Wednesday, March 28, 2012

March 29, இ எம் ஐ இல்லாத வாழ்க்கை

நீதிமொழிகள் 15


சஞ்சலத்தோடு கூடிய அதிகப்பொருளிலும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப்பொருளே உத்தமம். - நீதிமொழிகள் 15:16


எங்கு பார்த்தாலும் தள்ளுபடியில் பொருட்கள், ஆஃபர்கள், விற்பனை விழாக்கள், கண்காட்சிகள், வீட்டுக்கு வீடு வந்து பொருட்களை விற்பவர்கள், கடன் திருவிழாக்கள் என்று நம்மை அதிகம் வாங்க வைக்கவும், கடனாளிகளாக மாற்றவும் ஒரு கூட்டத்தார் முடிவு கட்டிக் கொண்டு திரிவது போல் தெரிகின்றது. கடவுளுக்கு பயந்த புதிதாகத் திருமணமான ஒரு இளைஞன் ”இ எம் ஐ இல்லாத வாழ்க்கை எனக்கு வேணும்னு ஜெபம் செய்துக்கோங்க அண்ணா” என்று கேட்டுக் கொண்டான். மாதாமாதம் தவணை முறையில் பொருட்களை வாங்குவது தான் இந்த இ எம் ஐ ஆகும். அதிகப் பொருட்களை ஆசைப்பட்டு வாங்கிவிட்டு பின்னர் சம்பளத்தின் ஒரு பெரும் பகுதியை தவணை செலுத்துவதற்கு கொடுத்துவிட்டு கஷ்ட்டப்படுவதைத் தான் சஞ்சலம் என்று நீதிமொழிகள் குறிப்பிடுகின்றது என்று நினைக்கிறேன்.

வரதட்சணையின் மூலம் அதிகப் பொருட்களை வாங்கியோர் பலர் குற்ற மனசாட்சியுடன் இருக்கிறார்கள். பொருட்களால் பையனை வாங்கிவிட்டதாக பெண் வீட்டார் அதிக உரிமை எடுத்துக் கொள்கின்றனர். மேலும் வெளியூர் போகும் போது மனம் எல்லாம் பொருட்கள் பத்திரமாக இருக்குமா என்ற சிந்தனையிலேயே இருப்பது உண்மை. விலையுயர்ந்த பொருட்கள் பழுது இல்லாமல் இருக்க வேண்டுமே என்ற கவலை வேறு இத்துடன் சேர்ந்து கொள்கிறது. கார்களை விக்கிரகங்கள் போல வைத்திருப்பவர்களுக்கோ அதில் கீறல் விழுந்து விடக்கூடாதே என்று மனம் சஞ்சலப்படுகின்றது. எனக்கு இந்தப் பொருட்கள் கிடைக்கவில்லையே என்று மனம் கவலைப்படுகின்றது. ஆனால் உங்களுக்கு இவைகள் எல்லாம் தேவை என்பது உங்கள் பரம பிதாவுக்குத் தெரியும் என்ற வசனத்தை நம்பினால் இருக்கும் பொருட்களுடன் மகிழ்ச்சியாக இருக்கமுடியும். தேவைகளை சரியான நேரத்தில் கடவுள் தருவார் என்ற நம்பிக்கையும் இந்த மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்யும்.

சிந்தனை : அதிகப் பொருட்களைவிட சரியான பொருட்களே முக்கியம்.


ஜெபம் : திருப்தியே இல்லாத இந்த உலக வாழ்க்கையில் போதும் என்கிற மனதுடனே கூடிய தேவபக்தியை என்னில் அதிகப்படுத்தும் ஆண்டவரே. ஆமென்.


For Audio Tracks visit : DD-Tamil

For Older Posts visit : http://dropindeocean.blogspot.com/
--
http://micyell.com
micyellmedia@gmail.com
Mobile : 09994258788

No comments: