நீதிமொழிகள் 1
கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம். - நீதிமொழிகள் 1:7
அறிவு, ஞானம் ஆகிய வார்த்தைகளுக்கு வித்தியாசம் இருக்கிறது. அறிவு என்பது படிப்பு, பிறர் சொல்லக் கேட்டல் போன்றவற்றால் நாம் பெற்றுக் கொள்ளும் விபரங்களை மூளையில் பதிந்து வைத்துக் கொள்ளுதல் ஆகும். ஆனால் ஞானம் என்பது அறிந்த விஷயங்களை செய்து பார்த்து அதனால் கிடைக்கும் அனுபவங்களாகும். ஞானம் என்பது நடைமுறைப்படுத்தப்படும் அறிவு என்கிறார் ஒரு பெரியவர்.
ஐந்தில் மூன்றைக் கழித்தால் மீதி இரண்டு என்று பள்ளியில் படித்த ஒருவன் மூன்று ரூபாய்க்குப் பொருள் வாங்கிய பின் மீதி ஒரு ரூபாயை வாங்கிவந்தால், அவனுக்கு அறிவு இருந்தாலும் ஞானம் இல்லை என்று சொல்லலாம். இப்படித்தான் நாம் பல விஷயங்களை அறிந்து வைத்திருக்கிறோம் ஆனால் ஞானமாக நடந்து கொள்வதில்லை.
இங்கே உலகத்திலேயே மிக அதிக ஞானமுள்ளவர் என்று சொல்லப்படும் சாலமோன் கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் என்கிறார். நல்லவர்களாக வாழ வேண்டும் என்று எல்லோரும் விரும்புகிறோம். நல்லவர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதைப் பற்றிய அறிவு நமக்கு இருக்கின்றது. ஆனால் நல்லவர்களாக வாழ்வதற்கு நம்மால் முடியவில்லை. கடவுள் பயம் உள்ளவர்கள் நல்லவர்களாக நடைமுறையில் வாழ்ந்து காட்டுவார்கள். தவறு செய்யக் கூடாது என்று தெரிந்தாலும், யாருமே பார்க்காத சூழலில் தவறு செய்யாமல் இருப்பவர்கள் கண்டிப்பாக கடவுளுக்குப் பயந்தவர்கள் தாம். எனவே அறிவை யாரும் சேர்த்து வைக்கலாம் ஆனால் ஞானத்தைப் பெற்றுக் கொள்ள கடவுளுக்குப் பயந்த ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும்.
சிந்தனை : அறிவைப் பெருக்குவதற்கு பல கல்வி நிலையங்களும் கருவிகளும் இருக்கின்றன. ஞானத்தைப் பெருக்குவதற்கு வேதாகமும், வாழ்க்கைப் பள்ளியும் தான் இருக்கின்றன.
ஜெபம் : கர்த்தாவே உமக்குப் பயந்து, ஞானமாக நடந்து கொள்ளும் பிள்ளையாக என்னைக் காத்துக் கொள்ளும். ஆமென்.
For Audio Tracks visit : DD-Tamil
No comments:
Post a Comment