Sunday, September 9, 2012

September 10, ஸ்பெஷல்

எபிரெயர் 11


விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத்தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும். - எபிரெயர் 11:6


கடவுள் இல்லை என்று சொல்லும் நாத்திகர்களுக்கும் கூட விசுவாசம் தேவைப்படத்தான் செய்கிறது. நாத்திகராக இருந்து பின்னர் கிறிஸ்துவையும் கிறிஸ்தவத்தையும் ஆதரித்துக் காத்துப் பேசிய சி.எஸ் லூயிஸ் இவ்வாறு சொல்கிறார் : ”கடவுளுக்கு எதிராக நான் வைத்திருந்த வாதம் இது தான் - உலகமானது மிகவும் கொடூரமானதாகவும் அநீதி நிறைந்ததாகவும் இருக்கின்றது. ஆனால் நியாயம் அநியாயம் என்பவற்றைக் குறித்த எண்ணம் எனக்குள் எப்படி வந்தது? ஒரு நேரான கோடு இல்லாமல் இன்னொரு கோடு கோணலானது என்று யாரும் சொல்ல முடியாது. ஆகவே நிஜத்தின் ஒரு பகுதியானது அதாவது நியாயத்தைப் பற்றிய எனது கருத்து, அர்த்தமுள்ளது என்று ஒத்துக் கொள்ளும்படி அழுத்தத்துக்கு உள்ளானேன். நாத்திகம் என்பது மிகவும் மட்டமானதாகிவிட்டது. அண்டசராசரங்களுக்கு அர்த்தம் இல்லாமல் இருந்தால், அதற்கு அர்த்தம் இல்லை என்பதை நம்மால் ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாது. உதாரணமாக இந்த உலகத்தில் வெளிச்சம் என்று ஒன்று இல்லாமலேயே இருந்து நமக்கும் கண்கள் இல்லாதிருந்தால் இருட்டு என்பதைப் பற்றியே நாம் அறிந்திருக்க மாட்டோம். இருட்டு என்னும் கருத்தே அர்த்தமற்றதாகப் போயிருக்கும்.”

விசுவாசம் என்பது மிகவும் முக்கியமானதாகும். கடவுளை நாம் கண்களால் காணமுடியாமல் இருந்தாலும் விசுவாசத்தால் அவர் உண்டு என்றும் அவர் நீதியுள்ளவர், தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவர் என்றும் நம்ப வேண்டும். விசுவாசம் இல்லாமல் கடவுளுக்குப் பிரியமாக நாம் வாழமுடியாது. ஏனென்றால் காணாமல் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்று அவரே சொல்லியிருக்கின்றார்.

சிந்தனை : கண்ணால் காண்பவற்றை விசுவாசிக்கத் தேவையில்லை. காணதவற்றை விசுவாசிப்பவர்கள் கடவுளைப் பிரியப்படுத்த அதிகம் செயல்பட வேண்டியதில்லை.


ஜெபம் : இயேசுவே உம்மை விசுவாசித்து உம்மைப் பிரியப்படுத்த, நீர் தரும் பலன்களைப் பெற்றுக்கொள்ள எனக்கு வரம் தாரும். ஆமென்.


For Audio Tracks visit : DD-Tamil

For Older Posts visit : http://dropindeocean.blogspot.com/
--
http://micyell.com
micyellmedia@gmail.com
Mobile : 09994258788

No comments: