Sunday, May 27, 2012

May 27, இலவச வீடு

யோவான் 14:1-14


என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன். - யோவான் 14:2


சில பொருட்களை வாங்கினால் பரிசுக்கூப்பன் கிடைக்கிறது. குலுக்கல் முறையில் அதிர்ஷ்ட்டசாலிக்கு வீடு பரிசாகக் கிடைக்கிறது. அதைப் போலவே குடிசை மாற்று வாரியம் குடிசையில் இருப்பவர்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடுகளைக் கொடுக்கின்றது. ஆனால் இயேசுவோ தம்மைப் பின்பற்றுபவர்களுக்குப் பரலோகத்தில் ஒரு வீட்டைத் தருவதாக வாக்குக் கொடுக்கிறார்.

அவர் சொன்னது உண்மை என்பதை வலியுறுத்திச் சொல்வதற்காக ”அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்” என்றும் சொல்லியிருக்கிறார். இயேசு வாக்குக் கொடுத்ததை நிறைவேற்றுவார் என்பதற்குப் பல ஆதாரங்கள் இருக்கின்றன. அவர் சொன்னது போலவே இறந்து மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார். அப்படியே நான் போய் உங்களுக்காக பரிசுத்த ஆவியானவரை அனுப்புவேன் என்று சொன்னது போலவே பரிசுத்த ஆவியானவரை அனுப்பி வைத்திருக்கிறார். அப்படியே உங்களுக்காக ஒரு இடத்தைப் பரலோகத்தில் ஆயத்தம் செய்யப் போகிறேன் என்று சொன்ன அவரது வாக்குத்தத்தத்தையும் நாம் நம்பலாம்.

பரலோகமும் நரகமும் இந்த உலகத்திலேயே இருக்கின்றன, நாம் வாழும் வாழ்க்கை தான் நரகமாகவோ மோட்சமாகவோ இருக்கிறது என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் இயேசு மிகத் தெளிவாகப் பரலோகத்தைப் பற்றியும் நரகத்தைப் பற்றியும் போதித்திருக்கிறார். அத்துடன் ஆயத்தம் பண்ணின பின்பு மீண்டும் வந்து உங்களை அழைத்துச் செல்வேன் என்கிறார். இயேசுவின் இரண்டாம் வருகையைப் பற்றி வேதபுத்தகத்தில் மூன்றில் ஒரு பகுதி விளக்கமாகச் சொல்கிறது. இதை விசுவாசிக்கிறவர்கள் அந்த வாசஸ்தலத்துக்குத் தகுதியானவர்களாக இந்த உலகத்தில் நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.


சிந்தனை : இந்த உலகத்தில் நாம் வாழும் சிறந்த வாழ்க்கை தான் பரலோக வாசஸ்தலத்தில் வீட்டைப் பெறுவதற்கான விலைக்கிரயமாகும்.


ஜெபம் : பரலோகப் பிதாவே, இந்த உலகத்தை மட்டுமே முழுமையாக சார்ந்து இருக்காமல் உமது வாசஸ்தலத்தைப் பற்றிய நினைவுடன் வாழ உணர்வுள்ள இருதயத்தைத் தாரும். ஆமென்.


For Audio Tracks visit : DD-Tamil

For Older Posts visit : http://dropindeocean.blogspot.com/
--
http://micyell.com
micyellmedia@gmail.com
Mobile : 09994258788

No comments: