நீதிமொழிகள் 11
ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்துபோவார்கள்; அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் சுகம் உண்டாகும். - நீதிமொழிகள் 11:14
ஆலோசனையைக் கேட்காதவனுக்கு உதவி செய்யவும் முடியாது. - பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்.
ஆலோசனை என்பது வேப்ப எண்ணெயைப் போன்றது. கொடுப்பது எளிதானது. ஆனால் வாங்கி ருசிப்பது என்பது பயங்கரமான அனுபவம். - ஜாஷ் பில்லிங்க்ஸ்
பி்றரது அனுபவமும் அக்கறையும் நமது முடிவுகளில் தவறு ஏற்படாமல் காத்துக் கொள்ளுகின்றது. ஆலோசனையைத் தள்ளி விழுந்து போன பலரைப்பற்றிய உதாரணங்கள் வரலாற்றிலும் வேத புத்தகத்திலும் உண்டு. சாலமோன் ராஜாவின் மகன் ரெகோபெயாம் பெரியவர்களின் ஆலோசனையைக் கேட்காமல் இஸ்ரவேல் ராஜ்யம் இரண்டாகப் பிரிவதற்குக் காரணமாக இருந்தார். மக்கள் நலனை மறந்து தலைவர்கள் சுயநலத்தை நாடக்கூடாது என்பதற்காகத் தான் ஆலோசனைக் கூட்டங்களும், நிர்வாகக் குழுக்களும் இருக்கின்றன.
ஒருவரது கருத்தைவிட பலரது கருத்துக்கள் நலமாக இருக்கும் என்பதை குழுவாகச் சேர்ந்து ஆராய்ச்சிகள் மற்றும் கலைப்படைப்புகளை உருவாக்குவோர் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். கடவுளும் ஆலோசனைக் கர்த்தர் என்ற பெயருடன் நமக்கு உதவி செய்யக் காத்திருக்கிறார். மேலும் அவரது வேதாகமமானது நம் அனைவருக்குமே ஆலோசனைப் புத்தகமாக இருக்கின்றது. ஆலோசனைகளுக்கு வேதாகமத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டால் சுகம் உண்டாகும்.
சிந்தனை : ஆலோசனைக்காரரில் மோசமானவர் ஒருவர் இருந்தாலும் சுகம் ஏற்படாது. ஆலோசனைக்காரரைத் தேர்ந்தெடுப்பதில் கடவுளின் ஆலோசனையைத் தேட வேண்டும்.
ஜெபம் : ஆலோசனைக் கர்த்தரே, என் தீர்மானங்களில் செயல்களில் உமது ஆலோசனையையும் பிறரது ஆலோசனைகளையும் கருத்தில் கொள்ள, சுயநலமானதும் அறிவில்லாததுமான முடிவுகளில் இருந்து என்னைக் காத்தருளும். ஆமென்.
For Audio Tracks visit : DD-Tamil
No comments:
Post a Comment