Monday, May 21, 2012

May 22, ஓ’ சன்னா

யோவான் 12:12-19


குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு, அவருக்கு எதிர்கொண்டுபோகும்படி புறப்பட்டு: ஓசன்னா, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று ஆர்ப்பரித்தார்கள். - யோவான் 12:13


யூதர்கள் இயேசுவின் அற்புதங்களைக் கண்டு உணர்ச்சிவசப்பட்டு அவரை ராஜாவாக்கும்படி வந்தவர்கள். ஓசன்னா என்று அவரைச் சொன்ன அதே கூட்டம், அவரை சிலுவையில் அறையுங்கள் என்றும் கூச்சலிட்டது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. கும்பலாகச் சேர்ந்து என்ன செய்கிறோம் என்பதுவே தெரியாமல் அவர்கள் செய்த இந்த செயல்கள் யாவும் அவர்களது ஆன்மீக முதிர்ச்சியின்மையையே காட்டுகின்றது.

இந்தக் காலத்திலேயும் நாம் நமது வாயின் வார்த்தைகளால் இயேசுவைத் துதித்துக் கொண்டிருந்தாலும், மார்ட்டின் லூத்தர் சொல்வது போல இயேசுவை சிலுவையில் அடிக்கும் ஆணியையும் நமது பைகளிலே சுமந்து கொண்டே தான் திரிகிறோம். நமது தீய செயல்களால் நாம் இயேசுவை மீண்டும் சிலுவையில் அடிக்கிறோம் என்று வேதம் சொல்கிறது.

நாம் கூட்டத்தோடு சேர்ந்து குடும்பமும் நண்பர்களும் கிறிஸ்தவர்களாக இருப்பதால் நமது ஆன்மீக செயல்களைச் செய்கிறோமா அல்லது நமது தனிப்பட்ட ஆன்மீக மாற்றத்தால் இயேசுவுடன் உள்ள உறவினால் அவரைப் பின்பற்றுகிறோமா என்பதைத் தெளிவு படுத்திக் கொள்வது மிகவும் நல்லது. ஏனென்றால் இயேசு நியாயாதிபதியாக வரும் போது அவரவர் வாழ்க்கைக்கு அவரவர் தான் பொறுப்பு ஏற்க வேண்டும். நாம் மோட்சத்துக்கோ நரகத்துக்கோ செல்வது நமது வாழ்க்கை முறையில் தான் இருக்கிறதே ஒழிய நாம் சேர்ந்திருக்கும் கூட்டத்தைப் பொருத்தது அல்ல. பிறர் நமக்கு மகிழ்ச்சியான சூழ்நிலையைத் தரலாம் ஆனால் நித்திய வாழ்வைத் தர முடியாது. இயேசுவுடன் நாம் வைத்திருக்கும் உறவு தான் அவருடனான நித்திய வாழ்க்கைக்கு நம்மை அழைத்துச் செல்லும்.


சிந்தனை : ஓசன்னா சொன்ன கூட்டம் தான் சிலுவையில் அடியுங்கள் என்றும் சொன்னார்கள். ஆனால் அதிலும் சிலர் இயேசுவை ஏற்றுக் கொண்டதால் மாரனாதா என்று சொன்னார்கள்.


ஜெபம் : மீட்பரே, எனது செயல்கள் யாவும் உம்முடன் நான் கொண்டுள்ள உறவின் அடிப்படையில் நடைபெற உதவும். இதை கவனமாகப் பார்த்துக் கொள்ள என்னை உணர்த்தும். ஆமென்.


For Audio Tracks visit : DD-Tamil

For Older Posts visit : http://dropindeocean.blogspot.com/
--
http://micyell.com
micyellmedia@gmail.com
Mobile : 09994258788

No comments: