யோவான் 7:45-53
சேவகர் பிரதியுத்தரமாக: அந்த மனுஷன் பேசுகிறதுபோல ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை என்றார்கள். - யோவான் 7:46
லீ ஸ்ட்ரோபெல் என்ற ஒரு பெரும் எழுத்தாளர் சட்டம் படித்தவர், பிரபல பத்திரிகை நிருபராக இருந்தவர். கிட்டத்தட்ட கடவுள் இல்லை என்று சொல்லும் ஒரு நாத்திகனாகவே வாழ்ந்து வந்தார். தன் மனைவி கிறிஸ்தவ விசுவாசியாக மாறிய பின், கிறிஸ்தவத்தைப் பற்றி ஆராய்ந்து முடிவு செய்வதற்காக வேதாகமத்தையும் பல புத்தகங்களையும் ஆராய்ந்து படித்தார். பல கிறிஸ்தவ தலைவர்களை சந்தித்துப் பேசினார். முடிவில், இயேசுவும் வேதாகமமும் தான் உண்மையானது என்று கண்டு தனது கண்டுபிடிப்புகளைப் புத்தகமாக எழுதினார். கிறிஸ்தவத்தை சந்தேகித்து துவங்கப்பட்ட புத்தகம் இறுதியில் கிறிஸ்தவத்தை ஆதரிக்கும் தூண்களில் ஒன்றாக மாறியது.
இயேசுவை கைது செய்ய அனுப்பப்பட்ட காவலர்கள் இயேசுவின் போதனைகளைக் கேட்டு அவரை ஒன்றும் செய்யாமல் திரும்பி வந்துவிட்டார்கள். அவரைக் கைது செய்ய அனுப்பியவர்கள் இயேசுவின் போதனைகளைக் கேட்டாலும் அதில் குற்றம் கண்டுபிடிக்கும் நோக்கத்திலேயே இருந்ததால் அவர்களால் இயேசுவின் போதனைகளால் மாற்றம் பெற முடியவில்லை. ஆனால் திறந்த மனதுடன் இயேசுவின் போதனைகளைக் கேட்ட காவலர்களோ அதன் முக்கியத்துவத்தையும், சிறப்பையும் உணர்ந்து தங்கள் கடமையையும், தண்டனையைப் பற்றிய பயமும் இல்லாமல் திரும்பி வந்தனர்.
இயேசுவின் போதனைகளை நீங்கள் எந்த நோக்கத்துடன் கேட்கிறீர்கள்? உங்களுக்கு சாதகமானவற்றை மட்டும் எடுத்துக் கொள்வதற்காகவா, அல்லது உங்கள் தவறுகளைத் திருத்திக் கொள்ளவும், வாழ்க்கையை சிறப்பாக்கிக் கொள்ளவும், கடினமான போதனைகளையும் பின்பற்ற ஆயத்தமாக இருக்கின்றீர்களா?
சிந்தனை : நீங்கள் போதகரை எப்படிப் பார்க்கிறீர்களோ அதன் அடிப்படையில் தான் அவரது போதனைகளையும் ஏற்றுக் கொள்வீர்கள்.
ஜெபம் : கர்த்தாவே உம்மை ஆண்டவரும் போதகருமாக ஏற்றுக் கொண்ட நாங்கள் உங்கள் வசனங்களின்படி வாழ பெலன் தாரும். ஆமென்.
For Audio Tracks visit : DD-Tamil
micyellmedia@gmail.com
Mobile : 09994258788
No comments:
Post a Comment