#40நாள்இயேசு
நாள் 6:
விசுவாசம் ஏன் முக்கியமானது?
அது நமது நித்திய சேருமிடத்தையே தீர்மானிக்கக்கூடியது.
சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டது போல மனுஷகுமாரனும், 15 தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும். 16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். 17 உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். 18 அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்பட்டாயிற்று (யோவான் 3:14-18).
ஒருவரும் கெட்டுப் போவது கர்த்தரின் விருப்பம் இல்லை என்றாலும், தன் சாயலில் படைக்கப்பட்ட மனிதரின் விருப்பம் இல்லாமல் அவர் மனிதர்களை வற்புறுத்தி, விசுவாசத்தைத் திணிப்பது இல்லை. நன்மை, தீமை பற்றி சொல்லிவிட்டு தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை நமக்கே விட்டுவிடுகிறார். அவர் எப்படி எதற்கும் கட்டுப்படாத சுதந்திரமானவராக இருக்கிறாரோ அதே சாயல் நமக்கு இருக்கிறது. மனிதன் கர்த்தரை விட்டு விலகி அவருக்குக் கீழ்ப்படியாமல் போனாலும் கூட நமக்குக் கொடுத்த அவரது சாயல் என்னும் பரிசை மீண்டும் பிடுங்கிக் கொள்ளாத ஜெண்டில் ஆள்த்தன்மையுள்ளவர் தான் நம் கர்த்தர். அவர் சாயலாக இருப்பதால், நம் சுதந்திரத்தை மதிக்கிறார். ஆகவே தான் நானே கெட்டுப் போவேன் என்று ஒதுங்கிப் போகிறவர்களை, விசுவாசிக்காமல் இருப்பவர்களை அவர் தீர்ப்புக்கு விட்டுவிடுகிறார். உலக முடிவில் விசுவாசித்த, அவரைப் பின்பற்றிய கூட்டம் தனியாக அவருடன் இருக்க செல்லும். அவரை வேண்டாம் என்று சொன்ன விசுவாசிக்காத கூட்டம் அவரை விட்டு நித்திய காலமாக பிரிந்திருக்கும் ஒரு இடத்துக்குப் போய்ச் சேரும்.
இயேசுவின் முதல் வருகையில் அவர் யாரையும் நித்திய தீர்ப்புக்கு உட்படுத்தாமல் அனைவரும் அவரது இலவசமான மீட்பைப் பெறும்படியாக, உலகத்தின் பாவத்தை நீக்கும் பலியாக வந்தார். ஆனால் இரண்டாம் வருகையில் அவர் நியாயாதிபதியாக வருவார். அப்போது கிருபை, அன்பு, இரக்கம், மன்னிப்பு எல்லாவற்றையும் மிஞ்சி நீதி மட்டும் தான் இருக்கும். நாம் தேர்ந்தெடுத்த தீர்ப்பு தான் நமக்குக் கிடைக்கும். இங்கு தான் விசுவாசம் வருகிறது.
ஒருவரும் கெட்டுப் போவது அவருடைய விருப்பம் என்றாலும், அவரை விசுவாசிப்பதைத் தேர்ந்தெடுப்பவர்கள் கெட்டுப் போக மாட்டார்கள் என்ற உறுதியைக் கொடுக்கிறார். முடிவில்லாத வாழ்வை அவருடன் அனுபவிக்கும் பாக்கியத்தை அவரை விசுவாசிக்கிறவர்கள் பெறுவார்கள். இதற்காகத் தான் இயேசு இந்த உலகத்துக்கு வந்தார். சிலுவைக்கு சென்றார், தன் பரிசுத்த ஆவியானவரை நமக்குத் தந்தார், மீண்டும் வருவதாக வாக்குக் கொடுத்திருக்கிறார்.
விசுவாசிப்பவர்களுக்கு இயேசுவுடன் கூடிய நித்தியமான வாழ்வும், விசுவாசிக்காதவர்களுக்கு இயேசுவிடம் இருந்து நிரந்தரமான பிரிவும் தீர்ப்பாக வழங்கப்படுகிறது. இது தான் ஆக்கினைத் (தண்டனை) தீர்ப்பு எனப்படுகிறது.
நிக்கோதேமு
அன்புள்ள அதே கர்த்தர் தான் நீதியுள்ளவர். நீதியின்படி நமக்கு வர வேண்டிய தீர்ப்பை இயேசு சிலுவையில் ஏற்றுக் கொண்டார். இதை நம்புவது தான் விடுதலைத் தீர்ப்பைப் பெறும் வழி. இங்கே விசுவாசத்தை யார் மேல் வைக்கிறோம், எதற்கு வைக்கிறோம், எப்படி வைக்கிறோம் என்பது முக்கியமானது. அதைத் தான் மெத்தப்படித்த நிக்கோதோமு போன்ற வேத அறிஞர்களுக்கு இயேசு தெளிவாகப் புரிய வைக்கிறார்.
மறுபடி பிறப்பது, இரட்சிக்கப்படுவது, இயேசுவை ஏற்றுக் கொள்வது என்று அதிகப் பயன்பாட்டால் தேய்ந்து போன சொற்களின் அர்த்தம் மிகத் தெளிவாக, எளிதாக இருக்கின்றது. எதையுமே குழப்பி, மர்மமாகக் காட்டி பழகிவிட்ட நாம் இந்த வார்த்தைகளால் நம்மையும் பிறரையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம்.
வெளிச்சத்தில் அல்லது பொதுவெளியில், அனைவருக்கும் தெரியும்படி, கர்த்தருக்காவது முழுவதுமாகத் தெரியும்படி தன் நினைவுகளை, செயல்களை, வார்த்தைகளை கொண்டு வருகின்ற ஒருவர் தான் மறுபடி பிறந்தவர் என்று சொல்ல முடியும். இங்கே இரவில் முக்காடு போட்டுக் கொண்டு வந்த நிக்கோதேமுவுக்கு முதலிலேயே சரியான சாட்டையடி. அதே நிக்கோதேமு இயேசுவைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்படும் போது அதற்கு ஒத்துக் கொள்ளாமல் தன் கருத்தை தைரியமாகச் சொன்னார். இயேசுவின் மரணத்திற்குப் பின் சிறிது தைரியமாகப் பேசி, இயேசுவின் உடலை மரியாதையுடன் அடக்கம் பண்ண உதவினார். நிச்சயமாக இயேசுவின் உயிர்த்தலுக்குப் பின்னர் வெளிப்படையாக இயேசுவின் சீடராக மாறியிருப்பார்.
19 ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது. 20 பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான். 21 சத்தியத்தின்படி செய்கிறவனோ தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார்.
இங்கே இருளை யாரும் வேண்டுமென்று விரும்புவதில்லை. ஆனால் மறைந்திருக்க விரும்புகிறவர்களும் தவறு செய்ய விரும்புகிறவர்களும் இருளை விரும்புகிறார்கள். கண்டிப்பை விருப்பாதவன் இருளை விரும்புகிறான்.
என் செயல்கள் சத்தியமாகிய வேதத்திற்கும், ஆவியானவரின் உணர்த்துதலுக்கும், இயேசுவின் உறவுக்கும் தொடர்புடன் இருக்கும் போது வெளிப்படைத் தன்மையும், வெளிச்சத்தில் அனைத்தையும் காட்டும் தைரியமும் வருகின்றது. தொடர்ச்சியாக இப்படியே வெளிச்சத்தில் வாழ்வது தான் மறுபடியும் பிறத்தல். தாயின் வயிற்றில் இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு வரும் குழந்தையைப் போல, கர்த்தரின் உலகத்துக்குள், அவரது வெளிச்சத்துக்குள் வந்து, வளர்ந்து பெரியவர்களாவதே நமது நோக்கம்.
யோவான் ஸ்நானகன்:
“அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்” (யோவான் 3:30) என்பது தான் வார்த்தையைப் பிரதிபலிக்கும் சத்தமாக இருக்க வேண்டிய நமது மனப்பாங்கு. தாழ்மை என்பது தான் மிகவும் தந்திரமாக நழுவிச் செல்லும் ஒரு குணம். எனக்கு இது இருக்கிறது என்று நினைக்கும் போது பெருமை வந்துவிடுகிறது. நாம் அனைவருமே “நான்” என்ற சுயநலத்தையும், பெருமையையும் இரத்தமும் சதையும் போல இருக்கப் பிறந்தவர்கள். தாழ்மை என்பது நிச்சயமாக ஒரு மறுபிறப்பு தான். பாவமன்னிப்பு என்பதில், “நான்” என்ற மனநிலை தான் முக்கியமான பாவம் ஆகும். சுயத்தைக் கொன்று, சிலுவையை சுமந்து, இயேசுவை நம் வாழ்வில் அரசராக்கும் அந்த பாவமன்னிப்புக்கேற்ற மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தைத் தான் யோவான் பிரசங்கம் செய்தார். அவர் தனது வாழ்க்கை தத்துவத்தைச் சொல்லிவிட்டார், வாழ்ந்தும் காட்டினார்.
கர்த்தர் பெருகவும், நாம் சிறுகவும் நம்மை ஒப்புக் கொடுப்பது மட்டும் தான் உண்மையான ஆன்மீகம். மற்ற எல்லாவுமே இதன் விளைவுகளாகத் தான் இருக்க முடியும்.
தன்னைப் பற்றியல்ல, எல்லாவுமே கர்த்தரைப் பற்றியது என்று நம்பியதால் தான் யோவான், ஆளுனரின் தவறையும் சுட்டிக்காட்ட முடிந்தது. தைரியம் கிடைத்தது. ஆனால் அந்த தைரியம் தான் அவரை சிறையிலும் அடைபட வைத்தது. அங்கேயும் நிச்சயமாக அவரது தாழ்மை வெளிப்பட்டிருக்கும். தாழ்மையாக இருப்பது என்பதற்கு எல்லோர் சொல்வதற்கும் ஆமாம் சாமி போடுவதல்ல. கர்த்தருக்கு முன் தாழ்மையாக இருப்பது, நிச்சயமாக மனிதர்கள் முன் தலை நிமிர்ந்து நிற்கச் செய்யும் - அந்தத் தலை வெட்டப்பட்டாலும் கூட.
இயேசு நம்மையும் தனது வார்த்தைக்கான சத்தமாக, வனாந்திரத்தில் கூப்பிட அழைக்கிறார். நேர்மை, தாழ்மை, தூய்மை இவை போதும் ஊழியம் செய்ய. அந்த ஊழியம் பட்டணங்களில் மட்டும் அல்ல. காட்டுக்குள்ளும் நடக்கலாம். நாம் ஊழியத்தை எங்கே செய்யலாம் என்று தேடிச் செல்ல வேண்டியதில்லை. நாம் இருக்கும் இடம் காடாக இருந்தாலும், கர்த்தரின் வார்த்தையின் சத்தத்தை மட்டும் வெளிப்படுத்தும் போது மக்கள் உங்களைத் தேடி வருவார்கள். அங்கேயும் கர்த்தர் பெருகவும் நாம் சிறுகவும் வேண்டும் என்ற மனநிலையில் இருப்பது நம் தலையை எடுக்கும் நிலைக்குக் கொண்டு போனாலும், நாம் தைரியமாக, மகிழ்ச்சியுடன் அதை ஏற்க முடியும்.
சமாரியப் பெண்ணும் நித்திய ஜீவ ஊற்றும்:
இயேசு பெரும் கூட்டத்தை மட்டுமல்ல,சிறு குழுவையும் ஒரு நபரையும் கூட மதித்து தனது பணிக்கான வரையறையைப் பிறர் தீர்மானிக்க விடாமல் வைத்துக் கொண்டார்.
தனித்தனியாக மக்களை சந்திப்பதும் நம் விசுவாசத்தை அவர்களிடம் பகிர்ந்து கொள்வதும் உலகத்திலேயே மேலான அனுபவமாக இருக்கும்.
யோவான் 4 ஆம் அதிகாரத்தை ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் ஒரு புதிய பரிமாணத்தில் புரிதல் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு கிறிஸ்தவனும் ஒரு இறைப்பணியாளன் என்பதை நம்புகிறவன் நான். முழு நேரமாக “ஊழியம்” செய்ய சிலர் இருந்தாலும், முழு நேரமும் எல்லா கிறிஸ்தவர்களும் “ஊழியம்” செய்ய வேண்டும் என்பது கர்த்தரே நமக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் கொடுத்திருக்கும் கட்டளை.
கிறிஸ்தவத்தின் தனித்தன்மைகளில் மிக முக்கியமானது, பிறருக்கு கர்த்தரைச் சொல்வது தான். மதம் மாற்றுகிறார்கள், தொந்தரவு செய்கிறார்கள் என்று சொல்லும் அளவுக்கு அது மிகவும் வெளிப்படையானது. ஆனால் இப்போது அந்தக் குற்றச்சாட்டு பலருக்குப் பொருந்தாது என்று சொல்லும் அளவுக்கு கிறிஸ்தவத்தில் நற்செய்தி சொல்லுதல் என்ற அம்சம் காணாமல் போய்விட்டது. ஏதோ தொற்று வியாதியில் மாட்டிக் கொண்டவர்கள் போல அவமானத்துடன் கூனிக் குறுகிப் போய் இருக்கிறோம். கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக் கொள்வதிலேயே வெட்கம் தெரிகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக நாம் எதை நம்புகிறோம் என்பதைப் பிறருக்குச் சொல்லத் தெரியாமல், சொல்ல முடியாமல், எதை நம்புகிறோம் என்பதே தெரியாமல், குழம்பி இருக்கும் கிறிஸ்தவத் தலைமுறை தான் நம் எதிர்காலமாகிவிடுமோ என்று பயமாக இருக்கிறது.
இந்தப் பகுதியில் இயேசுவின் செயலும் போதனைகளும் நமக்கு எந்தக் காலத்துக்கும் பொருந்தும் பல விதிகளையும் வழிகளையும் கொடுக்கின்றன. நாம் மதம் மாற்றும் வெறியர்கள் என்றோ, “யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்று சொல்லும் சாதாரண மக்கள் என்றோ மக்கள் எடுத்துக் கொள்வது நம் அணுகுமுறையிலும் இருக்கின்றது. விளம்பரத்தில் பல வகைகள் இருந்தாலும் பொருள் நன்றாயிருந்தால் நிச்சயமாக மக்கள் தேடி வருவார்கள் அல்லவா? மல்லிகைக்கும் கருவாட்டுக்கும் விளம்பரம் செய்கிறவர்களைப் பார்த்திருக்கிறீர்களா?
“சாதாரண மக்களுக்கான இயற்கை அருட்பணி” என்ற புத்தகம் ஓ எம் நிறுவனத்தினரால் விரைவில் வெளியிடப்படவிருக்கிறது. நம் நம்பிக்கையைப் பகிர்வதில் இதுவரை வந்தவற்றிலேயே ஆகச் சிறந்த புத்தகம் என்று இதைச் சொல்வேன். செயற்கை உரங்கள், செயற்கை அணு மாற்றம் என்றெல்லாம் இல்லாமல் இயல்பாக செய்யப்படும் இயற்கை விவசாயம் போல, இயற்கையாய் நற்செய்தியை உடன் இருப்போருக்குப் பகிர்தலைப் பற்றி இந்த புத்தகம் சொல்கிறது.
ஆடித் தள்ளுபடி மாதிரி, ஆன்லைனில் கிடைக்கும் அபூர்வப் பொருட்கள், குறைந்த விலையில் கிடைக்கும் போது நண்பர்களுக்குச் சொல்கிறோம் அல்லவா? அதே ஆர்வமும், தீவிரமும் இயேசுவைப் பற்றி சொல்வதிலும் இருக்க வேண்டும் என்பதுவே 30 வருடங்களாக இதையே செய்து வரும் எழுத்தாளர் சொல்கிறார். இப்போது இயேசுவின் வாழ்க்கையிலிருந்தும் போதனையிலிருந்தும் நாம் சுருக்கமாகப் பார்ப்போம்.
எங்கேயும் எப்போதும், யாரோடும்: எந்த இடத்தில், எப்போது வாய்ப்புக் கிடைக்கும் என்பது தெரியாது. இயற்கையாகவே யாரிடமும், எப்போதும், எந்த இடத்திலும் உங்கள் உரையாடலைத் துவங்கித் தொடரும் மனிதர்களை நேசிக்கும் நபராக இருந்தால் இது சாத்தியம்.
வசதி, வாய்ப்புக்காக காத்திருக்கக் கூடாது: தனியாளுக்கு ஊழியம் செய்ய வசதியான சந்தர்ப்பத்துக்குக் காத்திருந்தால் அது வராமலேயே போய்விடும். களைப்பாகத் தான் இருந்தார் இயேசு. அவருக்குத் தாகமாக இருந்தது.
3. அறிமுகம் இல்லாமல் உரையாடலா?- நான் யார், நீ யார், உன் தேவை என்ன? வெளிப்புறத் தேவைஎன்ன? உண்மையான தேவை என்ன?: யூதன் எப்படி என்னிடம் கேட்கலாம் என்று கேட்க, தான் யார் என்பதை மறைமுகமாக அறிமுகம் செய்கிறார். அப்போதைய தேவை தண்ணீர், தினமும் தேவைப்படும் தண்ணீர். இது தான் அந்தப் பெண்மணியின் தேவை. வீட்டில் குழாய் தண்ணீர் கொடுப்பது போன்ற சமூக சேவையை மட்டும் இயேசு செய்யவில்லை. உன் ஆன்மீக தாகத்துக்கு தீர்வு இருக்கிறது என்றார்.
4. ஆன்மீகம், ஒழுக்கம் பற்றிய உரையாடல்கள்:
உரையாடலின் ஓட்டத்திலேயே ஆன்மீகம் வராமல் இருக்காது. நாம் தான் அதைப் பற்றி அதிக கவலை இல்லாமல் நமது நம்பிக்கையைச் சொல்வதற்கு ஆயத்தமாக இருக்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் நாம் செலவிடும் நேரத்தில் இதை ஞானமாகச் செய்யலாம். நிச்சயமாக ஆர்வமுள்ளவர்களும், தாகமுள்ளவர்களும், தேவை உள்ளவர்களும் உங்களுடன் உரையாடலைத் தொடர்வார்கள்.
5. இயேசுவைப் பற்றிய அறிமுகம்:
இயேசுவை சரியாக அறியும் செய்யும் போது, அவரது போதனைகளை சரியாகப் புரியும் போது, முகம்பார்க்கும் கண்ணாடி போல நாம் நம்மையே அறிகிறோம். இதைத் தான் நம் நண்பர்களுக்கும் நாம் செய்ய வேண்டும்.
6. முழுச் சுற்று நிறைவேற வேண்டும்.
பொதுவாக நாம் பெற்ற இன்பத்தை அடுத்தவர்களுக்கு சரியாகக் கடத்தும் போது அவர்களும் தாங்கள் பெற்ற இயேசுவை அவர்களது நண்பர்களுக்குச் சொல்வார்கள். என்னைப் பொறுத்தவரை இது தான் சரியான ஊழியத்துக்கான தரம். இந்தப் பெண்மணி தன் ஊராருக்கு இயேசுவை அறிமுகம் செய்தார். ஊரே இயேசுவைப் பின்பற்ற உதவியாக இருந்தது.
7. நற்செய்தி ஊழியத்தில் இரு வகைகள் இருக்கின்றன: ஒன்று விதைக்கின்ற பணி, அடுத்தது அறுவடை செய்கின்ற பணி. இதில் விதைப்பது என்பது உரையாடல்கள், நற்செயல்கள் போன்ற அறிமுகம். அடுத்தது இயேசுவின் மீது பற்று ஏற்படுகின்றவர்களை கிறிஸ்தவ அமைப்புக்குள் கொண்டு வருதல். இதில் முதல் வகை தான் கடினமான பணி. இதில் “லாபம்” இருக்காது. பாராட்டுக்களும் இருக்காது. அறுவடைக் காலம் வருமானத்தின் காலம். விதைப்பின் காலம் செலவின் காலம். ஆகவே நாம் கண்டிப்பாக உரையாடல், அன்புடன் பழகுதல், உதவிகள் செய்தல் போன்ற அறிமுக ஊழியத்தை நம் வாழ்க்கை முறையாகவே செய்வோம்.
8. சாப்பிடுவது போல இயற்கையாக, தொடர்ச்சியாக இருக்க வேண்டும் நம் நற்செய்திப்பணி: இயேசு தன் பிதாவின் விருப்பத்தைச் செய்வது தனது உணவு என்கிறார். நாமும் நமது வாழ்வின் தவிர்க்க முடியாத ஒரு அம்சமாக இயேசுவின் நற்செய்தியைப் பிறருக்கு அறிவிப்பதை வைத்திருக்க வேண்டும். சில நேரங்களில் சில உணவுகள் நமக்குப் பிடிக்காமல் போகலாம். சில சூழல்களில் உணவே வெறுப்பாகப் போகலாம். ஆனால் அதற்காக நாம் உணவையே ஒதுக்குவதில்லை அல்லவா?
9. நம்மைச் சுற்றிலும் நற்செய்தி அறிவிக்கும் வாய்ப்புக்கள் அதிகம் இருக்கின்றன. நாம் ஏறிட்டுப் பார்க்க வேண்டும். வழக்கமான ஊழிய நிறுவனங்கள், திருச்சபைகள் பார்க்கும் பார்வையில் பார்த்தால் அவர்கள் செய்வது போன்ற பாரம்பரியமான, கடமைக்காக செய்யப்படும் ஊழியம் தான் உங்களுக்குத் தெரியும்.
10. நீங்கள் விதைக்கின்ற விதை பிறருக்கு அறுவடையைக் கொடுப்பது போலவே, பிறர் விதைத்தது உங்கள் கையில் அறுவடையாகலாம். அதாவது கிறிஸ்துவின் மீது ஆர்வம் உள்ள சிலருக்கு நீங்கள் உங்கள் விசுவாசத்தை விளக்கமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டிய சூழல் வரலாம். ஆயத்தமாக இருங்கள். கர்த்தர் உதவிக்கு இருக்கிறார்.
இப்போதைய நம் நாட்டுச் சூழலில் நம் வாழ்க்கையாலும் வார்த்தையாலும் இயேசுவைப் பற்றிய நற்செய்தியைச் சொல்ல பல தடைகளும் சவால்களும் இருந்தாலும் அவை தான் இந்த அருமையான பணியை நமக்கு இன்னும் மகிழ்ச்சியுள்ளதாக மாற்றித்தரப் போகின்றன. நான் இதை அனுபவித்துச் செய்கிறேன். இந்த லெந்துக் காலத்தில் இதை இன்னும் தீவிரப்படுத்தவதைப் பற்றி சிந்திக்கவிருக்கிறேன்.
No comments:
Post a Comment