Monday, June 11, 2012

June 12, லேடீஸ் ஃபர்ஸ்ட்

யோவான் 20:10-18


மகதலேனா மரியாள் போய், தான் கர்த்தரைக் கண்டதையும், அவர் தன்னுடனே சொன்னவகளையும் சீஷருக்கு அறிவித்தாள்.

- யோவான் 20:18


இயேசு கிறிஸ்து மகதலேனா மரியாளுக்கு முதலாவதாகக் காட்சி கொடுத்ததற்கு ஏதாவது முக்கியமான காரணம் இருக்குமா? பெண் உரிமையைப் பற்றி சொல்வதற்காக இயேசு அப்படிச் செய்தாரா? மகதலேனா மரியாளுக்கு அதிகப் பாவம் மன்னிக்கப்பட்டதால் அதிக அன்பு இயேசுவிடம் வைத்திருந்ததால் இயேசு அவருக்கு முதலில் காட்சி கொடுத்தாரா? காரணம் எதுவாக இருந்தாலும் மகதலேனா மரியாள் தான் செய்ய வேண்டியதை உடனடியாகச் செய்தார்.

அதிகாலையில் இயேசுவின் உடலில் வாசனைப் பொருட்களை வைப்பதற்காகப் போனவர்கள் அவர் உயிர்த்தார் என்ற வாசனையான செய்தியுடன் வருகின்றார்கள். பயத்துடன் தங்களை அறைக்குள் பூட்டி வைத்துக்கொண்டிருந்தவர்களை, திறந்த கல்லறையைப் பற்றி சொல்லி எழுப்பி விட்டார். செத்துப் போயிருந்த அவர்களது விசுவாசத்தை உயிரோடு எழுந்த இயேசுவைப் பற்றிய செய்தியைச் சொல்லி துள்ளி எழச் செய்தார்.

கிறிஸ்தவத்தின் மையச் செய்தியே உயிரோடு இருக்கும் இயேசு தான். உங்கள் வாழ்வில் இயேசு உயிரோடு எழுந்தவராக இருக்கின்றாரா? அவர் உயிரோடு இருக்கிறார் என்பதைப் பிறரிடம் சொல்லும் ஆர்வம் நம்மிடம் இருக்கின்றதா? உயிரோடு எழுந்த இயேசுவை நம் வாழ்வில் கண்டு கொண்டால் நம்மால் அவரைப் பற்றிப் பிறரிடம் சொல்லாமல் இருக்க முடியாது. அதைத்தான் மகதலேனா மரியாள் துவங்கி வைத்தார். இன்றும் அது தொடருகின்றது. இயேசு மீண்டும் வரும் வரை இது தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.


சிந்தனை : கிறிஸ்தவம் என்பது பெரும்பாலும் ஒவ்வொருவரும் பிறருக்கு வாய்வழியாகச் சொல்லி அறிமுகப்படுத்துவதால் தான் அதிகம் வளருகின்றது.


ஜெபம் : கர்த்தாவே நீர் உயிரோடு இருக்கிறீர் என்று அனைவருக்கும் சொல்லும் ஆவலையும், பலத்தையும் எனக்குத் தாரும். ஆமென்.


For Audio Tracks visit : DD-Tamil

For Older Posts visit : http://dropindeocean.blogspot.com/
--
http://micyell.com
micyellmedia@gmail.com
Mobile : 09994258788

No comments: