Wednesday, March 13, 2019

#40நாள்இயேசு நாள் 8

நாள் 8

நான் மற்ற ஊர்களிலும் தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டேன் (லூக்கா 4:43)

என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் (மாற்கு 1:17).
அந்த ஸ்திரீ, தன் குடத்தை வைத்துவிட்டு, ஊருக்குள்ளேபோய், ஜனங்களை நோக்கி: 29 நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார்; அவரை வந்து பாருங்கள்; அவர் கிறிஸ்துதானோ என்றாள். 30 அப்பொழுது அவர்கள் ஊரிலிருந்து புறப்பட்டு அவரிடத்தில் வந்தார்கள்.... அவருடைய உபதேசத்தினிமித்தம் இன்னும் அநேகம்பேர் விசுவாசித்து, 42 அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். 
(யோவான் 4:28-30/41-42)

அந்த மனுஷன் போய், தன்னைச் சொஸ்தமாக்கினவர் இயேசு என்று யூதர்களுக்கு அறிவித்தான் (யோவான் 5:15).

இயேசு இந்த உலகத்துக்கு அனுப்பப்பட்டது, நற்செய்தியை சொல்வதற்காகவே. ஆனால் அவர் அற்புதங்களையும் செய்தார். அவரது முதன்மையான நோக்கமும் பணியும் நற்செய்தியை அறிவிப்பது தான்.

அவருடன் இருப்பதற்காக தேர்ந்தெடுத்த சீடர்களிடம் உங்களை மனிதர்களை பிடிப்பவர்களாக்குவேன் என்றார். அவருக்குப் பின் அவர்கள் அந்தப் பணியைத் தான் செய்ய வேண்டும் என்று கட்டளையின் கொடுத்தார். உலகமெங்கும் போய்... நற்செய்தியைப் பிரசங்கம் செய்யுங்கள்...

அவர் செய்த மற்ற அற்புதங்களின் பின் விளைவுகளும் அவரது நற்செய்தியைப் பரப்புவதற்கு உதவியானவைகளாகவே இருந்தன.

அவரது அற்புதங்களை மட்டும் எதிர்பார்த்து அவரை அரசராக்க வந்தவர்களை அவர் புறக்கணித்தார்.

அனைத்து அற்புதங்களையும், உவமைகளையும் தனது நற்செய்தியையும், பெரும் உண்மைகளையும் விளக்கிச் சொல்வதற்காகவே பயன்படுத்தினார்.


ஜெப ஆலயத்தில் அசுத்த ஆவியுள்ள மனுஷன்


இது முரண் போலத் தெரிந்தாலும் உண்மை. இந்தக் காலத்திலும் உண்மை தான். வேதத்தின்படி பிசாசு இருக்கிறான். தீய சூழலில் மட்டுமல்ல, ஆன்மீக சூழலிலும், ஆன்மீகத் தலைவர்கள் நடுவிலும் கூட இருக்கிறான். இயேசுவிடமே தன் வாலை ஆட்டினான். (இயேசு தன் சீடன் பேதுருவிடமே ஒரு சூழலில் அப்பாலே போ சாத்தானே என்றார்).

ஜெபஆலயத்திலே அசுத்த ஆவியுள்ள ஒரு மனுஷன் இருந்தான். 24 அவன்: ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா வந்தீர்? உம்மை இன்னார் என்று அறிவேன், நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று சத்தமிட்டான். 25 அதற்கு இயேசு: நீ பேசாமல் இவனை விட்டுப் புறப்பட்டுப்போ என்று அதை அதட்டினார். 26 உடனே அந்த அசுத்த ஆவி அவனை அலைக்கழித்து, மிகுந்த சத்தமிட்டு, அவனைவிட்டுப் போய்விட்டது. 27 எல்லாரும் ஆச்சரியப்பட்டு: இது என்ன? இந்தப் புதிய உபதேசம் எப்படிப்பட்டது? இவர் அதிகாரத்தோடே அசுத்த ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார், அவைகள் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று தங்களுக்குள்ளே ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். 28 அதுமுதல் அவருடைய கீர்த்தி கலிலேயா நாடெங்கும் பிரசித்தமாயிற்று (மாற்கு 1:23-28).

பிசாசு பற்றிய பல தவறான தகவல்கள் நமக்குள் பல வழிகளில் புகுந்திருக்கின்றன. அவற்றை நாம் சரிசெய்வது நல்லது. அவசியமானது.

  1. பிசாசு கடவுளுக்கு சமமான எதிரி அல்ல.
  2. பிசாசு கடவுளின் படைப்பில் ஒரு தூதனாக இருந்து, கலகம் செய்து அவரிடமிருந்து வெளியே தள்ளப்பட்டவன்.
  3. பிசாசுக்கு தீமை செய்ய சக்தி இருந்தாலும், சர்வ வல்லமை உள்ள கர்த்தரின் வல்லமை அதை ஒன்றுமில்லாமல் போகச் செய்யும்.
  4. மனிதனுக்கும், தூதர்களுக்கும் கொடுக்கப்பட்ட சுதந்திரம் அதை தவறாகப் பயன்படுத்தியதன் விளைவு தான் பிசாசையும் அவன் செய்யும் தீமைகளையும் இந்த உலகத்தில் வைத்திருக்கிறது.
  5. கர்த்தர் நீதிபதியாக வந்து தன்னைத் தெரிந்தெடுத்தவர்களைத் தன்னுடனும், நிராகதித்தவர்களை பிசாசின் கூட்டத்துடனும் முடிவில்லாத காலமாய் பிரித்து வைப்பார்.
  6. நாம் பயந்து நடுங்க வேண்டிய அளவுக்கு அவன் பெரிய ஆளும் அல்ல, அவனை ஜோக்காராகப் பார்க்கும் அளவு அவன் சாதாரணமானவனும் அல்ல. நாம் இயேசுவை மட்டுமே நோக்கிப் பார்ப்போம்.
  7. பிசாசு என்று ஒன்று இல்லை என்று ‘பகுத்தறிவுடன்’ சொல்லும் பல கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். கர்த்தர் இருப்பது எவ்வளவு உண்மையோ பிசாசு இருப்பதும் அவ்வளவு உண்மை.
  8. பொய்யை எடுத்து விடுவதிலும், உண்மையையும் பொய்யையும் கலந்து குழப்புவதிலும் நிபுணன். நானே சத்தியம் என்று சொன்ன இயேசுவுடன் நெருக்கமாக இல்லாத யாரும் இவன் வலையில் மாட்டுவது நிச்சயம்.

பிசாசு ஆட்சி செய்த மனிதர்களை, உடலை, விடுதலை செய்தது போலவே, மனதையும், ஆன்மாவையும் விடுதலை செய்தார் இயேசு. மனிதர்களின் முழு ஆள்த்தன்மையில் விடுதலைக்காகவே கர்த்தர் இந்த உலகத்துக்கு வந்தார்.

மனதுருக்கம்.

இயேசு இந்த உலகத்தின் தீமைகளைக் கண்டு கொள்ளாமல் இல்லை. அவர் மனதுருக்கம் உள்ளவர். தீமையை மாற்றும் வல்லமையும் உள்ளவர். அவர் இன்றும் மாறாதவராக இருக்கிறார்.


அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் அவரிடத்தில் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு: உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்று வேண்டிக்கொண்டான். 41 இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். 42 இப்படி அவர் சொன்னவுடனே, குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று, அவன் சுத்தமானான் (மாற்கு 1:40-45). 

பாவமன்னிப்பு

24 பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டுமென்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். 25 உடனே அவன் அவர்களுக்கு முன்பாக எழுந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, தேவனை மகிமைப்படுத்தி, தன் வீட்டுக்குப் போனான். 26 அதினாலே எல்லாரும் ஆச்சரியப்பட்டு, தேவனை மகிமைப்படுத்தினார்கள்; அல்லாமலும், அவர்கள் பயம் நிறைந்தவர்களாகி, அதிசயமான காரியங்களை இன்று கண்டோம் என்றார்கள் (லூக்கா 5.24-26).  

எது பாவம் என்று நமக்கு அளவையும் தரத்தையும் கொடுத்தவர் தான் பாவத்தை மன்னிக்கவும் முடியும். ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் பாவத்தை மன்னிப்பதாகச் சொல்வதே ஒரு பாவம் தான். கர்த்தர் மட்டும் தான் யாரையும் பாவி என்று சொல்லவும் முடியும். இயேசு சுகத்தையும் கொடுத்து பாவத்தையும் மன்னித்ததால் தான் தன்னைக் கர்த்தருக்கு சமமாக்கினார். யூதர்கள் இதற்காக இயேசுவைக் கொலை செய்ய முயற்சி செய்தார்கள்.


ஓய்வுநாள்.

அவருடைய சீஷர்கள் கூட நடந்துபோகையில், கதிர்களைக் கொய்யத் தொடங்கினார்கள். 24 பரிசேயர் அவரை நோக்கி: இதோ, ஓய்வுநாளில் செய்யத்தகாததை இவர்கள் ஏன் செய்கிறார்கள் என்றார்கள். ... மனுஷன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது; 28 ஆகையால் மனுஷகுமாரன் ஓய்வு நாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார்.

Chapter 3

 1 மறுபடியும் அவர் ஜெபஆலயத்தில் பிரவேசித்தார். அங்கே சூம்பின கையுடைய ஒரு மனுஷன் இருந்தான். 2 அவர் ஓய்வுநாளில் அவனைச் சொஸ்தமாக்கினால் அவர்பேரில் குற்றஞ்சாட்டலாமென்று அவர்மேல் நோக்கமாயிருந்தார்கள். ... 5 அவர்களுடைய இருதயகடினத்தினிமித்தம் அவர் விசனப்பட்டு, கோபத்துடனே சுற்றிலும் இருந்தவர்களைப் பார்த்து, அந்த மனுஷனை நோக்கி: உன் கையை நீட்டு என்றார்; அவன் நீட்டினான்; அவன் கை மறுகையைப்போலச் சொஸ்தமாயிற்று (மாற்கு 2:23 - மாற்கு 3:5).

இயேசு தான் கர்த்தர் என்பதை நேரடியாகவும் மறைமுகமாகவும் நிரூபித்துக் கொண்டே இருந்தார். ஓய்வு நாள் என்ற ஒரு நாளை உருவாக்கி அதை கடைப்பிடிக்கக் கட்டளையின் கொடுத்தவர், அதைத் தானே மாற்றவும் செய்தார். அதன் நோக்கம் என்ன என்பதைத் தெளிவாக்கினார். கட்டளைகள் அல்ல அவற்றைக் கொடுத்தவரும், அவற்றுக்கான காரணமான மனிதர்களும் தான் முக்கியம் என்பதை விளக்கினார்.

பாவிகளின் தோழன்

பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார் (மாற்கு 2:17).

ஆன்மீகத் தலைவர்களும், பக்திமான்களும் எப்போதுமே தங்களைப் போன்றவர்களுடன் தான் சேர்ந்து இருப்பார்கள். பாவிகள் என்று ஒதுங்கி இருப்பவர்களை ஒதுக்கப்பட்டவர்களை விட்டு விலகியே இருப்பார்கள். இயேசுவோ பாவிகளின் நண்பன் என்று பட்டப்பெயர் வாங்குமளவுக்கு அவர்களுடன் பார்ட்டிகளில் பங்கேற்றார்.

வைத்தியர்கள் எல்லோரும் ஒரே கூட்டமாக இருந்தால் அவர்கள் இருப்பதன் நோக்கமே நிறைவேறாது அல்லவா? இதனால் தான் இயேசு பரிசேயர், சதுசேயர், வேதபாரகர் போன்ற அந்தக் காலத்து நீதிமான்களை இயேசு துரத்தித் துரத்தி அடித்தார்.

இன்று நம் சபைகள், ஊழியங்களை, நம்மை இயேசு எப்படி நடத்துவார்? நாம் பாவிகளுக்குத் தோழர்களாக இருக்கிறோமா? அல்லது அவர்களை இன்னும் குற்றப்படுத்தி, குற்ற மனசாட்சிக்குள் தள்ளுகிறோமா? பாவிகளின் நண்பன் இயேசுவிடம் அறிமுகம் செய்கிறோமா அல்லது அருகில் வரவிடாமம் தடைகளாக இருக்கிறோமா?


No comments: