Thursday, June 21, 2012

June 22, பொய் பூச்சு

எரேமியா 6


சமாதானமில்லாதிருந்தும் சமாதானம் சமாதானம் என்று சொல்லி, என் ஜனத்தின் காயங்களை மேற்பூச்சாய்க் குணமாக்குகிறார்கள்.

- எரேமியா 6: 14


டோக்கியோவிலுள்ள மிருகக்காட்சி சாலை ஒன்றில் பாம்பு ஒன்றுக்கு குளிர்சாதனப்பெட்டியில் வைத்த எலிகளை உணவாகக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்த பாம்பு உணவைத் திரும்பிப் பார்க்காமல் இருந்ததால் உயிருள்ள இன்னொரு வகை எலியைக் கொடுத்தார்கள். ஆனால் பாம்பும் எலியும் நண்பர்களாகிவிட்டன. பின்னர் ஒன்றின் அருகில் ஒன்று தூங்குவதுவும், பாம்பின் முதுகின் மேல் எலி தூங்குவதுவும் வழக்கமான காட்சிகளாகிவிட்டன.

இது ஒரு விசித்திரமான நிகழ்ச்சியாகும். இதைப் போல எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் எதிர்பார்க்க முடியாது. அதைப் போலவே ஒரே இனத்தைச் சேர்ந்த பல விலங்குகள் ஒன்றை ஒன்று அடித்துச் சாப்பிடுவதைப் பற்றியும் நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் இஸ்ரவேலிலும் யூதாவிலும் ஆசாரியர்களும், தீர்க்கதரிசிகளும் மக்களை ஏமாற்றுவதாக கடவுள் குறைப்பட்டுக் கொள்கிறார். எதிரி நாட்டினரின் கைகளில் மனந்திரும்பாத யூத மக்களை கடவுள் அடிமைகளாக விட்டுவிடப் போகும் சூழ்நிலையில் சமாதானம் இல்லாத நிலையில் சமாதானம் இருக்கிறது என்று சொல்லி மக்களை திருப்திப்படுத்துகிறவர்களாக இருந்தார்கள்.

காயம் என்பது சுத்தமாகத் துடைக்கப்பட்டால் தான் சீக்கிரத்தில் குணமாகும். துடைக்கும் போது வலிக்கும் என்பது நமக்குத் தெரியும். நாம் வலிக்கிறது என்று சொல்வதால் மருத்துவர் நமது காயங்களின் மேல் மருந்துகளை மட்டுமே போட்டுவிட்டார் என்றால் புண்ணானது குணமாகாமல் மேலும் பிரச்சனைகளைத் தரலாம். கடவுளுக்கு எதிராகவும் பிறருக்கு துன்பம் தருகிறவர்களாகவும் வாழ்ந்தால் நமக்கு சமாதானம் இருக்காது. உண்மையான ஊழியர்கள் நமக்கு வருத்தம் ஏற்படும் வகையில் நமது தவறுகளைச் சுட்டிக் காட்டுகிறவர்களாக இருப்பார்கள்.

சிந்தனை : மேல் பூச்சு மருத்துவத்தில், உடனடி வலி இருக்காது. ஆனால் காலைத் துண்டிக்கும் நிலையும் ஏற்படலாம். வலியைத் தரும் மருத்துவமோ பின்னர் நல்ல சுகத்தைத் தரும்.

ஜெபம் : ஆண்டவரே என்னை நானே ஏமாற்றிக் கொண்டிருக்காதபடி உமது வார்த்தையும் ஆவியானவரும் எனது மனசாட்சியும், உமது ஊழியர்களுமாக எனது தவறுகளைச் சுட்டிக்காட்டும் போது என்னை மாற்றிக் கொள்ள உதவும். ஆமென்.


For Audio Tracks visit : DD-Tamil

For Older Posts visit : http://dropindeocean.blogspot.com/
--
http://micyell.com
micyellmedia@gmail.com
Mobile : 09994258788

No comments: