யோவான் 20:19-23
... கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். - யோவான் 20:19
இயேசுவின் உயிர்த்து எழுந்த உடலானது மறுரூபமான சரீரம் என்று சொல்லப்படுகின்றது. இயேசு பூட்டப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்தார். மீனும் தேனும் உண்டார். அவரது காயங்களைக் காட்டித் தொட்டுப் பார்க்கும்படி சொன்னார். அவரைக் கண்டவர்கள் அவர் இயேசு தான் என்று கண்டுகொண்டார்கள். இவற்றையெல்லாம் பார்க்கும் போது நாமும் இந்த உலக வாழ்க்கையை விட்டு மறுரூபமான உடலைப் பெறும் போது இப்படித்தான் இருப்போம் என்று புரிந்து கொள்ள வழி இருக்கின்றது. கொரிந்தியருக்கு எழுதின முதலாம் நிருபத்தில் 15 ஆம் அதிகாரத்தில் இதைப்பற்றி விளக்கமாக பவுல் எழுதியிருக்கின்றார்.
நாம் இயேசுவை சந்திக்கும் போது அவர் இருக்கிறபடியே நாமும் அவரை தரிசிப்போம் என்று வேதாகமம் சொல்வதால் இயேசுவின் உயிர்த்தெழுதல் நமக்கும் நம்பிக்கையைக் கொடுக்கின்றது. எனவே நாம் மரணத்தைப் பற்றி பயப்பட வேண்டியதில்லை. மேலும் மரணமடைந்த பரிசுத்தவான்களைப் பற்றி நாம் துக்கப்பட வேண்டியதில்லை.
மரண பயத்தில் இருப்பவர்களுக்கும், எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கை இல்லாமல் கலங்கி இருக்கிறவர்களுக்கும் உயிர்த்தெழுந்த இயேசு உயிர்த்தெழுதலின் நம்பிக்கையைக் கொடுப்பதால் நமக்கு சமாதானம் உண்டாகியிருக்கின்றது. நாமும் நமது மோசமான சூழ்நிலைகளில் சமாதானமாக இருக்கும் போது மற்றவர்களுக்கு நமது நம்பிக்கையைப் பற்றிச் சொல்லும் வாய்ப்புக் கிடைக்கும். இயேசு உயிர்த்தெழுந்தது நமக்கும் இந்த உலகத்துக்கும் நம்பிக்கையையும் சமாதானத்தையும் கொடுப்பதற்காகத் தான். அதே சமாதானத்தை நாமும் இந்த உலகத்துக்கு அறிவிக்க வேண்டும்.
சிந்தனை : இயேசுவைப் போன்ற உயிர்த்தெழுதலின் உடல் நமக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கையே நமது உடலில் இருக்கும் குறைகள் பலகீனங்களைப் பற்றிய நமது கவலைகளை மாற்றிவிட வேண்டும்.
ஜெபம் : உயிர்த்தெழுதலும் உயிருமானவரே, பரலோகத்தில் உம்மைப் போல மாறும் ஆவலில் இந்த உலகத்தில் நான் உம்மைப் போல வாழ உதவி செய்யும். ஆமென்.
For Audio Tracks visit : DD-Tamil
micyellmedia@gmail.com
Mobile : 09994258788
No comments:
Post a Comment