யோவான் 14:15-31
என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. - யோவான் 14:27
ஒரு யூதன் தனது ரபியிடம் போய் ”என் வாழ்க்கையில் அமைதியே இல்லை என் வீட்டில் ஒரே அறையில் ஒன்பது பேர் தங்கிக்கொண்டிருக்கிறோம். நான் என்ன செய்வது?” என்று கேட்டானாம். ரபி சொன்னார் ”உன்னிடம் இருக்கும் ஆட்டுக்குட்டியையும் அந்த அறைக்குள் வைத்துக் கொள். ஒரு வாரத்துக்குப் பின் என்னை வந்து பார்” அவன் தயங்கினாலும் ரபி அவனை வற்புறுத்தினார். அடுத்த வாரம் அவன் வந்தான், “ஐயோ அந்த ஆடு நாறுகிறது. கத்திக் கொண்டே இருக்கிறது. தாங்கமுடியவில்லை” என்றான். ”வீட்டுக்குப் போய் அந்த ஆட்டை வெளியே கட்டிப் போட்டுவிட்டு அடுத்த வாரம் வா” என்றார் ரபி. அடுத்த வாரம் சிரித்த முகத்துடன் வந்த யூதன், “அந்த ஆடு போனப்புறம் வீடு அமைதியா இருக்குது” என்றான்.
இந்த உலகத்தில் உள்ள பல பொருட்களும் செயல்களும் நமக்கு தற்காலிகமான அமைதியைத் தருவது உண்மை தான். உலகம் தரக்கூடிய சமாதானமும் இருக்கின்றது. ஆனால் இயேசு தருவதுவோ உலகம் தரக்கூடாத சமாதானம். இந்த உலகம் தரும் சமாதானம் பணம் செலவு செய்து கிடைக்கக் கூடியது. அந்தப் பொருளோ செயலோ இல்லையென்றால் சமாதானமே இல்லை என்பது போல இருக்கும். ஆனால் இயேசு தரும் சமாதானமோ, பிரச்சனைகளின் நடுவில், வேறு எந்த பொருளோ செயலோ இல்லாமல் இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தால் மட்டுமே கிடைக்கக் கூடியதாகும். மேலும் இயேசு என்னுடைய சமாதானத்தையை உங்களுக்குக் கொடுக்கிறேன் என்கிறார். அதாவது சமாதானப் பிரபுவாகிய அவர் கொடுக்கின்றதைப் போல வேறு யாரும் எதுவும் சமாதானத்தைக் கொடுக்க முடியாது.
சிந்தனை : சமாதானப் பறவைகளாக இருந்த பல தலைவர்கள் தங்கள் உயிரைக் கொடுத்தும் இந்த உலகத்தில் சமாதானத்தை ஏற்படுத்த முடியவில்லை. ஆனால் இயேசுவோ தன்னையே தந்ததுடன் தனது சமாதானத்தையே தருகிறார்.
ஜெபம் : சமாதானப் பிரபுவே, என் வாழ்வின் போராட்டங்கள், பாடுகள் நடுவில் நீர் தரும் சமாதானத்தை அனுபவிக்க, உமக்கு சாட்சியாக வாழ என்னை பெலப்படுத்தும். ஆமென்.
For Audio Tracks visit : DD-Tamil
micyellmedia@gmail.com
Mobile : 09994258788
No comments:
Post a Comment