எபிரெயர் 4
எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார். - எபிரெயர் 4:15
சர்வதேச அளவில் சிறந்த ஊழியராகவும், எழுத்தாளராகவும் இருந்த ஒருவர் 1984-இல் தவறான உறவினால் செய்த பாவத்தை 1987-இல் அறிக்கையிட்டார். அவர் மீண்டும் ஊழியத்துக்கு வந்தாலும் கூட வெளியே தெரியாத மூன்று கிறிஸ்தவத் தலைவர்களிடம் தொடர்ந்து தன்னைப் பற்றிய அறிக்கையைக் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று பெரியவர்கள் தீர்ப்பளித்தார்கள். இந்த உலகத்தின் ஊழியர்கள் மனிதர்கள் தாம் என்பதால் சோதனைகளும் சோதனைகளில் விழுந்து போவதும் சாதாரணமாக நடக்கின்றது. இயேசு மனிதனாக இருந்து நமக்கு முன்மாதிரியாக இருப்பதற்காகத் தம் சோதனைகளில் பாவம் இல்லாதவராக வாழ்ந்து காட்டினார். மேலும் பாவமுள்ளவராக இருந்தால் அவரால் நமக்காகப் பலியாகத் தன் உயிரைத் தந்திருக்கவும் முடியாது, நமக்காகப் பலியை செலுத்திய பிரதான ஆசாரியனாகவும் அவரால் செயல்பட்டிருக்க முடியாது.
எத்தனையோ ஆன்மீகத்தலைவர்களும், தங்களைக் கடவுள்களின் அவதாரங்கள் என்றும் சொல்லிக்கொண்ட பலரைப்பற்றிய ஊழல் மற்றும் பாவச் செய்திகள் நமது ஊடகங்களில் மிக அதிகமாக வந்து கொண்டே இருக்கின்றது. ஆனாலும் மக்கள் அப்படிப்பட்டவர்களிடம் தொடர்ந்து போய்க் கொண்டே தான் இருக்கின்றார்கள். நம்மைப் போல சோதிக்கப்பட்டு, பாவத்தில் விழுந்து பாவத்தை மறைத்து பின் மாட்டிக் கொள்ளும் ஆன்மீகத்தலைவர்கள் தாம் உலகத்தில் அதிகம் இருக்கின்றனர். ஆனால் இயேசு ஒருவரே மனிதனாக வந்திருந்தும், சோதனைகளை சந்தித்தும் பாவம் இல்லாதவராக இருக்கின்றார். அவரே நமது ஆராதனைக்கும் பக்திக்கும் தகுதியானவர். ஊழியர்கள் தலைவர்கள் மனிதர்கள் என்பதால் அவர்களைப் பார்த்து நாம் சோர்ந்து போகக்கூடாது. அவர்கள் சோதனைகளில் விழுந்து விடாமல் இருக்க நாம் அவர்களுக்காக ஜெபிக்கவும் வேண்டும்.
சிந்தனை : பரிசுத்தத்தை வாழ்வில் காட்டிய இயேசு ஒருவரே கடவுள் என்று அழைக்கப்படத் தகுதியுள்ளவர்.
ஜெபம் : பரிசுத்தரே, உம் பரிசுத்தத்தை எனக்குள் ஊற்றி சோதனைகளில் என்னைக் காத்துக்கொள்ளும். ஆமென்.
For Audio Tracks visit : DD-Tamil
micyellmedia@gmail.com
Mobile : 09994258788
No comments:
Post a Comment