எபிரெயர் 6
நமக்கு முன்னோடினவராகிய இயேசு மெல்கிசேதேக்கின் முறைமையின்படி நித்திய பிரதான ஆசாரியராய் நமக்காக அந்தத் திரைக்குள் பிரவேசித்திருக்கிறார். - எபிரெயர் 6:20
ஒரு நாட்டில் போரிடச் சென்று சிறிது பின்னடைவு ஏற்பட்டதால் நான் போகிறேன் ஆனால் வருவேன் என்று சொல்லிச் சென்றாராம் போர்த்தளபதி. அப்படியே அவர் வெற்றிபெற்றுத் திரும்ப வந்தபோது அவருக்குப் பெரும் வரவேற்பு கொடுக்கப்பட்டது. அவரிடம் நிருபர்கள் கேள்வி கேட்ட போது நான் போகிறேன் வருவேன் என்று சொன்னேன். இப்போது வந்திருக்கிறேன் என்று மட்டும் பதில் சொன்னாராம்.
ஆன்மீகத்தலைவர்கள் பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார்கள். சிலர் பதவியில் இருக்கும் போது இறந்து போகிறார்கள் ஆகவே நாம் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கிறோம். ஆனால் இயேசுவோ நித்திய பிரதான ஆசாரியராக நமக்காக பரலோகத்தில் நுழைந்திருக்கிறார் என்று வேதம் சொல்கிறது. ஆத்தும நங்கூரமாக இயேசு நமக்கு வலிமையைத் தரக் காத்திருக்கிறார். நமக்கு முன்னோடியாக திரைக்குள் புகுந்திருக்கிறார் என்பதால் நாமும் அதே திரைக்குள் புகுந்து செல்வோம் என்ற நம்பிக்கை இருக்கின்றது.
நமக்கு முன்பாக நம்மைப் போல சோதனைகளையும் பாடுகளையும் சந்தித்தவர் முன் அனுபவத்துடன் இருந்தால் அவரிடம் தான் நாம் ஆலோசனைக்கும் உதவிக்கும் செல்வோம். அப்படியே இயேசுவும் நமக்கு முன்னோடியாக இருக்கின்றார். ஜெபத்தின் மூலமாக அவருடன் தொடர்பு கொள்ளும் போது நமக்கு ஆலோசனைகளைத் தருவதுடன் நமக்கு உதவி செய்யவும் வல்லமையும் அன்பும் உள்ளவராகக் காத்திருக்கின்றார். திரைக்குள் புகுந்த ஆசாரியராகிய இயேசு மீண்டும் வரும்போது நீதியுள்ள நியாயாதிபதியாகவும், ராஜாதி ராஜாவாகவும் வரவிருக்கின்றார். ஆகவே நாம் நம்பிக்கையுடன் அவர் வருகைக்குக் காத்திருக்கலாம்.
சிந்தனை : இயேசுவுக்காக நாம் காத்திருப்பதில் பயன் உண்டு.
ஜெபம் : எனக்கு முன்னோடியாகச் சென்ற இயேசுவே, உம்மைப் பின்பற்றவும், உமக்காக பரிசுத்தமாக என்னைக் காத்து, உம் வருகைக்காகக் காத்திருக்கவும் எனக்கு பலம் தாரும். ஆமென்.
For Audio Tracks visit : DD-Tamil
micyellmedia@gmail.com
Mobile : 09994258788
No comments:
Post a Comment