யோவான் 13:1-17
ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள். - யோவான் 13:14
யூத போதகர்கள் உவமைகளை அதிகமாக உபயோகிப்பார்கள். இயேசு உவமைகள் அல்லாமல் போதித்ததே இல்லை என்று வேதம் சொல்கிறது. இயேசு தினசரி நாம் பார்க்கின்ற, கடுகு, காகம், குருவி, விதை, புளித்த மாவு, விவசாயம், களை போன்ற எளிமையானவற்றையே தனது உவமைகளில் பயன்படுத்தினார். அத்துடன் அன்பு என்றால் என்ன என்பதைத் தனது மரணத்தின் மூலம் நிரூபித்துக் காட்டவிருந்த இயேசு தாழ்மை என்றால் என்ன என்பதைத் தன் சீடர்களுக்குக் கற்றுக் கொடுக்க சரியான நேரத்தை எதிர்பார்த்திருந்தார். ஏனென்றால் சீடர்களுக்குள் யார் பெரியவன் என்கிற சண்டை ஏற்பட்டிருந்தது. அவரது மரண வேளையும் நெருங்கிக் கொண்டிருந்தது. அவர்கள் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடும் கடைசி நேரமும் வந்தது.
இயேசு தாழ்மையைப் பற்றிக் கற்றுக் கொடுக்கத் தன்னையே ஒரு உவமையாக்கி, ஒரு வேலைக்காரன் செய்யும் வேலையைச் செய்து அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார். ஆண்டவரும் போதகருமாகிய நானே எனது உயர்ந்த பதவியிலிருந்து கொண்டு இதைச் செய்தால் நீங்களும் பதவிகளை மறந்து ஒருவருக்கு ஒருவர் தாழ்மையாக உதவி செய்ய வேண்டும் என்பதை அவர் தெளிவாகக் கற்றுக் கொடுத்தார். இந்த உலகத்தின் அதிகாரங்கள் பதவிகள் போன்றவை பிறரை நமக்கு வேலைக்காரர்களாக வைத்துக் கொள்ளத் தூண்டும் போது இயேசு நம்மைப் பார்த்து நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள் என்கிறார். அவரது தாழ்மைக்குப் பலனாகத் தான் உலகமும் வானமும் அதிலுள்ள யாவரும் இயேசுவின் முன் முழங்கால்களை முடக்கி எல்லா நாவுகளும் அவரை கர்த்தர் என்று அறிக்கையிடும் என்று வேதம் சொல்கிறது.
சிந்தனை : இயேசுவை விட மேலான பதவியில் யாரும் இருக்கவும் முடியாது. இயேசுவைப் போல தாழ்மையான வேலையை யாரும் செய்திருக்கவும் முடியாது.
ஜெபம் : இரட்சகரே, உமது தாழ்மையின் சிந்தையே என்னிலும் இருக்க என்னை கண்டித்து உணர்த்தி என் பெருமையான சிந்தனைகளை எடுத்துப் போடும். ஆமென்.
For Audio Tracks visit : DD-Tamil
micyellmedia@gmail.com
Mobile : 09994258788
No comments:
Post a Comment