Friday, May 25, 2012

May 26, வாய்ப்பந்தல்

யோவான் 13:18-38


பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே, நான் இப்பொழுது உமக்குப் பின்னே ஏன் வரக்கூடாது? உமக்காக என் ஜீவனையும் கொடுப்பேன் என்றான். - யோவான் 13:37


இந்த உலகத்தில் இரண்டு வகையான மக்கள் இருக்கிறார்களாம். ஒரு வகை பேசிக்கொண்டிருப்பவர்கள். அடுத்த வகை செயலில் காட்டுபவர்கள். பேசுபவர்கள் வாழ்வின் பிரச்சனைகளையும் வாய்ப்புக்களையும் பார்ப்பார்கள். அதைப் பார்த்து அவற்றைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பார்கள். ஆனால் பேசுதல் என்பது செயல்படுதல் ஆகாது. ஒரு நபர் எதையாவது செய்யாதவரைக்கும் பிரச்சனையைத் தீர்ப்பதற்கும், வாய்ப்புக்களை பெருக்குவதற்காகவும் செயல் எதுவும் நடைபெற்றிருக்காது. நோவாவின் தத்துவம் என்பது மழையை எதிர்பார்த்தால் மட்டும் போதாது, பேழையையும் கட்ட வேண்டும். நல்ல சமாரியன் நல்ல செயல்களைப் பற்றிப் படித்ததால் நல்லவனாகிவிடவில்லை. தேவையிலுள்ள மனிதனைப் பார்த்து அவனுக்கு செய்ய வேண்டிய உதவியைச் செய்தான்.

பேதுரு எப்போதுமே பேசுவதில் வல்லவராகவே இருந்திருக்கிறார். இயேசுவுக்காக தன் உயிரையும் கொடுப்பேன் என்று சொன்னவர், தன் உயிருக்குப் பயந்து அந்த இயேசுவையே தெரியாது என்று மூன்று தடவைகள் மறுதலித்துவிட்டார். அதன் பின்னர் தான் தனது பேச்சு மட்டும் போதாது என்பதை அவர் புரிந்திருப்பார். இயேசுவும் அதன் பின்னர் பெரும் பொறுப்புக்களை அவருக்குக் கொடுத்து பேசுவது மட்டுமல்லாமல் செயல்படுவதிலும் அவருக்குப் பயிற்சியையும் முதிர்ச்சியையும் கொடுத்தார். நமது வாழ்விலும் இயேசுவுக்காக நான் அதைச் சாதிப்பேன் இதைச் சாதிப்பேன் என்று பேசிக் கொண்டிருப்பதை விட சிறு சிறு செயல்களால் அவற்றைக் காட்டுவோம்.


சிந்தனை : பேசுபவர்களைவிட செயல்படுகிறவர்களே இயேசுவுக்குத் தேவை. வார்த்தைகளை இலவசமாகக் கொட்டிவிடலாம். வியர்வையைக் கொட்டுவது தான் நன்மையைக் கொண்டுவரும்.


ஜெபம் : வார்த்தையாகிய ஆண்டவரே, என் வார்த்தைகளைச் சுருக்கி செயலில் உம்மைப் பின்பற்றவும், உமக்காக சாதனைகளைச் செய்யவும் எனக்கு வழிகாட்டும். ஆமென்.


For Audio Tracks visit : DD-Tamil

For Older Posts visit : http://dropindeocean.blogspot.com/
--
http://micyell.com
micyellmedia@gmail.com
Mobile : 09994258788

No comments: