யோவான் 10:1-21
இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவரவேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும். அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும். - யோவான் 10:16
சாதாரணமாக ஒரு கிறிஸ்தவர் ஆறாயிரம் பிரசங்கங்களைக் கேட்டிருக்கிறார் என்றும், எட்டாயிரம் ஜெபங்களுக்கு ஆமென் சொல்லியிருக்கிறார் என்றும், இருபதாயிரம் பாடல்களை மீண்டும் மீண்டும் பாடியிருக்கிறார் என்றும் கணக்கிடுகிறர் ஹெர்ப் மில்லர் என்பவர். ஆனால் அவர்கள் ஒருவர் கூட இன்னொருவரை இயேசுவைத் தன் இரட்சகராக ஏற்றுக் கொள்ளும்படி கேட்டதில்லை என்னும் செய்தியையும் அவரே சொல்கிறார்.
திருச்சபை ஒன்று தான் தனக்கு வெளியே இருக்கும் மக்களின் நலனுக்காக செயல்படும் ஒரு அமைப்பு என்பார்கள். நாம் நம்மைச் சுற்றியிருக்கிறவர்களுக்கு இயேசுவை அறிமுகம் செய்ய வேண்டியது நமது பொறுப்பு மட்டுமல்ல நமது பாக்கியமுமாகும். கிறிஸ்தவர்கள் மற்றவர்கள் என்ற பிரிவினை இல்லாமல் அனைவரும் ஒரே மந்தையாக மாற வேண்டும் என்பதுவே இயேசுவின் விருப்பமாகும். அவரது சத்தத்தைக் கேட்காத மக்கள் அதிகம் பேர் இருக்கத்தான் செய்வார்கள் என்றாலும் அனைவருக்கும் அவரைப் பற்றிச் சொல்ல வேண்டியது நமது கடமையாகும்.
இயேசுவின் பணியாகிய ஆடுகளை தொழுவத்துக்குக் கொண்டுவருவதில் நாமும் ஒரு கூட்டாளியாக இருப்பது என்பது நமக்குக் கடவுள் தந்த ஒரு பெரும் பாக்கியமாகும். ஆகவே எப்போதும் கிறிஸ்தவர்கள், ஆலயம், கூட்டங்கள் என்று இருக்காமல் பிறருக்கும் நற்செய்தியைச் சொல்லும் பணியில் ஈடுபட வேண்டும். ஆடுகள் தொழுவத்துக்குள் அடைவது முக்கியம். ஆனால் நாமோ தொழுவத்துக்குள் இல்லாமல் வெளியே அபாயத்துக்குள் இருக்கும் ஆடுகளை தொழுவத்துக்குள் அழைத்துவர வேண்டும்.
சிந்தனை : இயேசு விரும்பும் ஒரே மந்தை ஒரே மேய்ப்பன் என்னும் சூழல் வரவேண்டுமானால் நாம் பிரிவினைகளை விட இணைக்கும் அமசங்களை அதிகம் பார்க்க வேண்டும்.
ஜெபம் : பிரதான மேய்ப்பரே, உம்மை அறியாதவர்களுக்கு உம்மைப் பற்றிச் சொல்லி உம் மந்தையில் சேர்க்க எனக்கு வாய்ப்புகளையும், தைரியத்தையும் தாரும். ஆமென்.
For Audio Tracks visit : DD-Tamil
micyellmedia@gmail.com
Mobile : 09994258788
No comments:
Post a Comment