Tuesday, May 29, 2012

May 29, இயேசுவின் நண்பர்கள்

யோவான் 15:1-15


நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன். - யோவான் 15:15


ஒரு நாட்டின் அதிபர் அவரை எதிர்த்து உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட ஒரு கூட்ட மக்களை அடக்கிவிட்டாலும் பின்னர் அவர்களை மன்னித்து விடுதலை செய்துவிட்டார். ”ஏன் உங்கள் எதிரிகளை அழிக்காமல் அவர்களுக்கு மன்னிப்புக் கொடுத்தீர்கள்?” என்று கேட்டபோது அவர் சொன்னார். “அவர்களை என் நண்பர்களாக மாற்றிய போது என் எதிரிகளை அழித்துவிட்டேன் அல்லவா?“

கடவுளுக்குக் கீழ்ப்படியாதவர்களாக, கலகம் செய்தவர்களாக மனிதர்களாகிய நாம் இருந்தபோது நாம் கடவுளின் எதிரிகளாகத் தான் இருந்தோம். பரிசுத்தமான கடவுளை நெருங்கவும் முடியாத அளவுக்குப் பாவிகளாக இருந்தோம். ஆனால் ஒருவன் தன் சிநேகிதனுக்காகத் தன் உயிரைத் தருவதைவிட மேலான அன்பு இல்லை என்று சொன்ன இயேசு தனது உயிரை சிலுவையில் நமக்காகத் தந்து நம்மைத் தமது சிநேகிதராக மாற்றிவிட்டார். இனியும் நாம் கடவுளின் எதிரிகள் அல்ல. நாம் அவரது நண்பர்களாக இருப்பதால் இயேசு நமக்காகத் தனது வார்த்தைகளின் மூலம் நம்மை வழி நடத்துகிறார். கடவுளின் நண்பர்களாக மாறுவதற்காக நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும் தகுதியைப் பெற முடியாது. ஆனால் கடவுளாகவே நமது நண்பராக மாறும் போது நம் வேலை அவரை நண்பராக ஏற்றுக் கொள்வது தான். அதற்காகத் தான் கடவுள் இயேசுவாக இந்த உலகத்திற்கு வந்தார்.

இந்த நட்பானது நம் விருப்பப்படி நாம் நடப்பதற்காக அல்ல. மாறாக பரமபிதாவிடமிருந்து கேள்விப்பட்டு இயேசு நமக்குச் சொன்னவற்றை நாம் கடைப்பிடிப்பதற்காகவே கடவுளின் நண்பர்களாக நாம் மாற்றப்பட்டிருக்கிறோம். உயிரையே தந்த நண்பனுக்காக எதையும் செய்யலாம் அல்லவா?


சிந்தனை : உறவினர்கள் நமக்காக உயிரைத்தருவது கடமை. சம்பந்தமில்லாதவர் நமக்காக உயிரைத் தருவது நட்பு. நம்மைப் படைத்தவர் நமக்காக உயிரைத்தருவது தெய்வீக நட்பு.


ஜெபம் : இயேசுவே, உம்மை நண்பனாகப் பெற்ற பாக்கியத்திற்காக நன்றி. உம் சொற்படி நடக்க என்னை தகுதிப்படுத்தும். ஆமென்.


For Audio Tracks visit : DD-Tamil

For Older Posts visit : http://dropindeocean.blogspot.com/
--
http://micyell.com
micyellmedia@gmail.com
Mobile : 09994258788

No comments: