பட்ட ஆதாரங்களையும் பகுத்தறிந்து அதை உறுதியாக நம்புவது. இதே யோவான் கூட சிறையில் இருந்த போது வருகிறவர் நீர் தானா என்று விசாரிக்கத் தன் சீடர்களை அனுப்பினார்.
விசுவாசம் கேள்வியினால் துவங்கியது, இயேசுவின் உயிர்த்தெழுதலால் (உயிர்த்தெழுதலில்) தூண்டப்பட்டு, உறுதிப்படுகின்றது.
இயேசு செய்தது விதைக்கிற ஊழியம் தான். அவரது விதைகள் அவரது உயிர்த்தெழுதலுக்குப் பின்னர் தான் முளைத்தன என்று சொல்லலாமா?
ஏனென்றால் சீடர்களே அவரது உயிர்த்த காட்சியைக் காண்பதற்கு முன் விசுவாசம் இல்லாமல் தான் இருந்தார்கள்.
இன்னும் தீவிரமாகத் தேட சில கேள்விகளும் சில கருத்துக்களும் இருக்கின்றன. எனக்கு நேரமும் உங்களுக்குப் பொறுமையும் இருக்காது என்பதால் இவை பிற்காலத்துக்காக சேர்த்து வைக்கப்படுகின்றன:
காணாமல் நம்புதல்.
கண்டும் நம்பாமல் இருத்தல்.
காணாததை மட்டும் நம்புதல்.
நம்பிக்கை இருக்கிறதா இல்லையா என்று தெரியாமலேயே நம்புதல்.
நம்பிக்கையை வார்த்தைகளில் மட்டும் காட்டுதல்.
நம்பிக்கையை செயலில் காட்டுதல்.
நம்பிக்கையைப் பற்றி பேசாமலேயே இருந்தல்.
விசுவாசிகள் யார்?
விசுவாசம் என்றால் என்ன?
விசுவாசத்தால் என்ன பயன்?
விசுவாசம் எப்போது பலப்படுகிறது?
விசுவாசம் எப்போது தடுமாறுகிறது?
காணாமல் விசுவாசிப்பதற்கும் பகல் கனவுக்கும் வேறுபாடு உண்டா?
கடுகளவு விசுவாசம் போதும் என்றால் கிட்டத்தட்ட விசுவாசம் இல்லாமல் இருந்தால் கூட பரவாயில்லையா?
எந்த அளவுக்கு இந்த விசுவாசம் முக்கியமானது?
பிசாசுகளும் விசுவாசிக்கின்றன என்று வேதத்தில் ஒரு வசனம் இருக்கிறதே?
என் விசுவாசத்தை வாய் விட்டு மற்றவர்களுக்குச் சொல்லத் தான் வேண்டுமா?
விசுவாசத்திற்கும் நம்பிக்கைக்கும் வித்தியாசம் இருக்கிறதா?
விசுவாசத்தைவிட அன்பே பெரியது என்கிறதே வேதம், அதற்கு அர்த்தம் என்ன?
எடிட் செய்ய நேரம் இல்லாததால் சில பத்திகள் அங்கே இங்கே மாறிக் கிடக்கலாம். இது என் தியானத்தின் வரி வடிவமாக இருப்பதால் இப்போதைக்கு இப்படித் தான் இருக்கும். பின்னர் இதை சரியாக வடிவமைக்க வாய்ப்புக்கள் இருக்கின்றன. மேலும் இது யாருடைய ஆன்மீகத்துக்கும் மாற்றாகக் கொடுக்கப்படவில்லை. நீங்கள் உங்கள் தியானத்தை செய்வதற்கு ஒரு உற்சாகமூட்டியாக, தூண்டும் அம்சமாக இருக்க வேண்டும் என்பதே என் ஜெபமும், ஆசையும்.
No comments:
Post a Comment