யோவான் 11:1-16
அவன் வியாதியாயிருக்கிறதாக அவர் கேள்விப்பட்டபொழுது, தாம் இருந்த இடத்திலே பின்னும் இரண்டுநாள் தங்கினார். - யோவான் 11:6
எட்டாவது ஹென்றி மன்னராக இருந்த போது இங்கிலாந்தின் முக்கிய பட்டணங்களுக்கு அரச செய்தியைக் கொண்டு செல்வதற்காக குதிரைகள் தபால் அலுவலர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தன. சில தபால்காரர்கள் பொறுப்பு இல்லாதவர்களாக, பயணம் செய்யும் வழிகளில் சத்திரங்களிலும், சாவடிகளிலும் நேரத்தை வீணடித்ததால் கடினமான சட்டம் இயற்றப்பட்டது. தபால்காரர்கள் அரச செய்தியைக் கொண்டுவருவதில் தாமதம் செய்தார்கள் என்றால் அவர்களை பொது இடத்தில் தூக்கில் இடவேண்டும் என்பதுவே அரச கட்டளை. முக்கிய கடிதங்களில் ஒரு மனிதன் தூக்கில் தொங்குவது போன்ற படத்தையும் வரைந்திருந்தார்களாம். அந்தப் படத்தின் கீழ் உயிருக்குப் பயந்து ஓடு என்று எழுதியிருக்குமாம்.
ஆனால் லாசருவின் உயிரைக்காக்க ஓட வேண்டும் என்று இயேசுவுக்குத் தோன்றவில்லை. ஏனென்றால் நடக்கப் போவது என்ன என்பது இயேசுவுக்கு முன்பாகவே தெளிவாகத் தெரிந்திருந்தது. இரண்டு நாட்கள் தங்கி, இரண்டு நாட்கள் பயணத்துக்கு செலவிட்டால் தான் இறந்து நான்கு நாட்களான லாசருவை உயிரோடு எழுப்பித் தன் தெய்வீகத் தன்மையை நிரூபிக்க முடியும். அத்துடன் நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன் என்ற உண்மையையும் அனைவருக்கும் தெளிவாகச் சொல்லமுடியும் என்று தெரிந்ததால் பின்னும் இரண்டு நாட்கள் அதே ஊரில் தங்கினார் இயேசு.
இயேசுவின் கால மேலாண்மை என்பது நமது கால அட்டவணைகளுக்கும் திட்டங்களுக்கும் முற்றிலும் வித்தியாசமானதாக இருந்ததை இதன் மூலம் நாம் கண்டு கொள்ளலாம். இயேசு பரபரப்பாக இருந்ததும் இல்லை. சோம்பலாக இருந்ததும் இல்லை. அவரது வேளை வரும் போது தான் எந்த விஷயத்தையும் செய்தார்.
சிந்தனை : என் வேளை இன்னும் வரவில்லை என்று நம்மால் சொல்ல முடியாது. ஆனால் கடவுளின் வேளை எது என்பதை அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
ஜெபம் : ஆண்டவரே, என் வாழ்வில் உமது வேளை எப்போது வந்திருக்கின்றது என்று அறிந்து சரியான வேகத்தில் உம் பாதையில் பயணம் செய்ய உணர்வுள்ள மனதைத் தாரும். ஆமென்.
For Audio Tracks visit : DD-Tamil
micyellmedia@gmail.com
Mobile : 09994258788
No comments:
Post a Comment