Wednesday, May 2, 2012

May 3, பஞ்ச் டயலாக்

யோவான் 6:60-71


ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே. - யோவான் 6:68


பேதுருவின் மூளை சிந்திப்பதற்கு முன்பு வாய் பேசிவிடும் என்பார்கள். ஆனால் இங்கே அவர் பேசிய வார்த்தைகள் ஆண்டவரால் அவருக்கு வெளிப்படுத்தப்பட்டதாக, மாபெரும் உண்மையைச் சொல்வதாக இருக்கின்றது. முடிவே இல்லாத நித்திய காலத்துக்கான உயிரைத் தரும் வசனங்கள் இயேசுவிடம் மட்டும் தான் உண்டு. வேறு யாரிடமும் போக முடியாது, போகத் தெரியாது என்று சொல்கிறார் பேதுரு.

இனிமேல் இலவச சாப்பாடு கிடைக்காது என்றும், அவரது போதனைகள் கடினமாக இருக்கின்றன என்றும் சொல்லி பலர் இயேசுவை விட்டு போய்விட்ட பின் இயேசு தனது சீஷர்களிடம் நீங்களும் போய்விட நினைக்கிறீர்களோ என்று கேட்க பேதுரு இப்படிச் சொல்கிறார், “ஆண்டவரே யாரிடத்தில் போவோம்?” கானாவூரில் ரசம் குடித்தது, இரண்டு தடவைகள் மீன் மற்றும் அப்பம் அற்புதமாக சாப்பிட்டது, தனது மாமியார் சுகமானது, இன்னும் பல அற்புதங்களை நேரில் பார்த்த பேதுரு அந்த அற்புதங்களை எல்லாம் விட இயேசுவிடம் இருக்கும் நித்திய ஜீவ வசனங்கள் தாம் முக்கியமானவைகள் மேலானவைகள் என்பதைத் தெரிந்த பேதுரு யாரிடத்தில் போவோம் என்று கேட்கிறார்.

வேறு யாரிடத்தில் போனாலும், அற்புதமாகக் கிடைக்காவிட்டாலும் சாதாரணமாக உணவு போன்ற உதவிகள் கிடைக்கும் ஆனால் இயேசுவிடம் மட்டும் தான் நித்திய ஜீவ வசனங்கள் உண்டு. மற்ற எந்த உதவிகளும், பொருட்களும் இந்த உலகத்தோடு அழிந்து போய்விடும் ஆனால் மறு உலகத்திலும் வாழ்வு தருவது ஆண்டவரின் வார்த்தைகள் தாம். எனவே தான் எதை இழந்தாலும், யாரை விட்டாலும் இயேசுவை மட்டும் விட்டுவிடக்கூடாது.


சிந்தனை : யாரிடம் போக வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளும் முன்பதாக அவரிடம் ஏன் போக வேண்டும் என்று புரிந்து கொள்ள வேண்டும். நித்திய ஜீவ வசனங்கள் கர்த்தரிடம் மட்டுமே உண்டு.

ஜெபம் : ஆண்டவரே, கடினமானதாக உமது உபதேசம் இருந்தாலும், இடுக்கமாக உமது பாதை இருந்தாலும், வேறு யாரிடமும் போகாத மனதைத் தாரும். ஆமென்.


For Audio Tracks visit : DD-Tamil

For Older Posts visit : http://dropindeocean.blogspot.com/
--
http://micyell.com
micyellmedia@gmail.com
Mobile : 09994258788

No comments: