நீதிமொழிகள் 14
பிறனை அவமதிக்கிறவன் பாவஞ்செய்கிறான். - நீதிமொழிகள் 14:21
புதிதாக ஒரு நாய் வாங்கி வந்திருந்தார் அப்பா. அம்மா மகனைப் பார்த்து கிண்டலாகச் சொன்னார், ”டேய் டாம் உனக்கு ஒரு தம்பி கிடைச்சிருக்காண்டா” மகன் சொன்னான், “ஆமாம்மா உங்க முகச்சாயல் அப்படியே தம்பிக்கு இருக்கு”
சினிமாவின் காமெடி மற்றும் நண்பர்களின் கிண்டல்கள் நமக்கு சிரிப்பு மூட்டினாலும், பிறரை அவமதிப்பது அவர்களது மனங்களில் காயங்களை ஏற்படுத்தும் என்பது நமக்குத் தெரிய வேண்டும். நகைச்சுவை என்ற பெயரில் பிறரை அவமதிப்பது கடவுளுக்கு எதிரானது. ஏனென்றால், கடவுள் இந்த உலகத்திலுள்ள ஒவ்வொரு மனிதனையும் தனது சாயலில் உருவாக்கியிருக்கிறார். எனவே ஒரு மனிதனை அவமதிப்பது என்பது அவனை உருவாக்கிய கடவுளை அவமதிப்பது போன்றதாகும். எனவே தான் பிறனை அவமதிக்கிறவன் பாவம் செய்கிறான் என்று வேதம் சொல்கிறது.
இயேசு நமது மதிப்பைப் பற்றிச் சொல்லும் போது, அநேகம் சிட்டுக்குருவிகளைவிட நீங்கள் விசேஷித்தவர்கள். உங்கள் தலைகளிலுள்ள முடிகள் எல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றது, அவைகளின் ஒன்றும் பிதாவின் சித்தம் இல்லாமல் கீழே விழுவதில்லை என்று சொல்கிறார். வேதத்தின் பல வசனங்கள் நாம் கடவுளின் கண்ணின் மணிகள் என்றும், அவரது உள்ளங்கைகளில் வரைந்து வைக்கப்பட்டிருக்கின்றோம் என்றும் அவர் நம்மைப் பெயர் சொல்லி அழைக்கிறவர் என்றும் சொல்கின்றன. இத்தனை மேன்மைகளும் நமக்கு இருப்பதை உணர்ந்தால் நாம் பிறரை அவமதிக்கமாட்டோம். ஏனென்றால் நமக்கு இருக்கும் இத்தனை பாக்கியங்களும் பிறருக்கு இருக்கின்றன. நம்மைப் போல பிறரை நேசிக்கவேண்டும் என்ற கட்டளையில் நாம் நம்மை மதிக்கிறது போல, பிறர் நம்மை மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது போல நாமும் பிறரை மதிக்க வேண்டும் என்று மறைமுகமாகச் சொல்லப்பட்டிருக்கின்றது.
சிந்தனை : பிறரது உடல் அமைப்பு, குறைகள் போன்றவற்றை வைத்து ஜோக் அடிக்காமல் ஒரு வாரம் முயற்சி செய்யுங்கள். பின்னர் அது பழக்கமாகிவிடும்.
ஜெபம் : ஆண்டவரே நான் உம் பார்வையில் சிறப்பான நபர் என்பதை உணரவும், பிறரது சிறப்பை உணர்ந்து அவர்களை மதிக்கவும் கற்றுத்தாரும். ஆமென்.
For Audio Tracks visit : DD-Tamil
No comments:
Post a Comment