யோவான் 8:31-41
சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும். - யோவான் 8:32
போலந்தில் வாழ்ந்த மாபெரும் சிந்தனையாளர் இம்மானுவேல் கான்ட்-இன் தகப்பன் மிகவும் தெய்வ பயமுள்ளவர். ஒரு நாள் அடர்ந்த காட்டுக்குள் பயணமாகச் சென்ற போது திருடர் கூட்டம் வந்து ”விலையுயர்ந்த பொருட்களை எல்லாம் கொடு” என்று கேட்டார்கள். பணப்பை, ஜெப புத்தகம், குதிரை ஆகியவற்றுடன் அவர்கள் போன பின்னர் தான் தனது ஆடையின் மடிப்பில் தங்கத்தை பத்திரமாக தைத்து வைத்திருந்தது அவர் நினைவுக்கு வந்தது. திருடர்களின் பின்னே ஓடிப் போய், ”தங்கத்தை மறந்து விட்டேன்” என்றார். பொருட்களை எல்லாம் திரும்பக் கொடுத்து குதிரையில் ஏற்றி பத்திரமாகப் போகச் செய்ததுடன் போகும் முன் ஜெபிக்கச் சொன்னார்களாம் திருடர்கள்.
உண்மையைப் பொய்யாகவும் பொய்யை உண்மையாகவும் மாற்றும் பலர் இந்த உலகத்தில் இருக்கின்றார்கள். உண்மை என்றே ஒன்று இல்லை என்று வாதிடுகிறவர்கள் இருக்கின்றார்கள். தாங்கள் சொல்வது தான் உண்மை என்று பிடிவாதமாகச் சாதிக்கிறவர்களும் இருக்கின்றார்கள். ஆனால் அனைவரும் தாங்கள் உண்மை என்று நம்புகிற ஒன்றுக்கு அடிமையாக இருக்கின்றார்கள். அவர்களால் வேறு எதைப்பற்றியும் சிந்திக்கவோ செயல்படவோ முடியவில்லை.
தங்கள் ஜாதி, அல்லது மதம் அல்லது இனம் தான் சிறந்தது என்று நம்பும் சிலர் மற்றவர்களைத் துன்புறுத்துகிறார்கள். தங்கள் கொள்கை மட்டும் தான் உண்மை என்று சொல்லி மற்ற கொள்கையினரை பாடுகளுக்கு உள்ளே தள்ளுகிறவர்கள் தாங்கள் உண்மை என்று நம்பியிருக்கின்ற கொள்கையினால் அடிமைப்படுத்தப்பட்டுக் கிடக்கிறார்கள். ஆனால் நானே சத்தியம் என்று சொன்ன இயேசுவை அறிந்தவர்களோ அவரால் விடுதலை செய்யப்பட்டவர்களாக, மாற்றுக் கருத்து உள்ளவர்களையும் தங்களை விட வித்தியாசமாக இருப்பவர்களையும் ஏற்றுக் கொண்டு அன்பு செய்யத் துவங்குகிறார்கள். இங்கே தான் உண்மையான விடுதலை துவங்குகிறது. ஏனென்றால் நானே உண்மை என்று சொன்னவர் எதிரிகளையும் நேசியுங்கள் என்று சொல்லியிருக்கின்றாரே?
சிந்தனை : உண்மையை இயேசுவுக்கு வெளியே தேடினால் அடிமையாவோம். இயேசுவே சத்தியம் என்று அறியும் போது விடுதலை பெறுவோம்.
ஜெபம் : சத்தியமாகிய கர்த்தரே, உம்மை அறிய, உம்மால் விடுதலை பெற, விடுதலையைப் பிறருக்கு அறிவிக்க என்னை உம் கையின் கருவியாக்கும். ஆமென்.
For Audio Tracks visit : DD-Tamil
micyellmedia@gmail.com
Mobile : 09994258788
No comments:
Post a Comment