Sunday, May 6, 2012

May 6, நதிமூலம்

யோவான் 7:25-44


என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனோ அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும். - யோவான் 7:38


டேவிட் வில்க்கர்சன் என்ற ஊழியர் அமெரிக்காவிலுள்ள பல கலவரக் கும்பல்களின் தலைவர்களைக் கண்டு அவர்களுக்கு இயேசுவின் நற்செய்தியைக் கூறினார். அடிதடிகளிலும், கொள்ளைகளிலும் ஈடுபட்டிருந்த நிக்கி குரூஸ் என்பவன் டேவிட் வில்க்கர்சனை வெறுத்தான். அவரைக் கீழே தள்ளி துப்பி, இனிமேல் நான் இருக்கும் இடத்துக்கு வந்தால் கொன்றுவிடுவேன் என்று சொன்னான். ஆனால் டேவிட் “நீ என்னைத் துண்டு துண்டாக வெட்டிப் போட்டாலும் ஒவ்வொரு துண்டும் உன் மேல் நேசமாக இருக்கும்” என்றார். இந்த அன்பை எங்கும் அறிந்திருக்காத நிக்கி குரூஸ் படிப்படியாக இயேசுவின் நற்செய்தியை அறிந்து ஏற்றுக் கொண்டு தானும் இப்படிப்பட்ட தீய பழக்கமுள்ள வாலிபர்களுக்கு ஊழியனாக மாறினார்.

கிறிஸ்துவிடம் விசுவாசமாக இருப்பவர்களால் தங்களை அடக்கிக் கொள்ள முடியாது. கிறிஸ்துவின் அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது என்று பவுல் சொன்னது போல, கடவுளின் பாதிப்பு ஏற்பட்ட ஒரு மனிதன் சாதாரண மனிதனாக இருக்க முடியாது. மோசே கடவுளை சந்தித்துத் திரும்பி வந்த போது மக்கள் அவர் முகத்தில் இருந்த பிரகாசத்தைப் பார்த்து பயந்தார்கள். மோசே முக்காடு போட்டுக் கொண்டார்.

சமூக சேவை செய்த பலரும், சமுதாயங்களில் மாபெரும் மாற்றம் கொண்டு வந்தவர்களும் தங்களது சேவைகளுக்கும், நல்ல குணங்களுக்கும் காரணம் இயேசு தான் என்று வெளிப்படையாகச் சொல்லியிருக்கின்றார்கள். மக்களின் ஆன்மீகத் தாகத்தைத் தீர்ப்பது உயிருள்ள நீராகிய இயேசு தான். அதே ஜீவ நீரானது, அவரை ஏற்றுக் கொண்டவர்களின் உள்ளங்களிலும் இருந்து புறப்பட்டு மற்ற மக்களின் தாகத்தைத் தீர்க்க செல்லும் என்று இயேசு சொல்கிறார்.

இயேசுவை விசுவாசிப்பவர்களின் வாழ்க்கை பிறரது தாகத்தைத் தீர்ப்பதாக இருக்க வேண்டும். அதற்கு முதல் படியானது ஒவ்வொரு கிறிஸ்தவனும் ஜீவ நதியாகிய இயேசுவின் மூலம் தாகம் தீர்க்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும். பின்னர் அதே ஜீவ நதி தங்களிடமிருந்து பிறருக்கு செல்வதற்கான வழிகளைச் செய்ய வேண்டும்.

சிந்தனை : அடக்கி வைக்கப்பட்ட நதி வெள்ளச் சேதத்தைத் தரும். அணையால் திருப்பி விடப்படும் நதி விவசாயத்துக்கும், மின்சாரத்துக்கும் பயன்படும். ஜீவநதியை அடக்கி வைக்காமல் திட்டமிட்டு பிறருக்கு உதவி செய்யலாம்.

ஜெபம் : ஜீவநதியாகிய என் தேவனே, எனக்குள் இருக்கும் உம்மால் என்னைச் சுற்றி இருப்பவர்கள் தாகம் தீர்க்கப்பட நல்ல அணையாக, வாய்க்காலாக என்னைப் பயன்படுத்தும். ஆமென்.


For Audio Tracks visit : DD-Tamil

For Older Posts visit : http://dropindeocean.blogspot.com/
--
http://micyell.com
micyellmedia@gmail.com
Mobile : 09994258788

No comments: