Saturday, May 12, 2012

May 13, அடப்பாவி

யோவான் 9:1-12


அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும்பொருட்டு இப்படிப் பிறந்தான். - யோவான் 9:3


உடல் குறைகள் தேவனுடைய கிரியைகளை வெளிப்படுத்துமா? ஜானி எரிக்சன் டாடா, தன் கழுத்துக்குக் கீழே எந்த அசைவும் இல்லாமல் இருந்தாலும் சக்கரநாற்காலியில் இருந்து கொண்டே பல ஊனமுற்றோருக்கு ஆறுதல் தருகிறார். ஊழியங்கள் செய்கிறார். தனது இளம் வயதில் ஏற்பட்ட சுகவீனம் சரியாகிவிடும் என்று ஜெபத்தில் பலகாலம் காத்திருந்தார். அதே காலத்தில் அவரது விசுவாசம் பலப்பட்டது. சுகம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் கடவுளின் செயல்கள் நம்மில் நடைபெறமுடியும் என்பதை அறிந்து ஊனமுற்றவர்களுக்காக ஊழியம் செய்யத்துவங்கினார். தன் வாயால் தூரிகையைக் கடித்துப் பிடித்துக் கொண்டு ஓவியங்கள் வரைந்து சம்பாதித்தார். இயேசுவைக் காணும் இரண்டாம் வருகையின் காலத்தில் என் கால்களால் நடனமாடுவேன் என்று ஜானி சொன்னது போல இந்த உலகத்தில் ஒருவேளை நமது குறைகள் சரியாகாமல் போனாலும் கூட நாம் மறுவாழ்வில் உயிர்த்தெழுந்து மறுரூபமாக்கப்படும் போது நமது உடலின் பலகீனங்களும் ஊனங்களும் மாறிப்போகும்.

எந்தக் குறைவுகளோ, பாடுகளோ நமது பாவத்தால் அல்லது நமது முன்னோர்களின் பாவத்தால் தான் நமக்கு வந்திருக்கிறது என்று நினைப்பது நமது வழக்கமாகும். ஆனால் நல்லவர்களும் அவர்களது சந்ததியும் பாடுபடுவதைப் பார்க்கும் போது நமக்கு பதில் கிடைப்பதில்லை. இந்த உலகத்தில் மனிதனின் கீழ்ப்படியாமையால் நுழைந்த தீமைகளும் பாவங்களும் நம் அனைவரையுமே தாக்குகின்றன என்பது தான் உண்மை. ஆனாலும் இந்த குறைகளின் காரணமாகத் தான் கடவுள் தரும் சுகம் என்னும் கிரியை நம்மில் வெளிப்படுகின்றது. அதைப் போலவே நமது குறைகளின் நடுவிலும் நாம் சந்தோஷமாக வாழ்வதுவும் தேவனுடைய கிரியை தான்.

சிந்தனை : நமக்கு ஏற்படும் குறைகள் கடவுள் நம்மில் ஒரு அற்புதத்தைச் செய்வதற்கான ஒரு வாய்ப்பு என்று நாம் நினைக்க வேண்டும்.


ஜெபம் : ஆண்டவரே எனது குறைகள் மற்றும் எனக்குத் தெரிந்தவர்களின் பாடுகள் உம்முடைய கிரியைகளை எங்கள் வாழ்வில் வெளிப்படுத்தும் வகையில் நாங்கள் வாழ்ந்து காட்ட உதவியருளும். ஆமென்.


For Audio Tracks visit : DD-Tamil

For Older Posts visit : http://dropindeocean.blogspot.com/
--
http://micyell.com
micyellmedia@gmail.com
Mobile : 09994258788


No comments: