Sunday, September 16, 2012

September 17, அடித்தால் படிப்பாய்

எரேமியா 22


நீ சுகமாய் வாழ்ந்திருக்கையில் நான் உனக்குச் சொன்னேன், நீ கேளேன் என்றாய், உன் சிறுவயதுமுதல் நீ என் சத்தத்தைக் கேளாமற்போகிறதே உன் வழக்கம். - எரேமியா 22:21


நமது அரசாங்கம் ஆசிரியர்கள் மாணவர்களை அடிக்கக்கூடாது என்று சட்டம் இயற்றியது. அடுத்த நாள் ஒரு பள்ளியில் மாணவர் காலை கடவுள் வணக்கத்துக்காகக் கூடி வந்தபோது செய்தியை வாசித்த ஒரு மாணவன் அந்த செய்தியை ஒருவிதமான வெற்றிகரமான குரலில் வாசித்தானாம். சில ஆசிரியர்கள் எனக்கு என்ன வந்தது என்று மாணவர்கள் எப்படியும் போகட்டும் என்று விட்டுவிட்டனர். ஆனால் சில ஆசிரியர்கள் மாணவர்களின் நலனுக்காக அவர்களைத் தண்டிக்கத்தான் செய்வோம் என்று வேறு வழிகளில் தண்டனைகளைக் கொடுத்துக் கொண்டு தான் இருக்கின்றார்கள். ஆனால் என் நண்பன் ஒருவர் தனது கால்களில் தனது பள்ளிக்காலப் பிரம்பு அடியால் கிடைத்த தழும்பு ஒன்றை இன்று நினைவு படுத்தி அன்றைய பிரம்படி தான் என்னை இன்று நல்ல நிலையில் வைத்திருக்கிறது என்று சொன்னார்.

மகிழ்ச்சியும் சுகமுமாக இருக்கும் போது கற்றுக் கொள்வதைவிட துக்கமும், பிரச்சனையும் இருக்கும் போது கற்றுக் கொள்ளும் பாடங்கள் அதிக காலம் நமது மனதில் நன்றாகப் பதிந்துவிடும் என்பது உண்மையாகும். இஸ்ரவேலர் கடவுளின் அற்புதங்களால் சுகமாக வாழ்ந்திருந்தபோது கடவுளின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமல் போனார்கள். தகப்பனின் சத்தத்தைக் கேட்காத குழந்தைக்கு ஒரு சில எச்சரிப்புகளுக்குப் பின் அடி கிடைப்பது தவிர்க்க முடியாததாகும். ஆகவே தான் நாம் எப்போதுமே கடவுளை மறக்காமல் நன்மையோ தீமையோ அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். நாம் நன்றாக இருக்கும் போது என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி... அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே என்று சொல்லவும், பாடுபடும் போது, நான் உபத்திரவப்பட்டது நல்லது அவைகளால் உமது பிரமாணங்களைக் கற்றுக் கொள்கிறேன் என்று சொல்லவும் நாம் கற்றுக் கொள்ளவேண்டும்.


சிந்தனை : தந்தையின் சத்தம் விளையாட்டின் நடுவே நம் காதில் விழாது. ஆனால் முதுகிலோ காலிலோ விழும் அடியானது நம் காதுகளைத் திறந்துவிடும்.


ஜெபம் : ஆண்டவரே எனது சந்தோஷத்திலும் துக்கத்திலும் உம் சத்தத்தைக் கேட்கும் செவிகளைத் தாரும். உணர்வைக் கூர்மையாக்கும். ஆமென்.


For Audio Tracks visit : DD-Tamil

For Older Posts visit : http://dropindeocean.blogspot.com/
--
http://micyell.com
micyellmedia@gmail.com
Mobile : 09994258788

No comments: