யோவான் 15:16-16:4
நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது. - யோவான் 15:19
ஜெர்மனியின் சர்வாதிகாரியான ஹிட்லர் திருச்சபையை அரசாங்கத்தின் அடிமையாக்கி, தனது கொடூரமான திட்டங்களுக்கு எல்லாம் தலையாட்டும்படி செய்தபோது, டிட்ரிச் பான்ஹூஃபர் என்னும் ஒரு ஆன்மீகத்தலைவர் ஹிட்லரை எதிர்த்தார். ஜெர்மனியர்கள் அனைவரும் உயர்ந்தவர்கள்; உலகத்தையே ஆளப்பிறந்ததவர்கள். தாழ்ந்தவர்களாகிய யூதர்களை உயிருடன் இருக்க விடக்கூடாது என்பதுவே ஹிட்லரின் தத்துவமாகும். ஆனால் கடவுளின் படைப்பில் அனைவரும் சமமே என்றும், அரசாங்கத்தின் அட்டூழியத்திற்கு உண்மையான கிறிஸ்தவர்கள் துணை போகக்கூடாது என்றும் பான்ஹூஃபர் தீவிரமாகப் போதித்தார். அவரும் அவருடைய நெருங்கிய தோழர்களும் கொலைக்குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டார்கள். அந்த மாமனிதர் உலகத்திற்கு ஏற்றபடி வாழாமல் கடவுளைப் பின்பற்றத் தீர்மானித்ததால் தான் ஹிட்லரால் பகைக்கப்பட்டார். தன் உயிரையும் இழந்தார்.
நேர்மையானவர்கள் பாராட்டப்பட்ட காலம் மாறி அவர்கள் கிண்டலுக்குள்ளானார்கள். இப்போதோ, நேர்மையானவர்கள் துன்புறுத்தப்பட்டு தண்டிக்கப்படும் காலமாக இருக்கின்றது. காரணம் நாம் நாம் உலகத்தார் அல்ல. பரிசுத்தமானவர்களாக, கடவுளால் பிரித்தெடுக்கப்பட்டவர்களாக இருப்பதால் தான் இந்த உலகம் நம்மைப் பகைக்கிறது. ஏனென்றால் இந்த உலகமானது பொல்லாங்கனுக்குள் கிடக்கின்றது. உலகத்தைப் படைத்தவர் நம் கடவுள் என்றாலும் மனிதன் தனது கீழ்ப்படியாமையினாலும் கடவுளுடன் கொண்ட பகையினாலும் இந்த உலகத்தை சாத்தானிடம் விற்றுப் போட்டதால் இந்த உலகத்தின் அதிகாரங்களும், சக்திகளும் நம்மை எதிர்க்கின்றன. ஆனாலும் நம்முடன் கடவுள் இருக்கிறார் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
சிந்தனை : தீமை செய்து தண்டனை அனுபவிப்பது நீதி. நன்மை செய்து தீமை அனுபவிப்பது பாக்கியம்.
ஜெபம் : சர்வவல்ல கர்த்தரே, உம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டதால் நான் அடைகின்ற போராட்டங்களுக்காக துன்பங்களுக்காக நன்றி. நீர் எல்லா சூழ்நிலைகளிலும் என்னுடன் இருக்கிறீர் என்ற உண்மையைப் புரிந்து உணர அருள்புரியும். ஆமென்.
For Audio Tracks visit : DD-Tamil
micyellmedia@gmail.com
Mobile : 09994258788
No comments:
Post a Comment