நீதிமொழிகள் 8
என்னைச் சிநேகிக்கிறவர்களை நான் சிநேகிக்கிறேன்; அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள். - நீதிமொழிகள் 8:17
ஜோனத்தான் எட்வர்ட்ஸ் என்னும் பிரபல ஊழியர் 1728 ஜனவரியில் தனது தினசரி நாட்குறிப்பில் இவ்வாறாக எழுதி வைத்திருக்கின்றார். “அதிகாலையிலேயே கல்லறையிலிருந்து எழுந்ததன் மூலமாக காலையில் சீக்கிரமாக எழுந்திருக்க வேண்டும் என்று இயேசு நமக்கு அறிவுரை சொல்கிறார் என்று நினைக்கிறேன்.”
அதிகாலையில் ஏன் ஞானத்தைத் தேட வேண்டும்? பொய்யும், முட்டாள்த்தனமும் உண்மையையும் ஞானத்தையும் விட கவர்ச்சியாகவும் பலவந்தமானதாகவும் இருப்பதால் நாம் அதிகாலையிலேயே ஞானத்தால் நம்மை பலப்படுத்திக் கொள்ள வேண்டும். நாள் முழுவதும் ஞானத்துடன் செயல்பட அதிகாலையிலேயே நாம் தேட வேண்டும். காலையில் நமக்கு இருக்கும் மனநிலை தான் நாள் முழுவதிலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. மட்டுமல்ல, அதிகாலை என்பது அமைதியான நேரமாக இருப்பதால் அதிக கவனத்துடன் நாம் ஞானத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.
வேலையின் காரணமாக பகலில் தூங்கி இரவில் வேலை செய்கிறவர்களுக்கு இந்த அறிவுரைகள் பொருந்துமா? சிலர் பகலில் தூங்கி எழுந்ததும் அமைதியாக ஆண்டவரைத் தேடுகிறார்கள். அல்லது சிலர் வேலை முடிந்து அதிகாலையில் வரும்போது அமைதியாக கடவுளைத் தேடிவிட்டு அதன்பின்னர் தூங்குகின்றனர். எப்படியாக இருந்தாலும், அமைதியாகவும், முதன்மையாகவும் உள்ள நேரத்தை நாம் கடவுளுக்குக் கொடுத்து அவர் தரும் ஞானத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
சிந்தனை : பரபரப்பாக ஊழியம் செய்த இயேசுவே அதிகாலையில் எழுந்திருந்து ஜெபித்தார் என்றால் நமக்கு அது எத்தனை முக்கியமானது!
ஜெபம் : அதிகாலை தோறும் உமது புதிய கிருபைகளைப் பெற்றுக் கொள்ள ஆயத்தமாக இருக்கிறேன் கர்த்தரே, இன்றைய கிருபையைத் தாரும். ஆமென்.
For Audio Tracks visit : DD-Tamil
No comments:
Post a Comment