Friday, May 4, 2012

May 5, தீர்ப்பு மாறுது

யோவான் 7:14-24


தோற்றத்தின்படி தீர்ப்பு செய்யாமல், நீதியின்படி தீர்ப்புசெய்யுங்கள். - யோவான் 7:24


அழுக்கான உடைகளும் கலைந்த தலையுமாக ஒருவர் ஒரு ஆள் நெருக்கமுள்ள சாலை ஓரத்தில் நின்று கொண்டு, ”ஐயா, என்னோட பணம் எல்லாம் தொலைந்து போய்விட்டது. ஊருக்குப் போக வழியில்லை. ஏதாவது உதவி செய்யுங்கள்” என்று கேட்டார். சிலர் தான் திரும்பிப்பார்த்தனர். மிகச்சிலரே சின்ன உதவி செய்தனர். சிறிது நேரத்துக்குப் பின் அதே நபர், கோட் சூட் போட்டுக் கொண்டு அதே பாடலைப் பாடினார்,”எக்ஸ் க்யூஸ் மி, என்னோட பணம் எல்லாம் தொலைந்து போய்விட்டது. ஊருக்குப் போக வழியில்லை. ஏதாவது உதவி செய்யுங்கள்” பலர் அவருக்கு அதிகமான பணம் கொடுத்து உதவினார்கள். இதன் மூலம் நமது வெளிப்புறத் தோற்றத்துக்கு மக்கள் அதிக முக்கியத்துவம் தருகிறார்கள் என்று அந்த ’நிகழ்ச்சியை’ ஏற்பாடு செய்தவர்கள் தங்கள் ஆராய்ச்சி முடிவாகச் சொன்னார்கள்.

வெளித்தோற்றத்தை மட்டுமே நாம் பார்க்க முடியும். மனிதர்களின் மனதில் இருப்பவற்றை முழுவதுமாக நம்மால் தெரிந்து கொள்ள முடியாது. நீதியின்படி தீர்ப்பு செய்ய வேண்டுமானால் கடவுள் ஒருவர் தான் உதவி செய்ய முடியும். பல நிரபராதிகள் கூட சரியான ஆதாரங்கள் இல்லாததால் நீதி கிடைக்காமல் தண்டனைகளைப் பெற்றிருக்கிறார்கள். பல குற்றவாளிகள் ஆதாரங்கள் இல்லாததால் அல்லது ஆதாரங்கள் அழிக்கப்பட்டதால் தப்பியிருக்கிறார்கள்.

இந்த உலகத்தில் ஒரு நபரை நல்லவர் என்றோ மோசமானவர் என்றோ நாம் உடனடியாகத் தீர்ப்பு செய்துவிடக்கூடாது. அந்த நபரை நீதியின்படி எப்படிப் பட்டவர் என்று அறிந்து கொள்ள கடவுளின் உதவியை நாம் நாட வேண்டும். பல சூழ்நிலைகளில் மற்றவர்களோடு பழகும் போது அவர்களது உண்மை நிலையைக் கண்டுபிடிக்கும் ஞானத்தை நமக்குள் இருக்கும் ஆவியானவர் நமக்குத் தருவார்.

சிந்தனை : மனிதர்கள் முகமூடிகள் போட்டிருக்கலாம். ஆனால் கடவுள் மனமூடிகளையும் தாண்டி சிந்தனைகளையும் அறிபவர்.


ஜெபம் : ஆண்டவரே, அறிவில்லாமல் எல்லாரையும் நம்பி பாதிக்கப்படாமலும், எல்லோரையும் சந்தேகித்து துன்பப்படாமலும், மக்களை சரியாக நிதானிக்க எனக்கு வழிகாட்டும். ஆமென்.


For Audio Tracks visit : DD-Tamil

For Older Posts visit : http://dropindeocean.blogspot.com/
--
http://micyell.com
micyellmedia@gmail.com
Mobile : 09994258788

No comments: