Sunday, September 2, 2012

September 3, மெல்கிசேதேக்கின் முறைமை

எபிரெயர் 5


நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி, என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர். - எபிரெயர் 5:6


மெல்கிசேதேக் முறைமை என்பது சிறிது இரகசியமானதும், புரிந்து கொள்வதற்குக் கடினமானதுமாகும். மெல்கிசேதேக் யார்? எங்கிருந்து வந்தார்? எங்கே போனார் என்கிற விபரங்கள் வேதாகமத்தில் இல்லை. அவர் ஆபிரகாமின் காலத்திலேயே சாலேமின் ராஜாவாக இருந்திருக்கிறார். இஸ்ரவேலின் ராஜாக்களுக்குத் தகப்பனாகிய ஆபிரகாமை ஆசீர்வதித்திருக்கிறார். ஆபிரகாமிடம் காணிக்கை வாங்கியிருக்கிறார். ஆரோனின் சந்ததியினர் தாம் ஆசாரியர்களாக மாற முடியும். ஆனால் ஆரோன் பிறப்பதற்கு பல தலைமுறைகளுக்கு முன்பாகவே வந்த இந்த மெல்கிசேதேக், அதுவும் அவர் இஸ்ரவேல் இனத்தவர் அல்ல (இஸ்ரவேல் இனம் அப்போது தோன்றியிருக்கவில்லை). அப்படியே இயேசுவும் சிறிது வித்தியாசமான ஆசாரியராக வந்தார். இயேசு ஆரோனின் வழியில் ஆசாரிய குலத்தில் வந்தவர் அல்ல. தாவீதின் வழியில் வந்தவர். மேலும் அவரது பிறப்பு மிகவும் அற்புதமானது.

ஆசாரியர்கள் என்ற முறை இயேசுவுக்குப் பின் ஒழிந்து போனது. இயேசுவே என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறார். இயேசு இப்போது பிதாவின் வலதுபாரிசத்தில் இருந்து நமக்காகப் பரிந்து பேசிக் கொண்டிருக்கின்றார். ஆசாரியர் என்பவர் மனிதருக்கும் கடவுளுக்கும் நடுவில் இருப்பவராவார். ஆகவே இயேசு கடவுளாகவும் நமக்கும் கடவுளுக்கும் இடையிலான மத்தியஸ்தராகவும் இருக்கின்றார். இந்த வசனமானது பழைய ஏற்பாட்டுக் காலத்திலேயே இயேசுவைப் பற்றிய தீர்க்கதரிசனமாகக் கொடுக்கப்பட்டது (சங்கீதம் 110:4). இயேசு நமக்காக மத்தியஸ்தராக இருக்கின்றார். மனிதர்களால் கடவுளைப் பார்த்தும் உயிருடன் இருக்க முடியாது ஆகவே கடவுளே நாம் பார்க்கும் அளவுக்கு மனித உருவாக மத்தியஸ்தராக வந்தார்.


சிந்தனை : எறும்புடன் நாம் பேச முடியாது. ஆனால் இயேசு நம்முடன் பேச நம்மைப் போல மனிதனாக மாறினார்.


ஜெபம் : கர்த்தாவே உமது ஆசாரிய ஊழியத்துக்காக உமக்கு நன்றி. நீர் எங்களைப் புரிந்து கொள்ளவும், நாங்கள் உம்மைப் புரிந்து கொள்ளவும் நீர் ஏற்ற ஆசாரியப் பணிக்காக உமக்கு நன்றி. ஆமென்.


For Audio Tracks visit : DD-Tamil

For Older Posts visit : http://dropindeocean.blogspot.com/
--
http://micyell.com
micyellmedia@gmail.com
Mobile : 09994258788