நீதிமொழிகள் 7
ஞானத்தை நோக்கி, நீ என் சகோதரி என்றும், புத்தியைப்பார்த்து, நீ என் இனத்தாள் என்றும் சொல்வாயாக. - நீதிமொழிகள் 7:5
ஆண்கள் மற்றும் பெண்கள் ஒருவருக்கொருவர் நண்பர்களாக இருப்பது என்பது இந்தக் காலத்து நாகரிகமாகவும், பிரச்சனையாகவும் மாறிவிட்டது. ஒரு ஆண் எல்லாப் பெண்களையும் சகோதரியாகவும் சொந்தக்காரியாகவும் பார்த்தால் தவறான இச்சைகளுக்கு வழியில்லை. பிரச்சனைகள் குறைந்து போகும். ஆனால் இயற்கையிலேயே ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒருவர் மேல் ஒருவருக்கு இருக்கும் கவர்ச்சி அல்லது ஈர்ப்பு என்பது உறவுகளில் கறைகளைக் கொண்டுவந்துவிடுவது தான் நாம் விரும்பாத உண்மையாகும்.
ஞானத்தையும் புத்தியையும் உங்களது சகோதரி (அல்லது சகோதரன்) என்று சொல்லும் போது தவறான உறவுகளும், தவறான பழக்கங்களும் நம்மைவிட்டுப் போய்விடும். நமக்கு ஞானம், புத்தி ஆகிய சகோதரிகள் இருக்கும் போது தவறானதும் முட்டாள்த்தனமானதுமான நண்பர்கள் நமக்கு தீங்கு செய்ய முடியாது. சகோதர சகோதரிகள் உரிமையோடு, பாசத்தோடு உங்களைப் பாதுகாப்பார்கள்.
நமது கலாச்சாரத்தில் ஆண் பெண் உறவுகள் நட்பு என்ற முறையில் இருப்பதில்லை. அது தவறாகவே பேசப்படுகின்றது. ஒன்றாகப் படிக்கிறவர்கள், வேலை செய்கிறவர்களைப் பகைஞர்களைப் போலவும் நடத்த முடியாது. இந்த நிலையில் தான் ஞானமும் புத்தியும் நமக்குத் தேவை. உச்சங்களுக்குப் போகாமல், சமநிலையாக நடந்து கொள்வதற்கு ஞானம்/புத்தி ஆகிய சகோதரிகள் நமக்குத் தேவை.
சிந்தனை : ஞானத்தையும் புத்தியையும் சகோதரிகளாகவும் சகோதரர்களாகவும் வைத்திருக்கும் இளைஞர்களுக்கு கேர்ள் ஃப்ரண்ட்/பாய் ஃப்ரண்ட்களுடன் செலவிட அதிக நேரமே இருக்காது.
ஜெபம் : அன்பின் ஆண்டவரே, ஆண்கள் பெண்களுடனான எங்கள் உறவுகள் பரிசுத்தமானதாக இருக்க எங்களைக் காத்துக் கொள்ளும். ஞானத்துடனும் புத்தியுடனும் நாங்கள் பழக உதவும். ஆமென்.
For Audio Tracks visit : DD-Tamil
No comments:
Post a Comment